You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2003க்கு பிறகு முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றும் அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்
சுமார் 16 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்,
விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள ஐந்து கைதிகளும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து கைதிகளுக்காக மரண தண்டனை முறையே வரும் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது.
"இருவேறு கட்சிகளின் நிர்வாகத்தின் போதும், மிகவும் மோசமான குற்றவாளிகளுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது" என்று வில்லியம் பார் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா?
நாடு முழுவதும் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடுகிறார் ஆற்றல் துறைசார் வல்லுநரான வந்தனா கோம்பர்.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 சதவீதம் மின்சார கார்களை கொண்ட நாடாக மாற்றுவதற்கு தான் முயற்சித்து வருவதாக கூறி நாட்டின் வாகன உற்பத்தித்துறை மட்டுமின்றி உலக நாடுகளையும் கடந்த 2017ஆம் ஆண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.
"உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ, நான் இதை செயல்படுத்தபோகிறேன். நான் உங்களிடம் கோரிக்கை விடுக்கப் போவதில்லை. நான் மொத்தமாக மாற்றிவிடுவேன்" என்று துறைசார் கருத்தரங்கு ஒன்றில் அவர் அப்போது பேசினார்.
விரிவாக படிக்க:மின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா?
"இலங்கைத் தமிழர்களை சிங்களத் திரைப்படங்கள் அடிமைகளாக சித்தரித்தன"
இலங்கையிலுள்ள தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக மாற்றியது சிங்களத் திரைப்படங்கள் என சிங்கள தரப்பினரே இன்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
1970 தொடக்கம் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் வெளியான சிங்களத் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்கள் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் தற்போது தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நட்பு ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
"ரூட்டு தல என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்"
பேருந்தில் பயணிக்கும் சென்னைக் கல்லூரி மாணவர்களில் 'ரூட்டு தல' என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர்.
ஆங்கிலத்தில் சரளமாக எழுதுவது எப்படி?
உலகில் இதுவரை அதிகம் படிக்கப்படும் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகம் முழுக்க 1.5 பில்லியன் பேர் ஆங்கிலம் கற்கிறார்கள்- 2020 ஆம் ஆண்டு வாக்கில் இது 2 பில்லியன்களாக (பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்பார்ப்பு) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னணி காப்பி எடிட்டர் பெஞ்சமின் டிரேயர் கூற்றுப்படி ``மிகவும் ஒழுங்கற்ற மொழி ஆங்கிலம்'' என்றிருப்பதால், இதைக் கற்பவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இருந்தாலும், இது கடினமாக இருப்பதால் பலரும் தள்ளிப் போய்விடவில்லை: நவீன காலத்தின் பொதுவான மொழியாக ஆங்கிலம் மாறியுள்ளது. உலக அளவில் பதிப்பித்தல், இன்டர்நெட், அறிவியல், கலை, நிதி, விளையாட்டு, அரசியல் மற்றும் சர்வதேசப் பயணங்கள் என பல துறைகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.
விரிவாக படிக்க:ஆங்கிலத்தில் சரளமாக எழுதுவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்