You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம்? மற்றும் பிற செய்திகள்
அமேசான் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி என்றும், வரும் ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சனையாக பேசப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
தனது அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால், இதனை ஜி7 மாநாட்டில் ஆலோசிக்க வேண்டும் என்று கூறுவது பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சீனரோ கூறியுள்ளார். பிரேசில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
பிரேசில் முழுவதும், குறிப்பாக அமேசான் பகுதிகளில், காட்டுத்தீ பற்றுவது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
போல்சீனரோவின் அரசாங்கம் காடுகளை அழிக்க ஊக்குவிப்பதே இதற்கு காரணம் என்று சூழலியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிரேசில் முழுவதும் இந்தாண்டு மட்டும், 75,000 முறை பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 2018ல் 40,000 முறை ஏற்பட்டதை விட இது மிகவும் அதிகமாகும்.
தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்
வேலூரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாலத்திலிருந்து ஆற்றுக்குள் இறக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்கென அரை ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய அங்குள்ள ஆற்றங்கரையில் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
ப. சிதம்பரம் - ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி
புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்று, வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளது.
சிதம்பரம் தனது குடும்பத்தினரையும், வழக்கறிஞரையும் தினமும் 30 நிமிடம் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு நேற்று மதியம் 3.15 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார்.
'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்'
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும், சென்னை நகரத்தில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை நகரத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் துணை ஆணையராக பொறுப்பேற்ற ஜெயலட்சுமி இணைய உலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க என்ன வழி என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசினார்.
நீங்கள் ஒருமுறை பகிரும் படம் பலரிடம் செல்லும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து செயல்படவேண்டும். கடந்த மூன்று மாதங்களில் நான்கு டிஜிட்டல் ஸ்டாக்கிங் வழக்குகளை பதிந்துள்ளோம்.
இந்த விவகாரங்களில் காவல்துறையை அணுகி, பாதுகாப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களிடம் ஏற்படுத்திவருகிறோம் என்று அவர் கூறினார்.
அமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன?
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார்.
முன்னதாக ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது.
அதை தொடர்ந்து, ஆகஸ்டு 21ஆம் தேதி, இரவு 9 மணிக்கு சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்பு வரை, 27 மணி நேரங்களுக்கு அவர் எங்கு இருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டின், ஜூலை 25ஆம் தேதி நடந்தது.
மேலும் படிக்க: அமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்