உலகின் பசியை போக்க புதிய வரைபடம் தயாரிப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

கோதுமைகளுக்கான உலக வரைபடம்

ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த வரைபடம் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் ஒட்டுரக கோதுமை வகைகளை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், உலகில் போதுமான அளவு உணவு உள்ளது. அவற்றை முறையாக விநியோகம் செய்தாலே பசியைப் போக்க முடியும் என மரபணு மாற்றத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

திமிங்கல வேட்டை

டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள ஃபாரோ தீவுகளில் குளிர்காலம் தொடங்குவதை ஒட்டி நடந்த திமிங்கல வேட்டையால் கடல் செந்நிறத்தில் காட்சியளித்தது.

அங்குள்ள 18 தீவுகளிலும் வாழும் சுமார் 50,000 பேருக்கும் திமிங்கலத்தின் இறைச்சி மற்றும் கொழுப்பு ஆகியன முக்கிய குளிர்கால உணவாக உள்ளது.

ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திமிங்கல வேட்டை பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.

சீனாவில் கூகுளின் புதிய திட்டம்

கூகுள் நிறுவனம் 'தணிக்ககைக்கு உட்படுத்தப்பட்ட தேடு பொறி' ஒன்றை சீனாவில் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கூகுள் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

கூகுள் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தத் திட்டம் குறித்து இதுவரை வெளிப்படையாக பேசாத கூகுள் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், புதன்கிழமையன்று 48 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது தங்களின் 'கமாண்டோ ஆப்ரேஷன்' என்று இந்த தாக்குதலை அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :