You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீள்கிறது; மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை அறிவிப்பு
மலேசியாவில் ஜூன் 10ஆம் தேதி முதற்கொண்டு, 'மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை' அமலுக்கு வருவதாகப் பிரதமர் மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
இன்று நண்பகலில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் குறிப்பிட்டார்.
இதுவரை அமலில் உள்ள (நிபந்தனைகளுடன் கூடிய) நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 9ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பிரதமரின் இந்த அறிவிப்பு மலேசிய குடிமக்களுக்கும், இங்கு பணியாற்றும், வசிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கும் நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
இதையடுத்து அன்றாட நடவடிக்கைகளில் சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள மலேசிய பிரதமர், இனி மாநிலங்களுக்கிடையேயும் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தார்.
மேலும் சமயம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு கட்டமாக அனுமதி அளிக்கப்படும் என்றார் பிரதமர் மொகிதீன் யாசின்.
அதேவேளையில், இரவு விடுதிகள், கேளிக்கை மையங்கள், கரோக்கே மையங்கள் ஆகியவற்றை திறக்க மலேசிய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மலேசியாவில் 'கோவிட் 19' நோய்த்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் நிலையில், நாட்டின் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனப் பிரதமர் மொகிதின் தெளிவுபடுத்தி உள்ளார்.
"மலேசியாவில் தற்போது அன்றாடம் பதிவாகும் நோய்த்தொற்று சம்பவங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டவை. மேலும், சட்டவிரோத, உரிய ஆவணங்களற்ற குடியேறிகளும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே மலேசியர்களுக்கு, மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருவது மக்களுக்கு சிறந்த செய்தியாக இருக்கும். எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மக்கள் ஒழுங்குடன் செயல்படும் பட்சத்தில் நாட்டில் இயல்புநிலை திரும்பும்.
அதன் பின்னர் கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நிலை நீடிக்கும். ஒருவேளை அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறினாலோ, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட புதிய சுகாதார வழக்கங்களைக் கடைபிடிக்க தவறினாலோ மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பிக்க அரசு தயங்காது," எனவும் பிரதமர் மொகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்து வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக அமலில் இருந்த அந்த ஆணை ஜூன் 9ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், மலேசியாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,322 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. பலி எண்ணிக்கை 117ஆக நீடிக்கிறது. இதுவரை 80.2 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தற்போது 1,531 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எட்டு நோயாளிகள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் 6 பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படவில்லை என மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நிலவரம்
சிங்கப்பூரில் முடக்க நிலை தளர்த்தல் நடவடிக்கைகளின் முதற்கட்டம் கடந்த 2ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், நாட்டின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்து அமைச்சர்கள் பலரும் மக்கள் மத்தியில் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் மூலம் உரையாற்ற உள்ளனர்.
அச்சமயம் எதிர்கால நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ள அரசின் திட்டங்கள் குறித்து விவரிக்க உள்ளனர்.
முதற்கட்டமாக பிரதமர் லீ சியன் லூங்கு இன்று உரையாற்றுகிறார். அடுத்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மற்றும் அமைச்சர்களின் உரை இடம்பெறும். தொடர்ச்சியாக இம்மாதம் 28ஆம் தேதி வரை உரைகள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமக்களும், வெளிநாட்டு ஊழியர்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பாக வாழும் வகையில், நீண்டகாலத்திற்கு கோவிட்-19 உடன் வாழ செய்ய வேண்டியது என்ன, மாறிவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு இடையே உலக அரங்கில் சிங்கப்பூர் தனது நிலையைக் கட்டிக்காப்பது எப்படி என்பது குறித்துப் பிரதமர் லீயும் அமைச்சர்களும் விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனர்.
இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வலுவானவர்களாக உருவெடுக்க இணைந்து பணியாற்றுவது எப்படி என்பன போன்ற அம்சங்கள் குறித்தும் தலைவர்கள் பேசுவர் என சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்மூலம் நோய்வாய்ப்பட்டோர் எண்ணிக்கை 3,7910 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டோரில் 14 பேருக்கு சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர்களில் 10 பேர் சிங்கப்பூரர்கள் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானச் சேவையை மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் சிங்கப்பூரில் முடக்க நிலை தீவிரமடைந்தபோது அந்நிறுவனத்தின் 138 விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் முடக்கநிலையின் முதற்கட்டத் தளர்வு கடந்த 2ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்படாத விமானங்களின் எண்ணிக்க 94 ஆக குறைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் நிறுவனங்களுக்கு மொத்தம் 145 விமானங்கள் உள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: