அமெரிக்கா மற்றும் இரான் இடையே வலுக்கும் பதற்றம்: என்ன காரணம்? மற்றும் பிற செய்திகள்

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணை டாங்கர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இரான் கூறியிருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

சிறிய படகில் வந்த இரானிய படையினர் வெடிக்காத குண்டுகளை கப்பலுக்கு அருகில் வந்து சேகரிப்பது போலான காணொளியை அமெரிக்கா வெளியிட்டிருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டி பேசினார்.

ஐ.நா பொதுச் செயலர் ஆண்டானியோ கட்டரஸ் உண்மை என்னவென்று தெளிவாக கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

"அவசரமாக முடிவுகளுக்கு வரவேண்டாம்" என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் கடற்கரை பகுதிகளில் நான்கு எண்ணெய் டாங்கர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதத்திற்கு பிறகு இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இரான் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் எந்த ஆதரமும் ஒப்படைக்கவில்லை. இரான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

ஜப்பான் மற்றும் நார்வே நிறுவனங்களுக்கு சொந்தமான அந்தக் கப்பல்களில் வெடிப்பு நடந்தபின், அப்பகுதியில் இருந்த தங்களுக்கு அவசர அழைப்பு வந்தாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே என்ன பதற்றம்?

2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றங்கள் நிலவி வருகின்றன.

ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் இரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.

2018ஆம் ஆண்டு இரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

இந்த நடவடிக்கை பல நாடுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் கூட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.

மே மாதம் டிரம்ப், இரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணுஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்து கொள்வதாக இரான் தெரிவித்தது.

அங்கன்வாடி முதல் அசோக் கொலை வரை - சாதியின் பங்கு என்ன?

தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களில் சாதி தொடர்பாக நடந்த இரு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பாக ஊடங்களில் வெளிவந்த செய்திகள் தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.

செய்தி 1 - மதுரை மாவட்டம் வலையபட்டி கிராமத்தில் அங்கன்வாடி ஊழியர்களாக நியமிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அவ்விரு பெண்கள் வேலையில் தொடர்ந்தால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

செய்தி 2 - திருநெல்வேலியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 23 வயதான அசோக் என்பவர் தனது தாயாரை சாதி இந்துக்கள், இரு சக்கர வாகனத்தில் மோதியது தொடர்பாக காவல்துறையில் ஒரு புகார் கொடுத்திருந்தார். சில தினங்களுக்குப் பின் ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

கொலை செய்யப்பட்ட அசோக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விரு சம்பவங்களிலும் சாதிய மனநிலையே முக்கிய பங்காற்றி இருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.

புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களில் ஷேக் இதயதுல்லா கைது செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

உக்கடம் , திருமறைநகர், குனியமுத்தூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன்விழா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு வீடுகளிலும், கரும்புக்கடை பகுதியில் க்யூப்லா என்ற ஒரு டிராவல் ஏஜென்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

எதிரிகளாக இருந்தவர்கள் தம்பதியரான கதை

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன் போன்றவர்களைக் கொண்ட அடக்குமுறை ஆட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு எதிராக போராடிய இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர்.

``நான் சிங்களர்களைப் பார்த்ததோ அல்லது பேசியதோ கிடையாது'' என்கிறார் கௌரி. ``அவர்கள் கெட்டவர்கள், எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்திருந்தோம்'' என்று அவர் கூறினார்.

ரோஷனை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் வெறுப்புக்கு உரியவர்களாக இருந்தனர். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் அவர்களுடைய தாக்குதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்.

'ஸ்டடி' செயலி: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பணம் தரும் ஃபேஸ்புக்

திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்காக ஃபேஸ்புக் புதிதாக வெளியிட்டுள்ள 'ஸ்டடி' எனும் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது தொழில்நுட்ப உலகில் ஆச்சர்யத்துடன், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ம் விண்டோஸ் என எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இயங்குதளங்களிலும் தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலாகவும், செயலிகள் வாயிலாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே பெறப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை அளிக்கும் பொருட்டு 'ஸ்டடி' எனும் இந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறுகிறார் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவின் மேலாளர் சகீ பென்-செடிப்.

அதாவது, இத்தனை நாட்களாக சட்டப்பூர்வமற்ற வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவு திரட்டலை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :