`ஓராண்டில் வடகொரியா கையில் சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள்' - நாட்டை விட்டு தப்பிய தூதரக அதிகாரி தகவல்

வட கொரியா அடுத்த வருடத்தின் கடைசியில் சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என அந்நாட்டிலிருந்து தென் கொரியாவிற்கு இடம் பெயர்ந்த மூத்த தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவிற்கு வந்ததிலிருந்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள தெ யொங் ஹு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த மே மாதத்தில் அரிதான ஆளும் கட்சி மாநாட்டில், 2017 ஆண்டின் இறுதிக்குள் அணு ஆயுத தயாரிப்புக்களை முடிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

டிரில்லியன் கணக்கான டாலர் பொருளாதார உதவி மற்றும் ஊக்க தொகை வழங்கும் நடவடிக்கைகள், கிம் ஜாங் உன்னின் அந்த லட்சியத்தை தகர்க்க எந்த வகையிலும் உதவாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லண்டனிற்கான துணை தூதராக பணியாற்றிய தெ யொங் ஹு, இடம் பெயர்ந்தது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் தற்போது தனது குடும்பம் தென் கொரியாவை தங்களது சொந்த இடமாக நினைக்க தொடங்கிவிட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.