You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எறும்புகள்: போரில் உயிர்த் தியாகம் செய்து ராணி எறும்பைக் காக்கப் போராடுவது ஏன்?
காலில் உயிரிழந்த ஓர் எறும்பின் சடலம், தலைக்கு மேலே ஆன்டனாவில் மற்றுமொரு எறும்பின் தலை என்று இந்தக் கட்டெறும்பு அலைவது போர்க்களத்தில்...
ஆம், இது எறும்புகளின் போர்க்களம். இப்படி வெற்றிக் களிப்பில் மகுடம் சூடியதைப் போல் இறந்த எதிரி எறும்புகளைச் சுமந்து செல்லும் இந்தக் கட்டெறும்பும் அதன் படையைச் சேர்ந்த மற்ற எறும்புகளும் ஒரு புற்றின்மீது படையெடுத்துச் சென்றன.
அந்த மூர்க்கமான படையெடுப்பில் கிடைத்த வெற்றியின் அடையாளமாக இப்படிச் சில எறும்புகள், தாம் வீழ்த்திய எறும்புகளின் சடலங்களைச் சுமந்தபடித் திரிந்தன.
“பொதுவாக எறும்புகளுக்கு இடையே உணவைச் சூறையாடுவதற்காக போர் நடக்கும். அதுபோக, வேறு பல காரணங்களுக்காகவும் எறும்புகளிடையே போர் நிகழும். உதாரணமாக slave making ants என்ற வகையில் அடிமைகளைப் பிடித்து வருவதற்காகவே வேறு புற்றின்மீது படையெடுக்கின்றன,” என்கிறார் கோவாவில் உள்ள ஆரண்யா சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.ப்ரொனோய் பைத்யா.
இந்தப் போருக்கு உணவைச் சூறையாடும் முயற்சி ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோன்ற மற்றுமொரு போரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. போரில் மோதிக்கொண்ட இரண்டுமே கூண்முதுகு எறும்பு என்ற வகையைச் சேர்ந்தவை. அருகருகே இருக்கும் இருவேறு புற்றுகளில் வாழ்கின்றன.
அந்தப் போருக்கு நடுவில் தனியாகச் சிக்கிய ஓர் எறும்பை ‘எதிரிப்படை’ எறும்புகள் கூட்டு சேர்ந்து தாக்கிக் கொண்டிருந்தன.
“போர்களின்போது, எதிரிகள் ராணியை கைப்பற்றிவிட்டால் சண்டை முடிந்துவிடும். அதைத் தடுக்க படையெடுப்புக்கு உள்ளாகும் எறும்புப் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள் புற்றைத் தற்காத்து மூர்க்கமாகப் போரிடும். எப்படியாவது ராணியைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதற்காக அவைதம் உயிரைக்கூட தியாகம் செய்யும்,” என்கிறார் அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையின் ஆய்வு மாணவியான சஹானாஸ்ரீ.
ராணிக்காக உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு மற்ற எறும்புகள் பாசப் பிணைப்போடு இருப்பது ஏன்?
“எறும்புகள் தன்னைவிடத் தமது சமூகத்திற்கே முன்னுரிமை அளித்து உழைக்கும் குணம் கொண்டவை. பொதுவாக, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கி, தமது மரபணுவை அழியவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே அனைத்து உயிரினங்களின் தலையாய பணி. அதற்காகவே எறும்புகளும் ராணியைக் காக்க முனைகின்றன,” என்கிறார் ப்ரொனோய்.
ஒளிப்பதிவு & தயாரிப்பு: க.சுபகுணம்
படத்தொகுப்பு: டேனியல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)