"அமெரிக்க பொருளாதாரம் 30 சதவீதம் வரை சரிவை சந்திக்கும்" - மத்திய வங்கியின் தலைவர் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2021ஆம் ஆண்டுவரை மீட்க இயலாது என அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.

மேலும் பெருந்தொற்று சூழலில் அமெரிக்க பொருளாதாரம் எளிதாக 20-30 சதவீதம் வரை சரிவை சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவரான ஜெரோம் பவல் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களையும், மக்களுக்கான நிவாரணத் திட்டங்களையும் அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மார்ச் மாதத்தில் தொடங்கி இதுவரை 36 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாதவர்களுக்கான சலுகைகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.

என்ன சொன்னார் பவல்?

"இது ஒரு கடினமான காலம், மக்கள் அனுபவித்து கொண்டிருக்கும் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது,"

"பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும்,"

"கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக தாக்கவில்லை என்றால் இந்த வருடத்தின் பிற்பாதியில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள தொடங்கும்." என அவர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பலரும் எதிர்பார்த்திருந்த விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்களுக்கு நோய் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னர் தெரிவித்திருந்தார். அதனால் சுகாதாரத்துறை வெளியிடும் செய்திக்குறிப்பில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக, அதிகரித்துள்ள தொற்று எண்ணிக்கை என தனியாக ஒரு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக தொற்று ஏற்பட்ட 639 நபர்களில், 81 நபர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தவிர உலகை அச்சுறுத்தும் 5 விஷயங்கள்

கொரோனா உலகத்தொற்றைத் தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பிற ஐந்து முக்கிய உலக விஷயங்களின் தொகுப்பு இது.கடந்த சில மாதங்களாக கிட்டதட்ட நம் அனைவரின் கவனத்தையும் கோவிட் 19 ஈர்த்துக்கொண்டது.

எனவே இந்த காலத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பெரிதாக ஊடகங்களில் இடம்பெறும் சூழல் இல்லாமல் போனது.

ஒரு புதிய அணு ஆயுத போட்டி

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நடைமுறையில் உள்ள நியூ ஸ்டார்ட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைகிறது.

இந்த ஒப்பந்தம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை பெருக்கிக்கொள்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

உலக அமைதிக்கு முக்கியமான, இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான காலம் அவகாசம் குறைந்துகொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் இல்லாமல் போனால் கட்டுப்பாடில்லாத ஒரு புதிய அணு ஆயுதப் போட்டி நடக்கக்கூடும்.

`இலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை`: இலங்கை அரசு பதில்

பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'த கார்டியன்' பத்திரிகையில் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள 'உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா, மேன் ஃப்ரைடே?' என்ற சுற்றுலா வினா விடைப் போட்டி ("Travel quiz: do you know your islands, Man Friday?") மூலமாகவே இந்த சர்ச்சை வெடித்துள்ளது

இந்த போட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட வினா ஒன்றினால் இந்த சர்ச்சை தோன்றியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த போட்டியின் இரண்டாவது வினாவானது, ஈழம் என்பது எந்த பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீக பெயர்? என வினவப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான தெரிவு செய்யப்பட வேண்டிய விடைகளில் இலங்கையும் இடம் பெற்றுள்ளதே இந்த சர்ச்சைக்கான காரணம் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: