You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐரோப்பிய ஆணையத்தால் கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதிப்பு
கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது.
சந்தையின் நிலையைச் சிதைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆணையம் ஒரு நிறுவனத்திற்கு, இது நாள் வரை விதித்த அபராதத் தொகையில் இதுவே அதிகமானதாகும்.
தொழிற்போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இன்னும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று அந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.
தனது சந்தைச் சேவையை செயல்படுத்தும் முறையை மூன்று மாத கால வரையறைக்குள் மாற்றாவிட்டால், தனது தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் சர்வதேச தினசரி வருவாயின் சராசரியில் 5 சதவீதத்தை கூகுள் செலுத்த வேண்டியிருக்கும்.
அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
குறிப்பிட்ட நிவாரணத்தைப் பரிந்துரை செய்வதைவிடவும் தனது சந்தைச் சேவையில் என்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்வதை கூகுள் நிறுவனத்திடமே விட்டுவிடுவதாக அந்த ஆணையம் கூறியுள்ளது.
" கூகுள் நிறுவனத்தின் செயல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்போட்டி குறித்த நடத்தை விதிகளுக்கு எதிரானது," என்று அந்த ஒன்றியத்தின் தொழிற்போட்டி ஆணையர் மார்க்ரெத் வெஸ்டாகர் தெரிவித்துள்ளார்.
"இச்செயல் பிற நிறுவனங்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் போட்டியிடவும் தொழிலில் புதுமைகளை புகுத்தவும் வாய்ப்பு மறுத்ததுடன், மிகவும் முக்கியமாக, ஐரோப்பிய நுகர்வோர் தொழிற்போட்டி, நேர்மையான தேர்வு மற்றும் புதுமை ஆகியவற்றால் பயன் அடைவதையும் தடுத்துள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.
கூகுளின் இச்சேவையான கூகுள் ஷாப்பிங்கை 2010-ஆம் ஆண்டின் இறுதி முதல் ஐரோப்பிய ஆணையம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
இது போன்ற சட்ட ரீதியான சச்சரவுகளை எதிர்காலத்தில் தவிர்க்கும் பொருட்டு அந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால், இது குறித்து, தொழில்நுட்பத்தில் கூகுளின் முன்னணி போட்டி நிறுவனமான, மைக்ரோசாப்ட் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்