You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா அதிபர் புதினின் மூளைக்குள் ஊடுருவ முயலும் மேற்கு உளவாளிகள் - அடுத்தது என்ன?
- எழுதியவர், ஜார்டன் கொரெரா
- பதவி, பாதுகாப்புத் துறை செய்தியாளர்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தானே உருவாக்கிக்கொண்ட ஒரு மூடிய உலகில் சிக்கிக்கொண்டுள்ளதாக மேற்கத்திய உளவாளிகள் நம்புகின்றனர். அது அவர்களுக்கு கவலை அளிக்கிறது.
பல ஆண்டுகளாக அவர்கள் புதினின் நோக்கங்களை நன்கு புரிந்து கொள்வதற்காக, அவரது மனதை படிக்க முயன்று வருகின்றனர். ரஷ்ய துருப்புக்கள் யுக்ரேனில் சிக்கியிருப்பதாகத் தோன்றும் இந்த சூழலில், அழுத்தத்தின் கீழ் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகியுள்ளது.
நெருக்கடியை மேலும் சிக்கலானதாக மாற்றுவதைத் தவிர்க்க அவரது மனநிலையைப் புரிந்துகொள்வது இன்றியமையாததாக இருக்கும். ரஷ்ய அதிபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ஊகங்கள் உள்ளன. ஆனால் அவர் உண்மையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, எந்த மாற்றுக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக, பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பது, பிற தலைவர்களுடனான அவரது சந்திப்புகளின் புகைப்படங்களில் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை புதின் சந்தித்தபோது, ஒரு நீண்ட மேசையின் எதிரெதிர் முனைகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர். போருக்கு முன்னதாக தனது தேசிய பாதுகாப்புக் குழுவுடன் புதின் நடத்திய சந்திப்பிலும் இது தெளிவாகத் தெரிந்தது.
புதினின் ஆரம்ப ராணுவத் திட்டம் ஒரு KGB (ரஷ்ய பாதுகாப்பு முகமை) அதிகாரியால் வடிவமைக்கப்பட்டது போல் இருந்தது என்று மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் விளக்குகிறார்.
இது ரகசியத்தை வலியுறுத்தும் நெருக்கமான "சதிகார கும்பலால்" உருவாக்கப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதன் விளைவு குழப்பத்தில் முடிந்தது. ரஷ்ய ராணுவ தளபதிகள் போருக்கு தயாராக இல்லை. சில வீரர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே எல்லையைத் தாண்டிச் சென்றனர்.
தன்னிச்சையாக முடிவெடுப்பவர்
ரஷ்யாவின் தலைமை வட்டத்திற்குள் இருந்த பலரை விட அந்த திட்டங்களைப் பற்றி, பெயர் குறிப்பிடமுடியாத வாட்டாரங்கள் மூலமாக மேற்கத்திய உளவாளிகள் அதிகம் அறிந்திருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறார்கள். அதாவது ரஷ்யாவின் தலைவர் அடுத்து என்ன செய்வார் என்பதைப் புரிந்துகொள்வது. அது அத்தனை எளிதானது அல்ல.
"ரஷ்ய அதிபர் மாளிகையின் அடுத்த நகர்வுகளைப் புரிந்துகொள்வதில் உள்ள சவால் என்னவென்றால், புதின் தன்னிச்சையாக முடிவெடுப்பவர்" என்று அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பான CIA-வின் ரஷ்ய நடவடிக்கைகள் கண்காணிப்பிற்கான முன்னாள் தலைவர் ஜான் ஃசைபர் விளக்குகிறார். புதினின் கருத்துக்கள் அடிக்கடி பகிரங்க அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டாலும், அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை அறிவது கடினமான சவாலாகும்.
"ரஷ்யாவை போன்ற கட்டுப்பாடுகள் நிலவும் ஒரு நாட்டில், புதினுக்கு நெருக்கமானவர்களுக்கே என்ன நடக்கிறது என்று தெரியாத சூழலில், அவருடைய மனதிற்குள் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளக்கூடிய நல்ல புலனாய்வு அமைப்பு இருப்பது மிகவும் கடினம்," என்று வெளிநாடுகளுக்கான பிரிட்டனின் புலனாய்வு அமைப்பு எம்ஐ6ன் முன்னாள் தலைவர் சர் ஜான் சாவர்ஸ், பிபிசியிடம் கூறினார்.
புதின் தனது சொந்த குமிழியில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மிகக் குறைவான வெளிப்புறத் தகவல் மட்டுமே இங்கு செல்கிறது. அவர் நினைப்பதற்கு எதிரானவை இதற்குள் ஊடுருவுவதில்லை என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே செவிசாய்க்கிறார் மற்ற எல்லாவற்றையும் தடுக்கிறார் என்ற தனது சொந்த பிரசாரத்திற்கு புதின் பலியாகியுள்ளார். இது அவருக்கு உலகத்தைப் பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையை அளிக்கிறது," என்கிறார் உளவியல் பேராசிரியரும், The Psychology of Spies and Spying என்ற வரவிருக்கும் புத்தகத்தின் இணை ஆசிரியருமான அட்ரியன் ஃபர்ன்ஹாம்.
"இதில் உள்ள ஆபத்து "குழு சிந்தனை" என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒவ்வொருவரும் அவரது கருத்தை ஆமோதிக்கிறார்கள். அவர் குழு சிந்தனையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்தக் குழு யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று பேராசிரியர் ஃபர்ன்ஹாம் கூறுகிறார்.
புதின் ஆலோசனை நடத்தும் வட்டம் பெரியதாக இருந்ததில்லை. ஆனால் யுக்ரேன் மீது படையெடுப்பதற்கான முடிவு வந்தபோது, புதினின் மனநிலையைப் பகிர்ந்து கொள்ளும் "உண்மையான விசுவாசிகள்" என்ற ஒரு சில நபர்களாக அது சுருக்கப்பட்டது என்று மேற்கத்திய புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
படையெடுப்பிற்கு சற்று முன்பு நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் அவர் தனது வெளிநாட்டு புலனாய்வு சேவையின் தலைவரை பகிரங்கமாக கண்டித்தபோது அவரது உள் வட்டம் எவ்வளவு சிறியதாகிவிட்டது என்ற உணர்வு வலியுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை அந்த அதிகாரியை அவமானப்படுத்தியதாக தோன்றியது. சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் (புதின்) ஆற்றிய உரையும், யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளின் மீது கோபம் மற்றும் வெறியும் கொண்ட ஒரு நபரை வெளிப்படுத்தியது.
1990 களில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டதாகக்கருதும் அவமானத்தை துடைக்கும் ஆசையாலும், ரஷ்யாவை வீழ்த்தி அவரை அதிகாரத்தில் இருந்து விரட்ட மேற்குலகம் உறுதியாக உள்ளது என்ற அவரது நம்பிக்கையாலும் ரஷ்ய தலைவர் உந்தப்பட்டதாக அவரை கவனித்தவர்கள் கூறுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்னல் கதாஃபி கொல்லப்பட்ட வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்ப்பார் என்று புதினை சந்தித்த ஒருவர் நினைவு கூர்ந்தார்.
சிஐஏவின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸிடம் புதினின் மனநிலையை மதிப்பிடும்படி கேட்டபோது, "அவர் பல ஆண்டுகளாக மனக்குறை மற்றும் லட்சியம் ஆகியவற்றால் பற்றி எரியக்கூடிய கலவையில் சிக்கியுள்ளார். அவரது எண்ணங்கள் மேலும் இறுக்கமாகிவிட்டன. மற்றவர்களின் கண்ணோட்டங்களில் இருந்து தன்னை,"மிகவும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்," என்று கூறினார்.
ரஷ்ய அதிபருக்கு மனநிலை சரியில்லையா? மேற்குலகில் பலர் கேட்கும் கேள்வி இது. யுக்ரேன் மீது படையெடுப்பது போன்ற முடிவை நம்மால் புரிந்து கொள்ள முடியாததால், அதைச் செய்த நபரை "பைத்தியம்" என்று கற்பனை செய்வது தவறு என்று இந்தத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு உளவியலாளர், கூறினார்.
சிஐஏவின் குழு ஒன்று,வெளிநாட்டு தலைவர்கள் மீது "தலைமைப் பகுப்பாய்வை" மேற்கொள்கிறது. ஹிட்லரை புரிந்துகொள்ள செய்த முயற்சிகளில் இருந்து இந்த நடைமுறை தொடர்கிறது. அவர்களின் பின்னணி, உறவுகள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை குழு ஆராய்கிறது. ரகசிய நுண்ணறிவை பெறுகிறது.
மற்றொரு ஆதாரம், பிற தலைவர்கள் போன்ற நேரடி தொடர்பு கொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள். 2014 ஆம் ஆண்டில், அப்போதைய ஜெர்மன் சான்செலர் ஏங்கலா மெர்க்கல் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், புதின் "வேறொரு உலகில்" வாழ்கிறார் என்று கூறினார். இதற்கிடையில், அதிபர் மக்ரோன் சமீபத்தில் புதினுடன் அமர்ந்திருந்தபோது, முந்தைய சந்திப்புகளுடன் ஒப்பிடும்போது "மிகவும் தனிமையாகவும், பிடிவாதத்துடனும்" ரஷ்ய தலைவர் காணப்பட்டார் என்று கூறப்பட்டது.
ஏதாவது மாறியுள்ளதா? சாத்தியமான உடல்நலக்குறைவு அல்லது மருந்துகளின் தாக்கம் பற்றி சில உறுதி செய்யப்படாத ஊகங்கள் நிலவுகின்றன. ரஷ்யாவைப் பாதுகாப்பதில் அல்லது அதன் மகத்துவத்தை மீட்டெடுப்பதில் தனது பொறுப்பை நிறைவேற்ற நேரம் குறைந்து வருவதான உணர்வு போன்ற உளவியல் காரணிகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கோவிட் தொற்றுநோய் காலகட்டத்தில் ரஷ்ய தலைவர் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இதுவும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
"புதின் மனநோயாளியாக இருக்க வாய்ப்பில்லை. அவர் மாறவும் இல்லை. இருப்பினும் அவர் அவசரத்தில் இருக்கிறார். மேலும் சமீபத்திய ஆண்டுகளில் தன்னை மேலும் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்," என்று முன்னாள் அமெரிக்க அரசு மருத்துவரும் ராஜீய அதிகாரியும், அமெரிக்கா-சீனா உறவுகளுக்கான ஜார்ஜ் எச்டபிள்யூ புஷ் அறக்கட்டளையின் தற்போதைய மூத்த ஆராய்ச்சியாளருமான(சீனியர் ஃபெலோ) கென் டெக்லேவா குறிப்பிட்டார்..
ஆனால் இப்போதைய கவலை என்னவென்றால், புதினின் நெருங்கிய வட்டத்தில் இருந்து நம்பகமான தகவல்கள் கிடைப்பதில்லை. படையெடுப்பிற்கு முன், அவர் கேட்க விரும்பாத எதையும் அவரிடம் கூற அவரது புலனாய்வுத்துறை தயக்கம் காட்டியிருக்கலாம். படையெடுப்பு எப்படி இருக்கும், போருக்கு முன் ரஷ்ய வீரர்கள் எப்படி பார்க்கப்படுவார்கள் என்பது குறித்து சிறப்பான மதிப்பீடுகளை வழங்கியிருக்கலாம்.
தனது சொந்த துருப்புக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய நுண்ணறிவு, மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு இருக்கும் அளவிற்குக்கூட புதினுக்கு இப்போதும் இல்லாமல் இருக்கக்கூடும் என்று ஒரு மேற்கத்திய அதிகாரி குறிப்பிட்டார். ரஷ்யா மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது அவர் எப்படி நடந்துகொள்வார் என்பது பற்றிய கவலையை இது ஏற்படுத்துகிறது.
'பைத்தியக்காரன்' கோட்பாடு
தான் சிறுவனாக இருந்தபோது எலியைத் துரத்திய ஒரு கதையை புதினே சொல்கிறார். அதை ஒரு மூலைக்கு தள்ளியபோது, எலி அவரைத் தாக்க வந்தது. இளம் விளாதிமிர் தப்பி ஓடிவேண்டிய சூழல் ஏற்பட்டது. தான் ஒரு மூலைக்கு தள்ளப்பட்டதாக இப்போது புதின் நினைத்தால் என்ன ஆகும் என்று மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் கேட்கிறார்கள்.
" அவர் அதிக கொடூரமாக தனது தாக்குதலை இரட்டிப்பாக்குவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி கூறினார். அவர் ரசாயன ஆயுதங்கள் அல்லது போர்தந்திர அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடும் என்ற கவலைகள் உள்ளன.
"பொத்தானை அழுத்தும் விதமாக, நம்பமுடியாத அளவிற்கு அவர் ஏதோவொரு செயலைச் செய்துவிடுவாரா என்பதுதான் கவலை" என்கிறார் அட்ரியன் ஃபர்ன்ஹாம்.
தான் ஆபத்தானவர் அல்லது சிந்தித்து செயல்படாதவர் என்ற உணர்வை புதினே வெளிப்படுத்தலாம். இது நன்கு அறியப்பட்ட தந்திரம் (பெரும்பாலும் "பைத்தியக்காரன்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது). இதில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒருவர் தனது எதிரியை பின்வாங்கச்செய்ய முயற்சிக்கிறார். எல்லோரும் அழிந்து போகும் சாத்தியம் இருந்தபோதிலும் அவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு தான் செல்லக்கூடும் என்ற உணர்வை அவர் எதிராளிக்கு ஏற்படுத்த நினைக்கிறார்.
புதினின் நோக்கங்களையும் மனநிலையையும் புரிந்துகொள்வது மேற்கத்திய உளவாளிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆபத்தான எதிர்வினையைத் தூண்டாமல் எவ்வளவு தூரம் அவரை கொண்டுசெல்ல முடியும் என்பதைக் கண்டுபிடிக்க, அவரது பதிலைக் கணிப்பது முக்கியமானது.
"புதினின் சுயகருத்தானது, தோல்வியையோ பலவீனத்தையோ அனுமதிக்காது. அவர் இதுபோன்ற விஷயங்களை வெறுக்கிறார்" என்கிறார் கென் டெக்லேவா. "ஒரு மூலைக்கு தள்ளப்பட்ட, வலுவிழந்த புதின் மிகவும் ஆபத்தானவர். சில சமயங்களில், கரடியை கூண்டிற்கு வெளியே ஓடவிட்டு காட்டிற்குள் செல்ல அனுமதிப்பது நல்லது." என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்