You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதலில் மதரஸா அழிக்கப்பட்டதா: பிபிசி செய்தியாளரின் பயணம் #BBCExclusive
இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்துச் சென்றது. அதில் பிபிசி செய்தியாளர் உஸ்மான் ஜாகித்தும் ஒருவர்.
அவர் அங்கு பார்த்தது, அந்த மலைப்பகுதியின் பாதை, அதன் நிலப்பரப்பு குறித்து இங்கு விளக்குகிறார்.
அவர் பிபிசி இந்தி சேவை வானொலி பிரிவின் ஆசிரியர் ராஜேஷ் ஜோஷியிடம் விளக்கியதை இங்கே தருகிறோம்.
மலைப்பாதை பயணம்
"பாகிஸ்தான் ராணுவம்தான் எங்களை இஸ்லாமாபாத்திலிருந்து ஜாபாவுக்கு அழைத்து சென்றது. இந்த இடத்தில்தான் இந்திய ராணுவம் குண்டுகளை போட்டதாக கூறுகிறது. அந்த இடத்திற்கு செல்வது உண்மையாக கடினமான ஒன்றாக இருந்தது. ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் நடந்து சென்றோம். பெரும்பாலும் கடினமான மலைப்பாதை அது." என்கிறார் உஸ்மான்.
மேலும் அவர், "எங்களை மூன்று வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்கள். அந்த இடத்தில் மக்கள் யாரும் வசிக்கவில்லலை. ஒரே ஒரு வீடு மட்டும் சேதம் அடைந்திருந்தது. ஒருவர் காயமடைந்ததாக எங்களிடம் கூறப்பட்டது. சில மரங்கள் விழுந்திருப்பதை எங்களால் காண முடிந்தது. பின் மலை உச்சியில் உள்ள ஒரு மதரஸாவுக்கு அழைத்து செல்லப்பட்டோம். ஊடகங்கள் அந்த மதரஸாவுக்கு செல்வது இதுதான் முதல்முறை" என்கிறார் உஸ்மான்.
அந்த மதராஸா குறித்து விளக்கும் பிபிசி செய்தியாளர் உஸ்மான், "அங்கு ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது, இரும்பால் ஒரு வேலி போடப்பட்டிருந்தது. அந்த கட்டடத்தில் உள்ள மைய கூடம்தான் பள்ளிவாசல். அங்கு 150-200 குழந்தைகள் குரான் படிப்பதை கேட்க முடிந்தது. அவர்கள் அனைவருக்கும் வயது 12 -13தான் இருக்கும். அவர்களுக்கு சில மெளலானாக்கள் குரான் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார்கள்." என்று தெரிவிக்கிறார்.
உஸ்மான் அங்குள்ள மெளலானாக்களிடம் இந்த மசூதி யாரால் நடத்தப்படுகிறது என்று கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மெளலானா அஷ்ரஃப் என்று கூறியதாகவும் விவரிக்கிறார்.
உஸ்மான், "நான் அவர்களிடம் ஜெய்ஷ் இ முகம்மது குறித்தும், மெளலான அசார் குறித்தும் தெரியுமா என்று கேட்டேன். இந்த மசூதி அசாரால் நடத்தப்படுவதாக கூறப்படுகிறதே என்று வினவினேன். ஆனால், இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாதென அவர்கள் கூறிவிட்டார்கள்." என்கிறார்.
"பத்து நாடுகளை சேர்ந்த ராணுவ நிபுணர்களையும் பாகிஸ்தான் ராணுவம் அழைத்து வந்திருந்தது. அவர்களும் அந்த குழந்தைகளை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த மதரஸாவில் 20 நிமிடங்கள் தங்க அனுமதிக்கப்பட்டோம். பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் ஊடகவியலாளர்களிடம் பேசினார்." என்கிறார் உஸ்மான்.
"இது ஒரு பழைய கட்டடம் என்று மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறினார். மேலும் அவர், இது எந்த தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. அப்படியானால் இந்தியா சொல்வதில் உண்மையில்லைதானே என்றார்." என்கிறார் உஸ்மான்.
ஏன் இந்த 43 மூன்று நாட்கள்?
"ஏன் உடனே அழைத்து செல்லாமல் 43 நாட்கள் கழித்து அழைத்து செல்கிறீர்கள் என ஊடகவியலாளர் கேட்டதற்கு, நாட்கள் வேகமாக செல்கின்றன, மக்களை ஒருங்கிணைப்பதற்கு நாட்கள் ஆகிவிட்டன. இன்றுதான் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்று சேர்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மதரஸா இங்கேயேதான் உள்ளது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் சென்று பார்த்து இருக்கலாம். ஆனால், ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் உள்ளூர் செய்தியாளர்களும் மதரஸாவுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டது எங்களுக்கு தெரியும். ஆனா, இப்போது யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என்று கஃபூர் கூறினார்" என்று உஸ்மான் தெரிவித்தார்.
"மதரஸா மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு அவ்வபோது மூடப்பட்டதாக கூறுகின்றனர். பல்வேறு காரணங்களால் மதரஸா மூடப்பட்டதாக ராணுவமும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர். இன்னும் மதரஸா விடுமுறையில்தான் இருக்கிறது. இப்போது இங்கு இருப்பதும் உள்ளூர் மாணவர்கள்தான் என்றனர். அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் படிப்பதாக தெரிகிறது, ஆனால், துல்லியமாக எத்தனை மாணவர்கள் என தெரியவில்லை" என்று உஸ்மான் கூறுகிறார்.
ஜெய்ஷ் இ முகம்மதால் நடத்தப்படுகிறதா?
"இந்த மதரஸா மெளலானா அசாரால் நடத்தப்படுவதாக கூறப்படுகிறதே. இந்த மதரஸாவில் உள்ள பெயர் பலகையிலும் மெளலானா யூசுஃப் அசார் பெயர் உள்ளதே என்ற கேள்விக்கு நேரடியாக பதில்தர கஃபூர் மறுத்துவிட்டார். ஆனால், மதரஸாவின் பாடத்திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருவதாக கூறினார்." என்கிறார் உஸ்மான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்