You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
53 மில்லியன் டாலருக்கு விலைபோன உலகின் இரண்டாவது பெரிய வைரக்கல்
உலகின் இரண்டாவது பெரிய வைரம், லண்டனில் உள்ள நகை வியாபாரியிடம் 53 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், அதற்கு ஏற்ற விலைகிடைக்காத நிலையில், கிராஃப் வைரங்கள் நிறுவனத்தின் இயக்குநரான லாரன்ஸ் கிராஃப், தனிப்பட்ட முறையில் இந்த வைரத்தை வாங்கியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்ட்வானாவில், லுக்காரா டைமண்ட் கார்ப்ரேஷன் இந்த 1,111 கேரட் வைரத்தை தோண்டி எடுத்தது.
2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம், சொத்தீபையில் நடைபெற்ற ஏலத்தில் கேட்கப்பட்டதை விட, தொகையில் முன்னேற்றம் உள்ளது என லுக்காரா தெரிவித்துள்ளது.
இந்த வைரம், "லெசிடி லா ரோனா" என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு "எங்களின் வெளிச்சம்" என போட்ஸ்வானாவின், ஸ்வானா மொழியில் பொருள்.
இந்த கல், 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் முன்பு உருவாகியது. இது ஏறத்தாழ டென்னிஸ் பந்தின் அளவில் உள்ளது.
அளவில் மட்டுமின்றி இந்த வைரம், "மிகச் சிறந்த தரத்துடனும், ஊடுருவிப் பார்க்கும் வகையிலும்" உள்ளது என அமெரிக்கன் ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் சான்றளித்துள்ளது.
"அந்த கல்லே தனது கதையை கூறும். அதுவே எந்த வடிவத்தில் வெட்டப்பட வேண்டும் என நமக்கு கற்றுத்தரும்" என்கிறார் கிராஃப்.
இந்த கல், மிகவும் துல்லியமான ஸ்கேனிங் இயந்திரம் கொண்டு ஆராயப்படும். அந்த இயந்திரம், வைரத்தின் மையப்பகுதியில் ஏதேனும் சிறு குறைபாடுகள் உள்ளதா என்பதை கவனித்தபின் எந்த வகையில் இந்த வைரம் இழைக்கப்படும் என்பது முடிவு செய்யப்படும் என்கிறது அந்நிறுவனம்.
மேலும் குறைபாடுகள் உள்ளதா என்பதை கவனிக்க, ஒரு நிபுணர் குழு, மைக்கிரோஸ்கோப்களின் மூலம் இந்த வைரத்தை ஆராயும்.
பிறகு அவர்கள், இந்த வைரத்தை எந்த வடிவத்தில், எத்தனை துண்டுகளாக வெட்ட வேண்டும் என்பதை முடிவு செய்வர்.
கடந்த ஆண்டு, லா ரோனா வைரத்தின் பகுதியாக இருந்த, 373 காரட் வைரத்தையும், கிராஃப் நிறுவனம் வாங்கியுள்ளது.
முதலில் இந்த சிறிய வைரத்தை வெட்டவுள்ளதாக கூறும் அந்நிறுவனம், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு, பெரிய வைரத்தில் எப்படி வேலை செய்வது என்பது முடிவு செய்யப்படும்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் கண்டறியப்பட்ட பெரிய ரத்தினத் தரத்திலான வைரக்கலாகவும், எல்லாக் காலத்துக்குமான இரண்டாவது பெரிய வைரக்கல்லாகவும் `லெசிடி லா ரோனா` உள்ளது. 1905 ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, 3,106 கேரட் எடையுள்ள கல்லியன் என்னும் வைரமே உலகின் மிகப் பெரிய வைரம்.
கிராஃப் நிறுவனம், இந்தக் கல்லை , "உலகிலேயே மிகவும் விலைமதிப்பு பெற்ற வெட்டப்பட்டாத வைரம்" என விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்