கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்த உண்மை, 37 பேர் இறந்ததாக அரசு கூறியது, பிபிசி புலனாய்வில் குறைந்தது 82 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
அபினவ் கோயல், பிபிசி செய்தியாளர்

ஜனவரி 29, மௌனி அமாவாசை அன்று, பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் மரணங்களை ஏற்படுத்திய நான்கு நெரிசல் சம்பவங்கள் நடந்தன
உத்தரப்பிரதேச அரசின் கூற்றுப்படி, கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
பிபிசி நடத்திய விரிவான புலனாய்வில், கூட்ட நெரிசலில் குறைந்தது 82 பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற 26 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கத் தொகைகள் வழங்கப்பட்டதை பிபிசி கண்டறிந்தது, ஆனால் அவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற இந்த கும்பமேளாவை 66 கோடி பேர் பார்வையிட்டதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது சுமார் நான்காயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றது.
இந்த 45 நாள் நிகழ்விற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவிட்டது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உ.பி. சட்டமன்றத்தில், "இந்த வெற்றிகரமான கும்பமேளாவின் எதிரொலி நீண்ட காலத்திற்கு உலகில் கேட்கும்" என்று கூறினார்.
ஆனால் அந்த 'வெற்றியின் எதிரொலியில்', கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த பலரின் குரல்கள் மறைந்து போயின.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில், "இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் 29 ஆம் தேதி இரவு சங்கம் நோஸ் அருகே அதிகாலை 1.10 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது..." என்று கூறினார்.
"66 பக்தர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதில் 30 பக்தர்கள் இறந்தனர்... 30 பேரில் 29 பேர் அடையாளம் காணப்பட்டனர்."
"ஒருவரை அடையாளம் காண முடியவில்லை. அவரது டிஎன்ஏ சேகரிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகளை உள்ளூர் நிர்வாகம் செய்தது... பிரயாக்ராஜின் பல்வேறு இடங்களில் வேறு சில அழுத்தப் புள்ளிகள் இருந்தன.”
முதல்வர் ‘அழுத்தப் புள்ளிகள்’ என்று அழைக்கும் இடங்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் ஆதித்யநாத், பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் அளித்த அறிக்கையில், “சிலர் காயமடைந்தனர், வேறு சில இடங்களிலும் சுமார் 30-35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது அல்லது மருத்துவமனையில் இறந்தனர்” என்று கூறினார்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள முழுமையான உண்மை என்ன?

இதை ஆய்வு செய்ய, பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் ஐம்பது மாவட்டங்களுக்குச் சென்றனர்.

இந்த புலனாய்வில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்ததாகக் கூறிய 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை பிபிசி சந்தித்தது.
கும்பமேளாவில் குறைந்தது 82 பேர் கூட்ட நெரிசலில் இறந்ததற்கான வலுவான ஆதாரங்கள் பிபிசியிடம் உள்ளது. தங்கள் கூற்றை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை வழங்க முடியாத குடும்பங்களின் உறுப்பினர்கள், இறந்த 82 பேரின் பட்டியலில் பிபிசியால் சேர்க்கப்படவில்லை.
மௌனி அமாவாசை நாளில் கும்பமேளாவில் குறைந்தது நான்கு இடங்களில் கூட்ட நெரிசல்கள் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்துள்ளது.
மஹா கும்பமேளாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கின்படி, “மௌனி அமாவாசை அன்று சங்கமக் கரையில் நடந்த கூட்ட நெரிசலில் 30 பேரும், பிற மூன்று பகுதிகளில் நடந்த சம்பவங்களில் ஏழு பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடலில் காயங்கள் தென்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களின் அறிவிப்பின்படி, இறந்த 37 பேரில் 35 பேரின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் அடையாளம் காணப்படாததாலும், மற்றொருவர் சார்பாக உரிமை கோரப்படாததாலும் இழப்பீடு வழங்க முடியவில்லை."
இந்த அறிக்கையை எழுதும் வரை, உத்தரப்பிரதேச அரசு கூட்ட நெரிசலில் கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிடவில்லை. எந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களையும் வெளியிடவில்லை.
பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறிய கூற்றை விசாரித்ததில், 35 குடும்பங்களுக்குப் பதிலாக, உத்தரப்பிரதேச அரசிடமிருந்து தலா ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்ற 36 குடும்பங்கள் இருப்பதாக பிபிசி கண்டறிந்தது.
இந்த 36 பேரின் முழு விவரங்களையும் கீழே காணலாம்.
உத்தரப்பிரதேச அரசிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கமாகப் பெற்றதாக ஆதாரத்துடன் கூறிய 26 குடும்பங்களை பிபிசி கண்டறிந்தது.

யோகி அரசு, நேரடி பலன் பரிமாற்றம் (DBT) அல்லது காசோலை மூலம் 36 குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கியது.
26 குடும்பங்களிடமிருந்து பிபிசி பல காணொளிகளையும் புகைப்படங்களையும் பெற்றுள்ளது, அதில் காவல்துறை குழுக்கள் ரூ.500 நோட்டுக் கட்டுகளை அவர்களிடம் ஒப்படைப்பதைக் காணலாம்.
பல குடும்பங்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தனர், அதில் 'திடீரென உடல்நலக் குறைவு' காரணமாக மரணம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் நோட்டுகளின் கட்டுகள் அரசாங்க கருவூலத்திலிருந்து சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் பிபிசி தனது புலனாய்வில் காணவில்லை.
26 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தப் பணம் ரூ.1 கோடியே 30 லட்சம் எங்கிருந்து வந்தது என்பதை விசாரணையில் கண்டறிய முடியவில்லை, ஆனால் இந்த 26 நிகழ்வுகளிலும் உத்தரப்பிரதேச காவல்துறையின் பங்குள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். பெரும்பாலான நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குடும்பங்களிடம் உள்ளன.
புலனாய்வின் அடுத்தடுத்த கட்டங்களில், பிபிசி மேலும் 19 குடும்பங்களைக் கண்டறிந்தது, இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இந்த 19 குடும்பங்களின் உறுப்பினர்கள், ஜனவரி 29 அன்று கும்பமேளாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த கூட்ட நெரிசலில் தங்கள் உறவினர்கள் இறந்ததாகக் கூறுகிறார்கள். தங்கள் கூற்றை நிரூபிக்க, பலர் பிரேத பரிசோதனை அறிக்கைகள், சிலர் மருத்துவமனை பிணவறையிலிருந்து அளிக்கப்பட்ட ஸ்லிப்கள், மற்றும் சிலர் இறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்.
இந்த 19 குடும்பங்களில் பலரும், ஜனவரி 29 அன்று கும்பமேளா பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் காட்டி, அதில் அவர்களின் உறவினர்களின் இறந்த உடல்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த புலனாய்வின்போது, பல அதிர்ச்சியூட்டும் கதைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நடந்த 82 இறப்புகளை பிபிசி மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
முதல் வகை, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் அது இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இரண்டாவது வகை, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால் அவை கும்பமேளாவில் நடந்த இறப்புகளாகக் கருதப்படவில்லை.
மூன்றாவது வகையில், இந்த இரண்டு பிரிவுகளிலும் கணக்கிடப்படாத அல்லது எந்த உதவியும் வழங்கப்படாத இறந்தவர்கள் அடங்குவர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

உத்தரப்பிரதேச அரசிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்ற 36 குடும்பங்களில், ஒரு குடும்பம் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தது.
47 வயதான நங்கன் தனது குடும்பத்துடன் ஜனவரி 27 அன்று கும்பமேளாவுக்குப் புறப்பட்டார்.
அவரது மனைவி ரமா தேவி, மூத்த சகோதரர் மஸ்ரூ, உறவினர் ஜோகு மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் நங்கனுடன் இருந்தனர். மாலை ஆறு மணியளவில், அனைவரும் கும்பமேளா பகுதியை அடைந்து ஒரு ஆசிரமத்தில் தங்கினர்.
ஜனவரி 28ஆம் தேதி காலை, குடும்பத்தினர் அருகிலுள்ள ஒரு படித்துறையில் குளித்தனர். பின்னர் மௌனி அமாவாசையை முன்னிட்டு கங்கையில் நீராடுவதற்காகக் காத்திருந்தனர்.
நங்கனின் மூத்த சகோதரர் மஸ்ரூ, "ஜனவரி 28 ஆம் தேதி இரவு சுமார் பத்து மணியளவில், நாங்கள் சங்கமத்திற்குப் புறப்பட்டோம். அங்கு செல்ல எங்களுக்கு இரண்டு மணி நேரம் ஆனது" என்று கூறுகிறார்.
"பின்னர் மைக்கில் ஒரு அறிவிப்பு வந்தது - ‘அம்ரித் மழை பெய்கிறது, அனைவரும் குளிக்க வேண்டும்' என. பின்னர் என்ன நடந்தது, மக்கள் பித்துப் பிடித்தது போல மாறினார்கள்."
"கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டதால் நாங்கள் திரும்பிச் செல்ல நினைத்தோம். ஆனால் நெரிசலில் நங்கன் கீழே விழுந்தார், கூட்டம் அவரை மிதித்துச் சென்றது" என்று மஸ்ரூ கூறுகிறார்.

"சுமார் 30 உடல்கள் அங்கே கிடந்தன. சில பெண்களின் உடலில் துணிகள் கூட இல்லை" என அவர் கூறுகிறார்.
நங்கனின் மனைவி ரமா தேவியும் அவருடன் இருந்தார். "கூட்டம் மிகப் பெரியதாக இருந்ததால் எங்கள் உடைகள் கூட கிழிந்து போயின. அங்கே ஒரு ஆண், இன்னொரு ஆணைக் கொன்றார்" என்று அவர் கூறுகிறார்.
இந்தக் குடும்பத்தினர் கங்கையில் குளிப்பதற்கு முன்பு, சங்கம் நோஸ் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விரைவில் கூட்ட நெரிசலின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கின.
இந்தப் படங்களில் ஒன்று நங்கனின் படமும் கூட. அவரது உறவினர் ஜோகு, பல இறந்த உடல்களுக்கு மத்தியில் உயிரற்று கிடந்த நங்கனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் படத்தைப் பார்த்து, ஜோகு கூறுகிறார், "அப்போது எதுவும் புரியவில்லை. எல்லா இடங்களிலும் குழப்பம் நிலவியது."
மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டிற்கு கொண்டு வர ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் இறுதிச் சடங்குகளுக்காக ரூ.15,000 பணத்தை வழங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
உறவினர்களை இழந்த பிற குடும்பங்களும், இறுதிச் சடங்குகளுக்காக ரூ.15,000 ரொக்கமாக தங்களுக்கு வழங்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.


நங்கனின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது.
நங்கனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான தொகை கிடைத்துள்ளதாக ரமா தேவி கூறுகிறார். "என்னுடைய மற்றும் எனது நான்கு குழந்தைகளின் வங்கி கணக்குகளில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
சங்கம் நோஸ் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்தவர்களில், கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு பேரை பிபிசி கண்டறிந்தது. பெல்காமில் வசிக்கும் கஞ்சன், தனது கணவர் அருண் நாராயண் கோபர்டேவுடன் (60 வயது) கும்பமேளாவிற்கு வந்திருந்தார்.
பெல்காமில் இருந்து பலர் தங்கள் குடும்பங்களுடன் வந்திருந்தனர். அனைவரும் ஒரு பயண நிறுவனம் மூலம் கும்பமேளாவுக்கு வந்திருந்தனர்.
"மக்கள் எங்கள் மீது விழத் தொடங்கினர், என் கணவரின் முதுகில் மிதித்துக் கொண்டிருந்தனர். அவர் உதவிக்காக கத்திக் கொண்டிருந்தார், ஆனால் யாரும் கேட்கவில்லை.” என்கிறார் கஞ்சன்.
"யாரோ ஒருவர் அவரது கழுத்தில் ஷூவால் மிதித்துச் சென்றுவிட்டார். என் கணவர் என் மார்பில் தலை வைத்தபடி இறந்துபோனார்."
மீட்புக் குழுவினர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திலிருந்து அருணின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், ஆனால் எந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார் என்பது கஞ்சனுக்கு தெரிவிக்கப்படவில்லை.

“என் கணவரைத் தேடுவதற்காக ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு சுமார் 35 கிலோமீட்டர் தூரம் நடந்தேன். பின்னர், அவரை ஒரு பிணவறையில் கண்டேன்," என்கிறார் கஞ்சன்.
கர்நாடகாவைச் சேர்ந்த மற்ற மூன்று பேரின் உடல்களுடன் அருணின் உடலும் முதலில் டெல்லி விமான நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. அங்கிருந்து, அனைத்து உடல்களும் விமானம் மூலம் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
கர்நாடகாவிலிருந்து கும்பமேளாவிற்கு வந்து இறந்துபோன நால்வருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது. இறப்புச் சான்றிதழின்படி, நான்கு பேரும் ஜனவரி 29 அன்று பிரயாக்ராஜ், மஹாகும்பம்-2025 பகுதியில் உள்ள மத்திய மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச அரசின் கூற்றுப்படி, கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் ஒருவருக்கு வாரிசு இல்லை. எனவே ரூ.25 லட்சம் இழப்பீட்டை அவரது உறவினர்கள் யாருக்கும் வழங்க முடியாது.
பிபிசி தனது புலனாய்வில், அந்த நபர் கே.என். வாசுதேவாச்சார்யா என்பதைக் கண்டறிந்தது. இவர், பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் ஆர்எஸ்எஸ் பேச்சாளரான கே.என். கோவிந்தாச்சார்யாவின் தம்பி ஆவார்.
சங்கம் நோஸ் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த மற்றவர்களைப் போலவே, கே.என். வாசுதேவாச்சாரியாவின் இறப்புச் சான்றிதழில் இறந்த இடம்- பிரயாக்ராஜ், ஃபோர்ட் கான்ட், வார்டு எண் 7 என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் பேசிய கே.என். கோவிந்தாச்சாரியா, "ஆம், அவர் என் தம்பி தான். நான் அவரது 13வது நாள் சடங்கிற்குச் சென்றேன்" என்று கூறினார்.
நாங்கள் கே.என். வாசுதேவாச்சாரியாவின் வீட்டிற்குச் சென்றபோது, கிரண் மிஷ்ராவைச் சந்தித்தோம்.
கடந்த இருபது ஆண்டுகளாக வாசுதேவாச்சாரியாவின் உதவியாளராக அவருடன் வசித்து வந்த கிரண், "அவர் 1990 முதல் வாரணாசியில் உள்ள இந்த வீட்டில் வசித்து வந்தார். நான் சுமார் இருபது ஆண்டுகள் அவரின் உதவியாளராக இருந்தேன். அவருக்கு திருமணமாகவில்லை. அவர் ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார்" என்று கூறுகிறார்.
"பிரயாக்ராஜில், அவரது உடல் முதலில் உரிமை கோரப்படாததாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பாஜகவுடன் தொடர்புடைய ஒரு நண்பர் அவரது உடலைப் பெற்று ஆம்புலன்சில் பனாரஸுக்கு கொண்டு வந்தார். அவரது இறுதிச் சடங்குகள் ஹரிஷ்சந்திரா படித்துறை பகுதியில் செய்யப்பட்டன." என்றார் கிரண்.
வாரணாசியில், கேசரிபூர் வட்டத்தின் கணக்காளர் பிபிசியிடம் பேசுகையில், "ஒரு அரசு விசாரணை முன்வைக்கப்பட்டது, நான் விசாரித்து அவருக்கு வாரிசு இல்லை என்று அறிக்கை அளித்தேன்" என்று கூறினார்.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டத

இப்போது இரண்டாவது பிரிவைப் பற்றி பேசலாம்.
இந்த புலனாய்வில், உத்தரப்பிரதேச அரசு தங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கியதாகக் கூறிய 26 குடும்பங்களையும் பிபிசி கண்டறிந்தது.
இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 குடும்பங்கள், பீகாரைச் சேர்ந்த 5 குடும்பங்கள், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 குடும்பங்கள் மற்றும் ஜார்கண்டைச் சேர்ந்த ஒரு குடும்பமும் அடங்குவர்.
கும்பமேளாவின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்ததாக இந்தக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தக் குடும்பங்கள், கூட்ட நெரிசலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் என கணக்கில் சேர்க்கப்பட்டு, உத்தரப்பிரதேச அரசிடமிருந்து 25 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்ற 36 குடும்பங்களிலிருந்து வேறுபட்டவை.
உத்தரப்பிரதேச காவல்துறையினர் தங்கள் வீடுகளுக்கு வந்து 'சில ஆவணங்களில் தங்கள் கட்டைவிரல் ரேகைகள் மற்றும் கையொப்பங்களை' கட்டாயப்படுத்தி பெற்றதாக இந்தக் குடும்பத்தினர் கூறுகிறார்கள். 'திடீர் உடல்நலக் குறைவு' காரணமாக மரணம் நிகழ்ந்ததாக இந்த ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளது, கூட்ட நெரிசல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
குடும்ப உறுப்பினர்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த அரசாங்கத்தின் பதிலை அறிய, மாநில காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் பல அதிகாரிகளிடம் பேச பிபிசி பல முறை முயன்றது. ஆனால் எங்கிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

உத்தரபிரதேச தகவல் பிரிவு இயக்குநர் விஷால் சிங் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் மந்தாத் ஆகியோரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
42 வயதான வினோத் ருய்தாஸ் மேற்கு வங்கத்தின் மேற்கு பர்தமானில் வசித்து வந்தார்.
"உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்தார்கள்" என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
வினோத்தின் மைத்துனர் அவருடன் கும்பமேளாவுக்குச் சென்றிருந்தார். "நாங்கள் ஜனவரி 27 அன்று வீட்டை விட்டு கிளம்பினோம். முதலில் நாங்கள் பனாரஸுக்கும் பின்னர் பிரயாக்ராஜுக்கும் சென்றோம். இரவில் சங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், வினோத் கீழே விழுந்தார், முன்னோக்கி நகர்ந்த மக்கள் அவரை நசுக்கினர்." என்று அவர் கூறினார்.
"அடுத்த நாள், மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் பிணவறைக்கு வெளியே என் மைத்துனரின் படத்துடன் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அவரது தோளில் காயங்கள் இருந்தன. ஒரு இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது, அதை நாங்கள் உடலை வீட்டிற்கு கொண்டுவர பயன்படுத்திக் கொண்டோம்."
கூட்ட நெரிசலில் இறந்த ஒருவரின் குடும்பத்தினரால் இந்த காணொளி பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. காணொளியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஐந்து லட்சம் ரூபாய் பெற்றதாகக் குடும்பத்தினரை கூற வைக்கின்றனர்.

இதேபோல், பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் உள்ள தாரா தேவியின் வீட்டிற்கு சிலர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண உடையில் இருந்தனர்.
குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த பிறகு, அவர்கள் ஒரு காணொளியை உருவாக்கினர். இந்தக் காணொளியில், இறந்த தாரா தேவியின் மகன் தனஞ்சய் குமார் பின்வருமாறு கூறுகிறார்-
"நான் தனஞ்சய் குமார், என் அம்மா தாரா தேவி, நாங்கள் கும்பமேளாவிற்கு குளிக்கச் சென்றிருந்தோம். என் அம்மா இறந்துவிட்டார். சார் இங்கு வந்திருந்தார். அவர் உ.பி.யைச் சேர்ந்தவர். அவர் எங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார். நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டோம்."
இதேபோல், இறந்த தாரா தேவியின் கணவரும் காணொளியில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதைக் காணலாம், கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட உரையாடலில் கூட்ட நெரிசல் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை.


62 வயதான தாரா தேவி கும்பமேளாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். அவரது அண்டை வீட்டுக்காரரான சுர்சத்தி தேவியும் அவருடன் அந்த பயணத்தை மேற்கொண்டார்.
தனஞ்செய் கோண்ட் சொல்கிறார், “நெரிசல் ஏற்பட்ட பகுதியில் சுமார் 15-16 சடலங்கள் கிடந்தன. நான் அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினேன். என் அம்மா மற்றும் பக்கத்து வீட்டு பாட்டி சுர்சத்தி தேவியின் சடலங்கள் அடியில் கிடந்தன.
குடும்பத்தாரின் கூற்றுப்படி, தாரா தேவியின் உடலில் 35 என்ற எண் எழுதப்பட்டிருந்தது, சுர்சத்தி தேவியின் உடலில் 46 என்ற எண் எழுதப்பட்டிருந்தது.
பிரயாக்ராஜில் பல இடங்களில் அலைந்து திரிந்த பிறகு இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பிரயாக்ராஜ், புல்புர், ஜான்சி, கும்பமேளா பகுதியில் செக்டார் 20-ல் ஜனவரி 29ஆம் தேதி இறந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல், உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில், தர்மராஜ் ராஜ்பர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. அவரது மனைவி ராம்பத்தி தேவி மற்றும் மருமகள் ரீட்டா தேவி கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தனர்.
ஐராவத் மார்கில் நிகழ்ந்த கூட்ட நெரிசலின் வீடியோ ஒன்றும் பிபிசி இந்த புலனாய்வில் கண்டறியப்பட்டது. இந்த வீடியோவில், ராஜ்பர் குடும்பத்தினர் சம்பவ இடத்தில் இருவரின் சடலங்களுடன் அமர்ந்திருக்கின்றனர்.
ஜான்பூரில் தனது வீட்டில் நோட்டுக் கட்டுகள் இருக்கும் புகைப்படத்தை காட்டி, ராஜ்பர் சொல்கிறார், “அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குவதாக உறுதியளித்தது, ஆனால் காவல்துறையினர் இந்த பணத்தை (ஐந்து லட்சம்) கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.”



சங்கம் நோஸ் பகுதியில் நேர்ந்த கூட்ட நெரிசலுக்கு சில மணி நேரத்திற்கு பிறகு மேளா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிபிசியின் புலனாய்வு கண்டறிந்தது.
இந்த வீடியோவில் தரையில் 18 சடலங்கள் கிடப்பது தெரிகிறது. ஐந்து குடும்பங்கள் இந்த வீடியோவை பார்த்தே தங்களது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டனர் என்று புலனாய்வில் தெரியவந்தது. இந்த சடலங்களில் ஜார்கண்ட்டை சேர்ந்த ஷிவ்ராஜ் குப்தாவினுடையதும் ஒன்று.
ஷிவ்ராஜின் சடலத்தின் அருகே ஹரியானாவின் ராம்பதி தேவி, பிரயாக்ராஜின் ரீனா யாதவ், அசாமின் நிதிரஞ்சன் பால் மற்றும் ஜோன்பூரின் மந்திரா தேவியின் சடலங்களும் கிடத்தப்பட்டுள்ளன.





உத்தரப் பிரதேச அரசு ஷிவ்ராஜ் குப்தாவின் குடும்பத்தை தவிர மற்ற நான்கு குடும்பங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளித்தது.
ஷிவ்ராஜின் மகன் ஷிவம் குப்தா சொல்கிறார், “மார்ச் 21ஆம் தேதி, உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் வீட்டுக்கு வந்தார்.”
ரூ.5 லட்சத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்ட சில குடும்பங்கள், இறப்புக்கு மோசமான உடல்நிலையே காரணம் என கூறும் காகிதங்களில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதில் பீகாரின் கோபால்கஞ்சை சேர்ந்த ஷிவகாளி தேவி, உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூரை சேர்ந்த வைஜெயந்தி தேவி ஆகியோரின் குடும்பங்களும் அடங்கும்.
இந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எந்த இழப்பீட்டையும் பெறவில்லை.

மூன்றாவது வகையினர், உயிரிழந்தவர்களாக அரசால் அறிவிக்கப்படாத அல்லது இறப்பு நிவாரணமாக எதையும் பெறாதவர்கள்.
பிபிசியின் தீவிரமான புலனாய்வில், கும்பமேளா கூட்ட நெரிசலில் தங்களின் குடும்பத்தினரும் உயிரிழந்ததாக கூறிய மேலும் 19 குடும்பங்களையும் கண்டறிந்தோம்.
இந்த குடும்பங்கள் உத்தரப் பிரதேச அரசிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு அல்லது மர்மமான முறையில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் பெற்ற மொத்தம் 62 குடும்பங்களிலிருந்து வேறுபட்டவை.
கொரக்பூரின் ஷியாம்லால் கோன்ட் என்பவரின் குடும்பமும் இந்த 19 குடும்பங்களில் ஒன்று. பிரயாக்ராஜின் ஸ்வரூப் ராணி மருத்துவமனையில் தரப்பட்ட ஒரு துண்டு சீட்டில் அவர் ஜனவரி 29ஆம் தேதி காலை 10:02 மணிக்கு உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது.
ஷியாம்லால் கோண்டின் மகன் பகீரதி கோண்ட் சொல்கிறார்,” என் தந்தை நினைவிழந்த நிலையில் இருந்தார். அவர்கள் தரவுகளை சேமிப்பதற்காக பதிவேட்டு கோப்பு ஒன்றை வைத்திருந்தனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையிலேயே ஒரு புகைப்படம் எடுத்து அதை அந்த பதிவேட்டில் வைத்தனர்.”
“அந்த புகைப்படத்தை பார்த்து அப்பாவை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. கீழே விழுந்த பின்னர் அவரது தலை கீழே சென்றுவிட்டது, அவரது மார்பு மேலே வந்திருந்தது. அவரது தலையும் சற்று திரும்பியிருந்தது” என்று அவர் சொன்னார்.


"அவர்கள் எனக்கு எதையும் எழுத்து வடிவில் கொடுக்கவில்லை. அவர்கள் என்னை உடலை எடுத்துச் செல்லச் சொன்னார்கள். உடலை எடுத்துச் செல்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இறப்பை பதிவு செய்ய எதையும் எழுதித் தரவில்லை,” என்கிறார் பாகீரதி.
அதேபோல், ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் உயிரிழந்த அமித் குமாரின் குடும்பத்தையும் யாரும் கவனிக்கவில்லை.
34 வயதான அமித் குமார் இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். அவர் ஜனவரி 25 அன்று நான்கு குழந்தைகள், மனைவி மற்றும் தாயுடன் வீட்டை விட்டு புறப்பட்டார்.
நான்கு குழந்தைகளில், மூத்த மகளுக்கு ஏழு வயதாகிறது. கடைசியாக பிறந்த மகனுக்கு ஒரு வயதாகிறது. அவரது குடும்பம் ஜனவரி 27 அன்று கும்பமேளாவில் வைத்து மகனின் பிறந்தநாளைக் கொண்டாடியது.
"ஜனவரி 28 மதியம், நாங்கள் சங்கமத்திற்கு புறப்பட்டோம். நடக்க நடக்க அமித்தின் கால்கள் வீங்கிவிட்டன. என் மகன் கூட்டத்தில் சிக்கிக்கொண்டபோது, அவரால் எழுந்திருக்க முடியவில்லை,” என்று அமித் குமாரின் தாய் சரிதா தேவி கூறினார்.
கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்த பிறகு, அவர்கள் சிகிச்சை பெற அலைந்தனர். பிறகு மருத்துவமனைக்கு சென்றபோது அவர்களின் மகன் இறந்துவிட்டார், என்று அவரது அம்மா கூறுகிறார்.
மோத்திலால் நேரு மருத்துவக் கல்லூரியின் பிணவறையிலிருந்து, அமித் குமாரின் உடல் அரசு ஆம்புலன்ஸ் உதவியுடன் ஃபரிதாபாத்துக்கு அனுப்பப்பட்டது. அவரது உடலில் 59 என்ற எண் எழுதப்பட்டிருந்தது.
"நாங்கள் இறந்துவிட்டால், சவப்பெட்டியை தூக்க யாரும் இருக்க மாட்டார்கள். எங்களிடம் இருந்த ஒரே ஆதரவை கடவுள் எடுத்துக்கொண்டார். பிள்ளைகள் என்னிடம் வந்து தங்கள் தொலைபேசியில் அப்பாவை அழைக்கச் சொல்கிறார்கள். நான் அப்பா தொலைபேசியில்லாமல் வேலைக்குப் போயிருக்கிறார் என்று அவர்களிடம் சொல்கிறேன்,” என்று அமித்தின் தாய் கூறுகிறார்.
இதே போல், பீகாரின் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனைனா தேவியும் கும்பமேளாவில் உயிரிழந்தார். கும்பமேளாவில் ஜுன்சியை நோக்கிச் செல்லும் சமுத்திரகுப்த சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பம் சொல்கிறது.
நெரிசல் நேர்ந்த இடத்தில் சுனைனா தேவியின் உடல் கிடக்கும் புகைப்படம் ஒன்றும் குடும்பத்திடம் உள்ளது.
“ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு காவல்துறையினர் வீட்டுக்கு பலமுறை வந்தனர், ஆனால் அதை பெற நாங்கள் மறுத்துவிட்டோம்.
மூன்றல்ல, நான்கு அபாயகரமான நெரிசல்கள் நிகழ்ந்தன

உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தப் பின்னர், கும்பமேள பகுதியில் சங்கம் நோஸ், ஜுன்சியை நோக்கி சமுத்திரகுப்த சவுரஹா மற்றும் ஐராவத் மார்கில் மட்டுமே நெரிசல் ஏற்படவில்லை என பிபிசி கண்டுபிடித்தது.
கல்ப விருக்ஷ துவார் அருகே முக்தி மார்க் சவ்ராஹாவில் காலை சுமார் 8 மணிக்கு ஒரு பெரிய நெரிசல் ஏற்பட்டது.
அதன் புலனாய்வில், இங்கு உயிரிழந்த ஐந்து பேரை பிபிசி அடையாளம் கண்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள் கோரக்பூரை சேர்ந்த பண்ணே லால் ஷானி மற்றும் நாகினா தேவி, சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்த மீனா பாண்டே, ஹரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா தேவி மற்றும் பீகாரின் ஒளரங்காபாத்தின் சோனம் குமாரி ஆகியோர் இதில் அடங்கும்.
உயிரிழந்த இவர்களின் குடும்பங்கள் எதுவும் ரூ.25 லட்சம் இழப்பீட்டை பெறவில்லை.
அந்த ஐந்து குடும்பங்களில், சுல்த்தான்பூரின் மீனா பாண்டே மற்றும் ஹரியானாவின் கிருஷ்ணா தேவி ஆகியோரின் குடும்பங்கள் உத்தரப் பிரதேச அரசிடமிருந்து எந்த நிதி உதவியையும் பெறவில்லை.
ஆனால் மறுபுறம், முக்தி மார்க் சவ்ராஹாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.





கும்பமேளாவின் அதிகாரப்புர்வ இணையதளத்தில் நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 2750 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கும்பமேளா நடைபெறும் பகுதியை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டதுடன், அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள வானில் டிரோன்கள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ்கள் உட்பட 133 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன.
இப்படி இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி சென்றடையவில்லை. நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இறந்துபோன உறவினர்களின் உடல்களுடன் மாலை நான்கு மணிவரை அமர்ந்திருந்ததாக அவர்கள் சொல்கின்றனர்.
அந்த இடத்தில் தனது அண்டை வீட்டுக்காரர் மீனா பாண்டேவின் உடலுடன் அமர்ந்திருந்த அர்ச்சனா சிங் சொல்கிறார், “அங்கு எட்டு உடல்கள் கிடந்தன... அங்கு ஒரு ஆள் இருந்தார், அவள் இறந்துவிட்டாள், இப்போது நீ உன் உயிரை காப்பாற்றிக்கொள் என அவர் சொன்னார்.”
அர்ச்சனாவும், மீனாவும் மேளாவிற்கு சுல்தான்பூரிலிருந்து ஒன்றாக வந்திருந்தனர்.
அர்ச்சனா சொல்கிறார், “அந்தக் காட்சி காணத் தகுந்ததாக இல்லை. அங்கு ஒரு கேமரா பொருத்தப்பட்டிருந்தால், அந்த காட்சி எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம். அங்கு அது பொருத்தப்பட்டிருந்தால் அது அங்கு இருந்திருக்கவேண்டும். அவை மறைக்கப்பட்டிருக்கவேண்டும்.”
குற்றம் நடத்த இடத்தின் புகைப்படங்களை காட்டி அர்ச்சனா சொல்கிறார், “நாங்கள் அங்கும் பேசினோம். பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். உடல் அழுகிக்கொண்டிருந்தது, இரண்டு மணி முதலே உடல் நாற்றமெடுக்க தொடங்கிவிட்டது. உடல் நாள் முழுவதும் வெயிலில் கிடந்தது.
“நினைத்துப் பாருங்கள், எட்டு மணிக்கு(காலை) உயிரிழந்து மூன்று மணிவரை அங்கேயே இருந்தது. உடல் வெயிலில் 29ஆம் தேதி கிடந்தது. அதை மேலிருந்து பார்க்க ஒரு ஹெலிகாப்டரும் வந்தது. மக்கள் தங்கள் கைகளை உயர்த்தி உதவி கேட்டனர், ஆனால் எதுவும் நடக்கவில்லை.”
மீனா பாண்டேவின் குடும்பத்தினர் அவரது உடலை அவர்கள் கும்பமேளாவிற்கு செல்ல பயன்படுத்திய அதே பொலிரோ காரின் உதவியோடு வீட்டுக்கு கொண்டு சென்றதாக அர்ச்சனா தெரிவித்தார்.
மீனா பாண்டேவுக்கு அருகே, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பண்ணே லால் சானி மற்றும் நாகினா தேவியின் உடல்கள் கிடந்தன.

பண்ணே லால் சானியின் மனைவி குஷும் தேவி சொல்கிறார், “29ஆம் தேதி காலை சுமார் 5 மணியளவில் குளித்தோம். எனது கணவரும் நாகினா தேவியும் கூட்ட நெரிசலில் சுமார் 8 மணி அளவில் உயிரிழந்தனர்.
அவர் சொல்கிறார்,” எனது கணவர் இடது புறமும், நாகினா வலதுபுறமும் விழுந்தனர். மக்கள் அவர்கள் மீது ஏறிக்கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களது உடல்களுடன் வெயிலில் மாலை 4 மணிவரை அமர்ந்திருந்தோம். எங்களுக்கு தண்ணீர் தருவதற்கு யாரும் இல்லை.”
குஷும் சொல்கிறார், “அங்கு 8-9 உடல்கள் கிடந்தன. மக்களின் உடைமைகள் சிதறிக் கிடந்தன. ஷூக்கள், செருப்புகள், மற்றும் பைகள் ஆங்காங்கே கிடந்தன. உடல் முழவதும் காயத்தின் அடையாளங்கள் இருந்தன.
நாகினா தேவியின் மகன் சிக்கந்தர் நிஷாத் சம்பவ இடத்தின் புகைப்படத்தை காட்சி சொல்கிறார், “ இறந்துபோனவர்கள் எப்படி கிடக்கிறார்கள் என பாருங்கள். உதவுவதற்காக நிர்வாகத்திலிருந்து யாரும் வரவில்லை.”
அவர் சொல்கிறார், “கல்பவிருக்ஷ கதவின் அருகே ஒரு நெரிசல் ஏற்பட்டது. எனது தாய்க்கு நெற்றி, மார்பு மற்றும் கைகளில் காயத்தின் அடையாளங்கள் இருந்தன. மக்கள் அவர் மீது ஏறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரது உடலில் 62 என்ற எண் எழுதப்பட்டிருந்தது.”
பண்ணே லால் சானியின் உடலில் 64 என்ற எண் எழுதப்பட்டிருந்தது.
பீகார் ஒளரங்காபாத்தை சேர்ந்த ரஞ்சனா குமாரியும் தனது மகள் சோனம் குமாரியின்(வயது 21) உடலுடன் இங்கு அமர்ந்திருந்தார்.
ரஞ்சனா குமாரி சொல்கிறார், “எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர், ஒருவர் சோனம் நிரந்தமாக சென்றுவிட்டார். நாங்கள் இருவரும் குளிப்பதற்காக சென்றுகொண்டிருந்தோம், திடீரென பின்னாலிருந்து ஒரு கூட்டம் வந்து நாங்கள் இருவரும் நசுக்கப்பட்டோம்.”
அவர் சொன்னார், “அவள் கூட்டத்தில் முன்னால் நகர்ந்தபோது கத்தினாள், “அம்மா என்னை காப்பாற்றுங்கள்.. நான் அவளிடம அங்கேயே நில் முன்னால் செல்லாதே என சொன்னேன். அதன் பின், நாங்கள் இருவரும் நெரிசலில் விழுந்தோம்.”
“ஒரு துறவி என் கையை பிடித்து வெளியே இழுத்தார், ஆனால் எனது மகள் கதறிக்கொண்டேயிருந்தாள், அவளை யாரும் காப்பாற்றவில்லை.”
அவர் சொல்கிறார், “நெரிசல் காலையில் சுமார் 8 மணிக்கு ஏற்பட்டது. எனது மகளின் உடல் மூன்று உடல்களுக்கு அடியில் புதைந்து கிடந்தது. எப்படியோ அந்த மூன்று உடல்களை அப்புறப்படுத்தி அவளை வெளியே எடுத்தோம். நாங்கள் அங்கு மாலை 4 மணிவரை அமர்ந்திருந்தோம், எங்களுக்கு எந்த உதவியும் வரவில்லை.”
அதே நெரிசலில் உயிரிழந்த ஹரியானாவின் ரோஹ்டக்கை சேர்ந்த கிருஷ்ணா தேவியின் குடும்பத்திற்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிருஷ்ணா தேவி தனது மருமகள் சுனிதா தேவியுடம் கும்பமேளாவிற்கு சென்றிருந்தார்.
சுனிதா தேவி சொல்கிறார், “நாங்கள் சென்றுகொண்டிருந்த திசையிலிருந்து ஒரு கூட்டம் வந்தது, முட்டிமோதிக்கொண்டிருந்தபோது நாங்கள் கிழே விழுந்தோம். அம்மா நேராக விழுந்தார், நான் குப்புற விழுந்தேன். யாராவது எங்களை காப்பாற்றும்படி நான் கத்திக்கொண்டிருந்தேன்.
இந்த அறிக்கை எவ்வாறு தயாரிக்கப்பட்டது?

உயிரிழந்த யாருடைய பெயரையும் அரசு அறிவிக்காவிட்டாலும், நெரிசல் தொடர்பான ஊடக அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர், உயிரிழந்த சிலரின் பெயர்களை பிபிசி கண்டுபிடித்தது. நாங்கள் இந்த பெயர்களை ஆய்வு செய்து அவர்களுடைய வீடுகளை அடைந்தோம்.
இந்த அறிக்கையை தயார் செய்வதற்கு முன்பாக, நாடு முழுவதும் பரவியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் பேசியிருக்கிறோம்.
அவர்களுடைய உறவினர்கள் ஜனவரி 29ஆம் தேதி மேளா பகுதியில் நிகழ்ந்த நெரிசலில் உயிரிழந்ததாக அவர்கள் சொல்கின்றனர், அவர்கள் கூறுவதற்கு உறுதியான ஆதாரத்தை அவர்கள் பிபிசியிடம் காட்டியிருக்கின்றனர்.
சில பெயர்களை பிபிசி உள்ளூர் செய்தியாளர்களிடமிருந்து பெற்றது, அதன் பின்னர் நாங்கள் அந்த குடும்பங்களை எட்டினோம்.
எங்கள் அறிக்கையில் இருப்பதைவிட உண்மையான இறப்புகள் இன்னமும் அதிகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன, ஆனால் முழுமையான புலனாய்வுக்கு பின் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் உயிரிழப்புகளை நாங்கள் 82 என சொல்கிறோம் ஏனென்றால் இவ்வளவு இறப்புகளுக்கு மட்டும்தான் உறுதியான ஆதாரங்களும், நேரில் பார்த்த சாட்சியங்களும் பிபிசியிடம் உள்ளன.
கிரெடிட்ஸ்
புலனாய்வு மற்றும் செய்தி: அபினவ் கோயல்
புகைப்படங்கள்: தேவேஷ் சோப்ரா, கெட்டி
தயாரிப்பு: காஸி ஜைய்த்
ஓவியம்: புனித் பர்னாலா
வெளியீடு நாள்: ஜூன் 10, 2025

