கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக்

கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் மற்றும் அதுசார்ந்த சேவைகளுக்கான விளம்பரங்கள் இனி தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பதாகவும், ஆனால் பல நிறுவனங்கள் மெய்நிகர் (வர்ச்சுவல்) நாணயங்களை புகழும்போது நல்லெண்ணத்தோடு நடப்பதில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிட்காயின் மதிப்பு அதீதமாக உயர்ந்ததையடுத்து புதிய மெய்நிகர் நாணயங்கள் அதிகளவில் புழங்க ஆரம்பித்தன. ஃபேஸ்புக்கில் கிரிப்டோ கரன்சிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களை பார்க்கும் பயன்பாட்டாளர்கள் அது குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கும்படி பயனர்களை ஃபேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேசமயம், தங்களால் அனைத்து கிரிப்டோ கரன்சி விளம்பரங்களையும் பார்த்து அகற்ற முடியாது என்பதையும் ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது.

''ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் மோசடி பற்றிய பயமில்லாமல் பொதுமக்கள் நிறைய புதிய பண்டங்களைப் பற்றியும் சேவைகளைப் பற்றியும் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும், கற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகிறோம்'' என்று ஃபேஸ்புக் வர்த்தகப் பிரிவின் தயாரிப்பு மேலாண் இயக்குநர் ராப் லெதர்ன் கூறியுள்ளார்.

மோசடி கவலைகள்

ஃபேஸ்புக் விளம்பரங்களை பயன்படுத்தி ஒரு புதிய திட்டம் பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அதிலும் குறிப்பாக ஒரு பிரபலம் அந்த திட்டத்தை ஏற்பது போலக் காட்டும் விளம்பரம் என்றால், பலனளிப்பதாக உள்ளது.

ஓய்வுப்பெற்ற குத்துசண்டை வீரர் ஃபிளொய்ட் மே வெதர் கிரிப்டோ கரன்சி ஒன்றுக்கு ஆதரவாக விளம்பரம் செய்ததற்காக கடந்தாண்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். காரணம், பின்னாளில் அந்த குறிப்பிட்ட கிரிப்டோ கரன்சி மீது மோசடி குற்றச்சாட்டு வழக்கு பதியப்பட்டது. மே வெதர் மீது நேரடியாக குற்றச்சாட்டு இல்லை.

கிரிப்டோ கரன்சியின் இனிஷியல் காயின் ஆஃபரிங் (ஐ சி ஒ) மூலம் நிதி திரட்டுவதற்கு தென் கொரியா மற்றும் சீனா தடைவிதித்துள்ளன. மேலும் பிற நாடுகளிலுள்ள முறைப்படுத்தல் அமைப்புகள் இந்த நடைமுறையில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐசிஓ மூலம் 600 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டிய ஒரு நிறுவனத்தின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க பங்கு பறிமாற்ற ஆணையம் இந்த வாரம் தெரிவித்தது. இந்த புதிய கொள்கை என்பது வேண்டுமென்றே பரந்த பொருள்தருவதாக ஆக்கப்பட்டிருப்பதாகவும், இது காலப்போக்கில் பரிணாமம் அடையும் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: