9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குபின் திறக்கப்பட்ட சுரங்கபாதை

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

திறக்கப்பட்ட சுரங்கபாதை

சரியாக 17 ஆண்டுகளுக்குப் பின், 2001 ஆம் ஆண்டு 9/11 இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலின் போது மூடப்பட்ட சுரங்கபாதை ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலின் போது சிதைந்த கட்டட இடிபாடுகளில் கார்ட்லேண்ட் சாலையில் உள்ள இந்த சுரங்கபாதை மூடப்பட்டது.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை திறக்கப்பட்ட இந்த சாலையில் தொடர்வண்டி சென்றது. மக்கள் கூட்டமாக நின்று தொடர்வண்டியை வரவேற்றனர்.

ஏவுகணை இல்லாத ராணுவ அணிவகுப்பு

வட கொரியா தனது எழுபதாவது நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பில் கண்டம்விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை காட்சிக்கு வைக்கவில்லை. அதுபோல, இந்த நிகழ்வில் கிம் ஜோங் உன் சிறப்புரை நிகழ்த்தினாரா என்றும் தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்புக்குப் பின் கிம் வழக்கமான தன் தொனியை குறைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

போராட்டத்தை கலைத்த போலீஸ்

ரஷ்யாவில் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை போலீஸ் கலைத்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 800-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் தடிகள் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸ் நவல்னி அழைப்பின் பேரில் இந்த போராட்டமானது ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

மக்கள் பேரணி

ஜெர்மனி கொதென் பகுதியில் ஆஃப்கனியர்களுடன் ஏற்பட்ட சண்டையில் ஜெர்மனியர் ஒருவர் மரணித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசாம்பவித சம்பவங்களை தவிர்க்க மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இரண்டு ஆஃப்கனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பி கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என பாரிஸ் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டார். இது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்களில் இருவர் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :