You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சமூகவலைத்தளத்தில் அழைப்பிதழ்: பதின்ம வயது பெண்ணின் பிறந்த நாள் விழாவுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்ட அதிசயம்
மெக்சிகோவில், ஒரு பதின்ம வயது பெண்ணின் தந்தை, தனது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு அனைவரும் வரலாம் என்று சமூகவலைதளத்தில் அழைப்பிதழ் அனுப்பியது வைரலாக பரவியதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பெண்ணின் பிறந்தநாள் விழாவுக்கு வருகை புரிந்தனர்.
மெச்சிகோவின் மத்திய மாநிலமான சான் லூயிஸ் பொட்டோஸியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ரூபி இபாரா என்ற அந்த இளம் பெண்ணின் 15-ஆவது பிறந்தநாள் விழாவுக்கு சென்று தாங்கள் கொண்டாடப் போவதாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒரு காணொளியில் கருத்து தெரிவித்த ரூபியின் தந்தையான கிரஸன்ஷியோ, தனது மகளின் பிறந்தநாள் விழா அழைப்பு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால், தனது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு வந்த யாரும் திரும்ப அனுப்பப்படமாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குதிரைப் பந்தய போட்டியில் ஒருவர் இறந்த பரிதாபம்
இதனிடையே, இந்த பிறந்தநாளையொட்டி நடந்த குதிரைப் பந்தய போட்டியில், குதிரைகளின் ஓடு பாதையில் தவறுதலாக இறங்கி விட்ட ஒருவர் இறந்துள்ளார்.
பொழுதுபோக்குக்காக நடைபெறும் குதிரைப் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஒரு குதிரையின் உரிமையாளரான பெனா என்ற இந்த 66 வயது நபர் குதிரையால் அடிபட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவ அவசரப்பிரிவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குதிரை பந்தயங்களுக்கு அடிக்கடி செல்லும் வழக்கமுள்ள பெனா, குதிரைகள் ஓடும் பாதையில் ஏன் நுழைந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.
குதிரைப் பந்தயத்தை காண வந்த சிலர், பெனா ஒரு குதிரையை உற்சாகப்படுத்த முயற்சிக்கையில், குதிரைகள் ஓடி வரும் தூரத்தை தவறாக கணித்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.