You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி
உக்ரேனிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய, டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கொஹன், 4 லட்சம் டாலர்களை ரகசிய நிதியாக பெற்று இருக்கிறார் என்று உக்ரைனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியானது உக்ரேனிய தலைவர் பெட்ரோ பொரோஷென்கோவின் இடைதரகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்கின்றன தகவல்கள். அமெரிக்க சட்டத்தின்படி கொஹன் உக்ரைனுக்கான பிரதிநிதி இல்லை என்றாலும், அவர் இப்படியான செயலில் ஈடுப்பட்டதாக மேலும் விவரிக்கின்றன அந்த தகவல்கள். ஆனால், கொஹன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
விசாரணை நிறுத்தி வைப்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடந்துள்ளது. அந்த சந்திப்புக்குப் பின் உக்ரேனிய அதிபர் நாடு திரும்பிய பின், உக்ரேனின் ஊழல் தடுப்பு பிரிவு டிரம்ப்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பால் மானாஃபோர்ட்டுக்கு எதிரான விசாரணையை நிறுத்தி உள்ளது.
ரகசியத் தொடர்பு
ஓர் உயர் அதிகாரியின் கூற்றுப்படி, பெட்ரோ பொரோஷென்கோ அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரகசிய தொடர்பை வைத்துக் கொள்ள விரும்பினார். இந்த தொடர்பை ஏற்படுத்தி தருவதற்கான பொறுப்பை முன்னாள் உதவியாளர் ஒருவரிடம் வழங்கினார். அவர் விசுவாசமான உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடினார்.
அவர் தனது தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி போர்ட் வாஷிங்டனில் சபாத்தில் உள்ள யூத தொண்டு நிறுவனத்தை அணுகினார். (சபாத்தின் தொடர்பாளர் தங்களுடைய அலுவலர்கள் யாரும் இதில் பங்குபெறவில்லை என்கிறார்கள்)
இதன் மூலமாக டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கொஹனின் தொடர்பு கிடைத்தது. கொஹனுக்கு 4 லட்சம் டாலர்கள் அளிக்கப்பட்டது.
டிரம்புக்கு இந்த பண பரிவர்த்தனை குறித்து முன்கூட்டியே தெரியுமா என்று தெரியவில்லை.
உக்ரைனில் இருந்து வந்த தகவலும் இதனை உறுதிப்படுத்தின. ஆனால், அந்த சோர்ஸ் கொஹனுக்கு 6 லட்சம் டாலர்கள் அளிக்கப்பட்டது என்று கூறினார்.
உக்ரேனிலிருந்து வந்த பணம்
கொஹனின் நிதியாதாரங்களை வெளிகொண்டு வந்த அமெரிக்காவை சேர்ந்த மைக்கெல் அவெனட்டி என்ற வழக்கறிஞரும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த வழக்கறிஞர் தான் டிரம்புக்கு எதிராக ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் சட்டநடிவடிக்கை எடுத்தபோது நடிகை சார்பாக ஆஜரானார்.
கொஹனின் வங்கி கணக்குகளை ஆராய்ந்த போது அவர் உக்ரேனிலிருந்து நிதி பெற்றதை கண்டறிந்தேன் என்கிறார்.
பச்சை பொய்
டிரம்ப்பின் முன்னாள் தொழில் பங்குதாரரும், தண்டனை பெற்ற குற்றவாளியுமான ஃபெலிக்ஸ் கொஹனுக்கு உதவி புரிந்து இருக்கிறார் என்கிறார் உக்ரேனில் உள்ள மூத்த உளவு அதிகாரி. ஆனால் ஃபெலிக்ஸின் வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார்.
உக்ரேனிய அதிபர் அலுவலகம் முன்னதாக இந்த குற்றச்சாட்டு குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க மறுத்தது. ஆனால், உள்ளூர் செய்தியாளர் இது குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, இதனை,"அப்பட்டமான பொய், அவதூறு மற்றும் போலியான" செய்தி என்று மறுத்துள்ளது.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்; ஆட்சியர், எஸ்.பி. இடமாற்றம்
- தமிழகம்: 7 முக்கிய மக்கள் போராட்டங்களும், போலீஸ் துப்பாக்கிச் சூடும்
- கர்நாடகா: எதிர்கட்சித் தலைவர்கள் புடை சூழ பதவியேற்ற குமாரசாமி
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இறந்தவர்கள் உடல்களை பாதுகாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்