உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் - எதற்கு? மற்றும் பிற செய்திகள்

வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

அரிதான ஒரு மரபணு நிலையால், வெள்ளை நிறத்தில் இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இதன் குடும்பத்தை வேட்டையாடுபவர்கள் கொன்றனர்.

இதே வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் ஏழு மாத குட்டியும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எழுந்த அச்சம் காரணமாக ஜிபிஎஸ் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கென்யாவில் 2016 மார்ச்சில்தான் முதன்முதலில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கள் காணப்பட்டன.

ஆப்ரிக்க நாடுகளில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், மாமிசம் மற்றும் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.

தப்லீக் ஜமாத் வழக்கு: 'உங்கள் பதிலில் திருப்தி இல்லை'

தப்லீக் ஜமாத் இஸ்லாமிய அமைப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு அளித்துள்ள பதில் தங்களுக்கு திருப்தியாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யவும் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

நரேந்திர மோதி பிரிக்ஸ் உரை

தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தீவிரவாதம்தான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' (BRICS) கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த உச்சி மாநாடு தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் வகையில் இல்லாமல், இணையம் வாயிலாக மெய்நிகர் மாநாடாக நடத்தப்பட்டது.

ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்படி இரு கட்சியினரும் சொல்லிய பின்பும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயல் எனச் சொல்லி இருக்கிறார்.

டிரம்ப் நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால் பல மக்கள் இறக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் ஜோ பைடன்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும் , சமூக வலைதளத்தில் "இது விளையாட்டு அல்ல" எனச் சொல்லி இருக்கிறார்.

பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை போலீஸ்

இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: