You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளது மற்றும் பிற செய்திகள்
வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் யொன்ஹாப் செய்தி முகமையில் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த ஏவுகணை 155 மைல்களுக்கு சென்று, 30 கிமீ உயரத்துக்கு பறந்து ஜப்பான் கடலுக்குள் விழுந்தது.
இதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.
இதுவரை செலுத்தியதில் இது புதிய வகையான ஏவுகணை என்று கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் குறைந்த தூரம் செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா.
வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் அந்த சிறிது தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன.
`நேரடியான மற்றும் வலுவான அச்சுறுத்தல்களை` ஒழிக்க வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கிம் ஜாங்-உன் தெரிவித்திருந்தார்.
அந்த ஏவுகணை சுமார் 428 மைல்கள் பயணித்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டாக ராணுவ நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்ததில் கோபமடைந்த வட கொரியா அந்த சோதனையை நடத்தியது.
அந்த பிராந்தியத்தில் இருக்கும் பதற்றத்தை குறைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வட கொரியா நிறுத்த வேண்டும் என தென் கொரியா தெரிவித்திருந்தது.
முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: பாலின நீதிக்கு நன்னாளா, கருப்பு நாளா?
முத்தலாக் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை ) மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. 11 எம்.பி.க்களைக் கொண்டுள்ள அதிமுக எதிர்த்து கருத்துத் தெரிவித்தது. ஆனால் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
இந்நிலையில் 99-84 என்ற வாக்கு கணக்கில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இந்த மசோதாவை எப்படிப் பார்க்கிறார் என்று திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பதர் சயீத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.
"பாலின நீதிக்கு இது ஒரு நன்னாள்" என்றார் அந்த முன்னாள் அதிமுக பெண் அரசியல்வாதி.
"ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முத்தலாக் செல்லாததாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் வரம்புக்குள் முத்தலாக்கை கொண்டுவரும் இந்த சட்டம் தேவையற்றது" என்று விமர்சகர்கள் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு,
"அதன் பிறகும், முத்தலாக் சொல்கிறவர்களை அப்படிச் செய்யாமல் தடுப்பதற்கான தடுப்பரணாக இந்த சட்டம் பயன்படும். முதல் மனைவிக்கு முத்தலாக் சொல்லாவிட்டாலும் அவரைப் பிரிந்து சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வழி இருக்கிறதே," என்றார் பதர் சயீத்.
ஆனால், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இது அரசமைப்புச் சட்டத்துக்கு, அது வழங்குகிற உரிமைகளுக்கு கருப்பு நாள் என்கிறார்.
எட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்: வசூலைப் பாதிக்காதா?
இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை.
இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு - 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, வளையல், நுங்கம்பாக்கம், தொரட்டி, ரீல், மயூரன் ஆகிய படங்கள் வெளியாவதாக திங்கள் கிழமையன்று நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், செவ்வாய்க்கிழமையன்று இதிலிருந்து சில திரைப்படங்கள் பின்வாங்கிவிட கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு - 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, மயூரன், தொரட்டி ஆகிய படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது.
இதில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், ஜோதிகா நடித்த ஜாக்பாட், கிருஷ்ணா நடித்த கழுகு - 2 ஆகியவை சற்று பெரிய பட்ஜெட் படங்கள். இது தவிர, ஹாலிவுட் படமான Fast and Furious: Hobbs & Shaw படத்தின் மொழியாக்கமும் வெளியாகிறது.
இதனால், பல படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது தயாரிப்பாளர்களின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
விரிவாக படிக்க:ஒரே நாளில் எட்டு திரைப்படங்கள் ரிலீஸ்: வசூலைப் பாதிக்காதா?
'காஃபி டே' நிறுவனர் சித்தார்த்தா திடீர் மாயம்
மங்களூரில் காணாமல் போன கஃபே காஃபி டேயின் நிறுவனரை தேடும் பணி நடைபெற்று வருவதாக கர்நாடக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல இந்திய உணவு செயின் நிறுவனமான கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மங்களூர் புறநகர் பகுதியில் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நேத்ராவதி ஆற்றுக்கு அருகே ஓரிடத்தில் காரை நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
''காரில் இருந்து இறங்கிய சித்தார்த் ஓட்டுநரிடம் அவர் அங்கிருந்து செல்லலாம் என்றும் தான் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவதாகவும் கூறினார்'' என்று பிபிசியிடம் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் நேரமாகியும் சித்தார்த் வராததால் அச்சமடைந்த ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
முக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா?
இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நமது முன்னோர்கள் ஒரு மரபணுவை இழந்துள்ளனர்.
அவர்களிடம் மரபணு திரிபு ஏற்பட்டு, சிஎம்ஏஹெச் என்கிற மரபணு செயலிழந்துள்ளது. இந்த மரபணு திரிபு பரிணாம சங்கிலி தொடரில் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மனித இனம் உருவாவது வரை கடந்து வந்துள்ளது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சன் டியாகோ மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு, இந்த மரபணு திரிபு ஏற்பட்டதன் காரணமாகதான் மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது.
உலக அளவில் பலரும் (70 வயதுக்குள் உள்ளவர்கள்) முன்னரே இறந்துவிட இதய நோய்கள் காணமாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்