குழந்தைக்கு நிகரான எடையில் பிரமாண்ட ‘கோலியாத் தவளை’ – காப்பாற்ற போராடும் தன்னார்வலர்

    • எழுதியவர், ஹெலன் ப்ரிக்ஸ்
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்

செட்ரிக் ஃபோக்வான் கோலியாத் தவளையை முதன்முதலில் பார்த்தபோது அதன் அளவைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், ஈர்க்கப்பட்டார்.

ஒரு பூனையின் அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருந்த அதுதான் உலகின் மிகப்பெரிய தவளை.

ஏறக்குறைய ஒரு குழந்தையை வைத்திருப்பதைப் போல, ஒரு மீட்புப் பணியில் தவளை ஒன்றைத் தான் கையாண்டதாக அவர் கூறுகிறார்.

கேமரூனிய காட்டுயிர் பாதுகாவலரான அவர் அந்தத் தவளையிடம் மிகவும் ஈர்க்கப்பட்டார். அழியும் நிலையிலும் அந்த உயிரினத்தின் எதிர்காலத்திற்காகப் போராடுவதற்கு அவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார்.

“இந்த உயிரினம் தனித்துவமானது. உலகிலேயே மிகப் பெரியது. இதை வேறு எங்கும் எளிதில் பார்க்க முடியாது என்று இதைக் கண்டுபிடித்தபோது நான் கூறினேன். அதற்கு நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

மேலும், “அந்தப் பகுதியிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் அதைப் போன்ற ஓர் உயிரினம் இருப்பது தங்களது பாக்கியம் எனக் கூறுகிறார்கள். அவர்கள் அதைத் தங்கள் கலாசாரத்தோடு இணைக்கிறார்கள்,” எனக் கூறினார்.

பல தசாப்தங்களாக கேமரூன் மற்றும் ஈக்வடோரியல் கினியாவில் கோலியாத் தவளை உணவு மற்றும் வளர்ப்புப் பிராணி வர்த்தகத்திற்காக அதிகமாக வேட்டையாடப்படுகிறது.

நதிகள், நீரோடைகளுக்கு அருகிலுள்ள அதன் வாழ்விடங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்தத் தவளை இனம் இப்போது அதிகாரபூர்வமாக அழியும் அபாய நிலையில் உள்ள உயிரினங்களுக்கான சிவப்புப் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தவளை குறித்து அறிவியல் உலகில் அதிக பதிவுகள் இல்லை. கேமரூனில் கூட பல உள்ளூர் மக்களுக்கு சூழலியல் அமைப்புகளில் அது செய்யும் சேவை குறித்த மதிப்பு தெரியாது. இந்தத் தவளைகள் பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளை வேட்டையாடுவது உட்படப் பல சூழலியல் சேவைகளைச் செய்கின்றன.

இந்த ‘பிரமாண்ட’ தவளையை வேட்டையாடிக் கொண்டிருந்த நபர்களை மக்கள் அறிவியல் திட்டத்திற்குள் கொண்டு வந்து மக்கள் விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கு இதைப் பாதுகாக்கும் குழு முயன்று வருகிறது. அவர்கள் தவளையை வேட்டையாடுவதற்குப் பதிலாக, அது இருக்கும் இடங்களைப் பதிவு செய்வது, படம் எடுப்பது போன்ற செயல்பாடுகளின் வழியே, கோலியாத் தவளையைப் பாதுகாக்க, பாதுகாப்புக் குழுவுக்கு உதவுகின்றனர்.

இதற்கான மாற்று உணவு ஆதாரத்தை வழங்குவதற்கு, நத்தை வளர்ப்பு மையங்களை அமைக்க உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

மவுன்ட் இன்லோனாகோ ரிசர்வ பகுதியில் உள்ள நதிகளுக்கு கோலியாத் தவளைகள் திரும்புகின்றன. இது பாதுகாப்புப் பணிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.

முன்பு இதை வேட்டையாடிக் கொண்டிருந்த ஒருவர், தனது அண்டை வீட்டார் கோலியாத் தவளை ஒன்றைப் பிடித்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, செட்ரிக் அந்தத் தவளையை மீட்டு காட்டிற்குத் திருப்பி அனுப்பினார்.

“இதன்மூலம் நாம் இந்தத் தவளையை என்றென்றும் பாதுகாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதை நினைத்து நாம் பெருமைப்படலாம்,” என்று அவர் கூறுகிறார்.

ஃபானா & ஃப்ளோரா இன்டர்நேஷனல், காட்டுயிர் பாதுகாப்பு சங்கம், பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் கன்சர்வேஷன் லீடர்ஷிப் ப்ரோகிராம் என்ற திட்டத்தின் கீழ் கோலியாத் தவளையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: