ஐ எஸ் அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு வீட்டில் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை அவர் நடத்திக் கொண்டிருந்தார் எனும் நம்பிக்கையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் இராக்கிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாக்குதலில் ஐ எஸ் தளபதிகள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றாலும், அல் பக்தாதி கொல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு இராக்கில், சிரியாவுடனான எல்லைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை தமது F 16 ரக விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியது என்றும் இராக்கிய இராணுவம் கூறியுள்ளது.

அல் பக்தாதி ஐ எஸ் அமைப்பின் தலைநகரம் எனக் கூறப்படும் சிரியாவிலுள்ள ரக்கா நகரிலிருந்து, வாகனத் தொடரணி ஒன்றில் அல் கயீம் பகுதிக்கு கடந்த வாரம் சென்றார் எனவும் இராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னர் நடைபெற்ற பல தாக்குதல்களில் அவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.