You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`எல்லா அதிகாரமும் எனக்கே': பெரும் பலத்துடன் மீண்டும் துருக்கி அதிபரான எர்துவான்
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கையிலெடுத்துக்கொள்ள உள்ளார். இதனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும்.
துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கிடைத்தது. இந்த ஒப்புதல் இப்போது செயல்படத் தொடங்கும்.
'தனி ஒருவரின் ஆட்சி' என்ற ஆபத்தான காலகட்டத்தில் துருக்கி தற்போது நுழைவதாக, எர்துவானை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முஹர்ரம் இன்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலத்தில் துருக்கியில் நடந்த தேர்தல்களிலேயே மிகக் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் எர்துவான் 53 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த போட்டியாளர் இன்ஸின் பிரசாரம் உற்சாகத்தோடு இருந்தது. அவரது கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்தது. ஆனால், அவரால் 31 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.
64 வயது எர்துவான் வலுவான பொருளாதாரத்தைத் தலைமையேற்று நடத்துகிறார். அவர் தமக்கான உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதே நேரம் அவர் எதிர்ப்பாளர்களை ஒடுக்கினார். 1.6 லட்சம் பேரை சிறையில் அடைத்தார். நாட்டில் கருத்துகள் இரட்டை துருவங்களாகப் பிரிய வழிவகுத்தார்.
குவியும் வாழ்த்துகள்
மேற்கத்திய நாடுகள் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும், வெற்றி பெற்ற எர்துவானுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
"எர்துவானின் மாபெரும் அரசியல் அதிகாரம் மற்றும் வெகுஜன ஆதரவு," குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
புதிய அதிகாரங்கள் என்னென்ன?
தேர்தல் வெற்றிக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வழங்கிய தமது உரையில், வெகு விரைவில் புதிய அதிபர் ஆட்சி முறையை கொண்டுவருவதாக உறுதியளித்தார் எர்துவான்.
இந்த மாற்றங்களுக்கு மக்களின் ஒப்புதலைக் கோரும் சர்ச்சைக்குரிய கருத்து வாக்கெடுப்பு கடந்த ஆண்டு நடந்தது. இதில், அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான எர்துவானின் திட்டத்துக்கு 51 சதவீதம் மக்கள் ஆதரவளித்து இருந்தனர்.
இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், துணை அதிபர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளை அதிபர் நேரடியாக நியமிக்க முடியும். நாட்டின் சட்ட அமைப்பு முறையில் அதிபர் நேரடியாகத் தலையிட முடியும். அவசர நிலையை பிரகடனம் செய்ய முடியும்.
சரிபார்க்கவும், சமநிலைப்படுத்தவுமான ஏற்பாடுகள் இந்த புதிய அதிகாரத் திட்டத்தில் இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கூடுதல் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் தம்மால் துருக்கியின் பொருளாதாரப் பிரச்சினைகளையும், நாட்டின் தென்கிழக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் பிரச்சினையையும் சமாளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
2014ல் அதிபராகும் முன்னர், அவர் 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவரது பதவிக்காலம் 2023ல் முடியும்போது திருத்தி எழுதப்படவுள்ள புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி, அவரால் மீண்டும் போட்டியிட முடியும். அதன் மூலம் 2028 வரை தமது பதவியை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
தேர்தலைப் பற்றி எதிர்க் கட்சி கருத்து
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இத்தேர்தல் நியாயமற்ற முறையிலேயே நடந்ததாக குறிப்பிட்டார் எர்துவானை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த இன்ஸ்.
"தற்போது முழுமையாக ஒரு நபர் ஆட்சியை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம்," என்று பத்திரிகையாளர்களிடம் கூறிய அவர், அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகளைத் தாம் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அதே நேரம் தம்மைத் தவிர போட்டியிட்ட எதிர்க் கட்சி வேட்பாளர்கள் நான்குபேரும் 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்