You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஹிஞ்சாக்கள் மட்டுமல்ல மியான்மரின் பிற முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாக அச்சம்
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி
துன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
இன்று அவர், மியான்மரின் முன்னாள் அரசியல் சிறைவாசிகள் அமைப்பின் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார். 2010 ஆம் ஆண்டு மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, தனது சமூகத்தினருக்கு ஏற்ற இடம் இந்நாட்டில் கிடைக்கும் என்று எண்ணிய பல முஸ்லிம்களில் இவரும் ஒருவர்.
"2012ஆம் ஆண்டு, ரக்கைன் மாநில கலவரத்திற்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. எதிர்ப்பலை என்பது ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக மட்டுமல்ல, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக உள்ளது" என்கிறார் அவர்.
துன் கீயின் முன்னோர்கள், இந்தியாவில் இருந்து மியான்மருக்கு பல தலைமுறைக்கு முன்பு குடியேறியவர்கள்.
2012 ஆம் ஆண்டு பெளத்தர்களுக்கும் ரோஹிஞ்சாக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 1.4 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். வெளியேறிவர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக ரோஹிஞ்சா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் குடியேறினர்.
யான்கூனில் உள்ள ஒரு மசூதிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இஸ்லாமிய தொப்பிகளை அணிந்திருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், தொழுகைக்காக தயாராகி வந்தனர்.
அங்கு தொழுகைக்கு வந்த சிலருடன் நான் பேசியதில், சமீபத்தில் ரக்கைனில் நடந்த கலவரங்களால் அவர்களுக்கு ஒரு அசெளகரிய உணர்வு இருப்பது தெரிந்தது.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் குழுவான அர்சா, மியான்மர் காவல் சாவடிகளை ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை தூண்டப்பட்டது. மியான்மர் ராணுவமும் அதற்கான எதிர் தாக்குதலை நடத்தியது.
வன்முறையை ஏற்பட்டதில் இருந்து ஐந்து லட்சத்துக்கும் மேலான மக்கள் மியான்மரி்ல் இருந்து தப்பி ஓடியுள்ளனர். பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத கொலைகளின் குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.
மூத்த ஐ.நா அதிகாரிகளும் மனித உரிமை குழுக்களும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வெளியேற்றத்தை, இனச் சுத்திகரிப்பு என குறிப்பிடுகின்றனர்.
"ரக்கைன் மாநிலத்தில் உள்ள பிரச்சனை என்பது மிகவும் கொடுமையானது" என்கிறார் தொழுகைக்கு வந்த முகமது யூனஸ். "இந்த வன்முறை யான்கூன் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவலாம்" என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், தினமும் தாங்கள் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
"ரக்கைனில் பிறந்து யான்கூனில் வாழும் மக்கள் பலர் உள்ளனர், அவர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆனது என்பது குறித்த வருத்தத்தில் உள்ளனர்" என்கிறார் முகமது யூனஸ்.
53 மில்லியன் மக்கள் உள்ள மியான்மரில், 4.5 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர் என நம்பப்படுகிறது. இந்த கணக்கு ரோஹிஞ்சா முஸ்லிம்களையும் உள்ளடக்கியது. ஆனால், அரசின் கணக்கைவிட முஸ்லிம்களின் உண்மையான எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் என இஸ்லாமிய சமூக தலைவர்கள் கூறுகின்றனர்.
மியான்மரில் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்கின்றனர் என பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பிரிட்டிஷ் காலணி ஆட்சியின் போது அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அக்காலத்தில், அவர்கள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளனர் அல்லது அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மொழிவாரியாக, தெற்கு மற்றும் மத்திய மியான்மரில் வாழும் முஸ்லிம்களிடம் இருந்து மாறுபட்டு இருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பெரும்பாலும் மேற்கு ரக்கைன் பகுதியில் வாழ்கின்றனர்.
இத்தனை முஸ்லிம் மக்கள் இருந்தும், நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாது ஏமாற்றம் அளிப்பதாக இஸ்லாமிய சமூக தலைவர்கள் கூறுகின்றனர்.
2015 ஆம் ஆண்டு, ஆங் சாங் சூச்சியின், என்.எல்.டி கட்சி ஆட்சிக்கு வந்தது. எனினும், அந்த கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை.
''எல்லா வகையில் நாங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளாக உணருகிறோம்"என்கிறார் மியான்மரின் இஸ்லாமிய மைய தலைமை ஒருங்கிணைப்பாளரான அல்-ஹஜ் யூ ஏய் ல்வின்.
1962 இல், ராணுவ ஆட்சி வந்தது முதலே இந்த நிலை தொடர்வதாக கூறும் அவர், அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்து முஸ்லிம்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.
"ராணுவத்தை விடுங்கள், கீழ்நிலை காவல் அதிகாரியாக கூட இங்கு நீங்கள் முஸ்லிம்களை பார்க்க முடியாது என்கிறார் அவர். இந்த வேற்றுமைபடுத்துதல் என்பது, அரசிடம் இருந்து குறிப்பாக வெளிப்படுவதாக கூறும் அவர், அது அடிமட்டம் வரையில் பரவவில்லை என்றார்.
ரக்கைனில் நடக்கும் மோதல்களுக்கு தீர்வு காணும், சதந்திர அறிவுரை ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார் ல்வின்.
இந்த ஆணையம் 2016 ஆம் ஆண்டு, ஆங் சாங் சூச்சியால் அமைக்கப்பட்டது. அண்மைய வன்முறைக்கு முந்தைய நாள், ஆகஸ்ட் 24-ம் தேதி இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை முன்வைத்தது.
சூச்சி மிகவும் சரியானவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரே தங்களின் ஒரே நம்பிக்கை என்கிறார் அவர். மியான்மரின் நடைமுறைத் தலைவி சூச்சி அவரால் முடிந்த வரை எல்லாவற்றையும் செய்த போதிலும், ரோஹிஞ்சா பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என்றார்.
"அவர் தானாக வந்து, முஸ்லிம்களுக்காக வெளிப்படையாக பேச துவங்கினார் என்றால், அது அரசியல் ரீதியாக தற்கொலைக்கு சமம். அது நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை" என்கிறார் அவர்.
தெற்கில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சூச்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அது நாட்டில் எதேச்சாதிகார ஆட்சியையே கொண்டு வரும் என்று அவர் எச்சரிக்கிறார்.
"சர்வாதிகாரிகளே மீண்டும் வருவார்கள்" என அவர் எச்சரிக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :