You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நண்பன் போல் தோற்றமளிக்கும் சாத்தான் சிலையால் ஸ்பெயினில் சர்ச்சை மற்றும் பிற செய்திகள்
ஸ்பெயினின் செகோவியா நகரில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சாத்தானின் சிலை மிகவும் கேளிக்கையாக தோன்றுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
நகரத்தின் கால்வாய் பாலத்தின் கட்டடத்திற்குள் சாத்தான் ஏமாற்றி புகுந்துவிட்டதாக கூறும் உள்ளூர் புராணக்கதைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்த வெண்கல சிலை உருவாக்கப்பட்டது.
ஆனால், புன்னகை பூத்துக்கொண்டு, திறன்பேசியை பயன்படுத்தி சுயப்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள்ளும் இந்த சாத்தான் சிலை மிகவும் நட்பார்ந்த ரீதியில் தோன்றுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தன்னுடைய கலை வேலைபாட்டுக்கு வந்துள்ள விமர்சனங்களால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இதனை உருவாக்கியவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இது கிறிஸ்தவர்களுக்கு எதிராக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்த கலைப்படைப்பை நீதிபதி ஒருவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை
வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?
சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்துள்ளன என்று சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.
நிலவில் உயிரின வளர்ச்சி முதன் முறையாகக் காணப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால நோக்கில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க:நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை
நைரோபி ஆடம்பர ஹோட்டல் வளாகத்தில் தாக்குதல்: 15 பேர் பலி
நைரோபியின் ஆடம்பர ஹோட்டல் வளாகத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகப்படுவோர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர்.
டுசிட்டி2 என்ற ஹோட்டலும், அலுவலகங்களும் இருக்கின்ற கென்யாவின் தலைநகரான நைரோபியின் வெஸ்ட்லேண்ட் மாவட்டத்திலுள்ள ஹோட்டல் வளாகத்தில் துப்பாக்கி சத்தமும், வெடிப்புகளும் கேட்டுள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக சோமாலியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் அப்-ஷசாப் தீவிரவாத குழு கூறியுள்ளது.
ரத்தம் தோய்ந்த நிலையில் மக்களை இந்த வளாகத்தில் இருந்து காவல்துறை வெளியேற்றியது.
எல்லா கட்டடங்களும் பாதுகாப்புடன் இருப்பதாக செவ்வாய்க்கிழமை மாலையில்தான் அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது,
கர்நாடகத்தில் ஆபரேஷன் கமலா 3.0 : ஆட்சியை கவிழ்ப்பு முயற்சியில் பாஜக
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி எடுத்துவருவதாக கூறப்படும் நிலையில், இரு தரப்பிலும் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கான குதிரைபேர முயற்சிகள் நடந்துவருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமேஷ் ஜர்கிஹோலியும், வேறு மூன்று எம்.எல்.ஏ.க்களும் மும்பை பறந்து சென்று ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இப்படிப் பறக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவத் தொடங்கியுள்ளன.
காங்கிரஸ் தங்கள் அமைச்சர்களை குறிப்பாக மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்களை உஷார்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க: கர்நாடக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக? விமானத்தில் பறக்கும் எம்.எல்.ஏ.க்கள்
கொடநாடு விவகாரம்: சயன், மனோஜ் விடுவிக்கப்பட்டது ஏன்?
கொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறையால் டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மறுத்திருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த வீடியோவில் பேசியிருந்த கே.வி. சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக காவல்துறையால் டெல்லியில் கைதுசெய்யப்பட்டனர்.
விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட அவர்களை, திங்கட்கிழமை காலை முதல் மாலை 5 மணி வரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், மாலையில் இவர்கள் இருவரையும் எழும்பூர் பெருநகர நீதிபதி சரிதா முன்பாக ஆஜர் படுத்தினர்.
இவர்கள் இருவர் மீதும் இரு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துதல் (153 A) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க: கொடநாடு விவகாரம்: சயன், மனோஜ் விடுவிக்கப்பட்டது ஏன்?
INDIA vs AUSTRALIA : தோனியின் கடைசி ஓவர் சிக்ஸர், கோலியின் சதம் - இந்தியா வெற்றி
அடிலெய்டில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலைக்கு வந்துள்ளது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய பௌலர் பெஹண்டிராஃப் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அந்த சிக்ஸர் மூலமாக இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அரை சதத்தை நிறைவு செய்தார் தோனி.
இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் அணித்தலைவர் விராட் கோலி. 112 பந்துகளை சந்தித்து அவர் 104 ரன்களை குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 39-வது சதம்.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க: தோனியின் கடைசி ஓவர் சிக்ஸர், கோலியின் சதம் - இந்தியா வெற்றி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்