You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் மற்றும் பிற செய்திகள்
தென் கிழக்கு ஆசியாவில் ஆதிகால மனிதர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹோமோ எரக்டெஸ் எனப்படும் ஆதிகால மனிதர்கள் சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி வாழ்ந்து வந்த மனித இனம். முதன்முதலில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த மனித இனம் அவர்கள்.
இந்தோனீசிய தீவான ஜாவாவில், அவர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தற்கால மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஆதிகால மனிதர்களும் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார்கள்.
ஆப்பிரிக்காவில் ஆதிகால மனிதர்கள் இனம் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. சீனாவில் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன். ஆனால் இந்தோனீசிய ஜாவா தீவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை அவர்களால் எப்படி வாழ முடிந்தது என்ற கேள்விக்கும் பதில் உண்டு. ஜாவா மற்ற இடங்களை போல அல்லாமல் தனியே எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்ததால் ஆதிகால மனிதர்கள் இங்கு அதிக காலம் வரை வாழ்ந்துள்ளனர்
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்புமா?
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிறகு, அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் டிரம்ப் மூன்றாவது நபராக விளங்குகிறார்.
இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறினாலும், செனட் சபையிலும் நிறைவேறினால்தான் அவரது பதவி பறிபோகும்.
புதன்கிழமை அன்று ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுக் கட்சி தலைவருக்கு எதிராக உள்ள இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்பயா வழக்கு: அக்ஷய் குமாரின் தூக்கு தண்டனை உறுதி
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது புதன்கிழமை விசாரித்து தீர்ப்பை வழங்கியது.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்துள்ளதால் தாங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டி ஒரு வார கால நோட்டீஸ் அளிக்குமாறு நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது .
'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது'
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Ind vs WI: குல்தீப் யாதவ் ஹாட்ரிக்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் சமநிலையில் உள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 33வது ஓவரில் ஷாய் ஹோப், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார்.
இது சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு இரண்டாவது ஹாட்ரிக் ஆகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: