காணொளி: ஹெச்1பி விசா கட்டண உயர்வால் அமெரிக்கா கடும் பாதிப்பை சந்திக்குமா?
பயம், குழப்பம், பின்னர் வெள்ளை மாளிகையின் விளக்கம் என ஹெச் 1-பி விசாவின் கீழ் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான வார இறுதியாக இருந்தது.
வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன்மிகு தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி 100,000 டாலராக அறிவித்தார். இது தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை வெளிநாடு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தன, ஹெச்1பி விசா வைத்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள் விமான டிக்கெட் தேடி அலைந்தனர், உத்தரவை புரிந்துகொள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் இரவு பகலாக வேலை செய்தனர்.
சனிக்கிழமை, வெள்ளை மாளிகை இந்தக் குழப்பத்தைத் தணிக்க முயன்று, கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதுவும் ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. ஆனால், நீண்ட காலமாக இருந்த ஹெச் - 1பி திட்டத்தின் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.
இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும், உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒன்றாக கருதப்பட்டது.
இந்த மாற்றங்களுடனும், மூன்று தசாப்தங்களாக இந்தியர்களின் "அமெரிக்க கனவை" நனவாக்கி, அமெரிக்க தொழில்களுக்கு திறமையான ஊழியர்களை வழங்கிய ஹெச்1பி திட்டத்தை இந்தக் கொள்கை பெருமளவு தடுக்கிறது.
இந்த ஹெச் - 1பி திட்டம் இந்தியாவையும் அமெரிக்காவையும் மாற்றியமைத்தது.
இந்தியர்களுக்கு, இது ஒரு கனவு பயணமாக மாறியது.
சிறு நகரங்களைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் டாலர்களில் சம்பாதிக்க ஆரம்பித்தனர், குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்தன, விமான நிறுவனங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல துறைகள் உலகம் சுற்றும் இந்தியர்களுக்காக உருவாயின.
இந்தத் திட்டம் ஆய்வகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், புதிய நிறுவனங்களை நிரப்பும் திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. இன்று, இந்திய வம்சாவளியினர் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். அமெரிக்க மருத்துவர்களில் சுமார் 6% இந்தியர்கள்.
ஹெச் -1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், சமீப ஆண்டுகளில் 70% க்கும் மேல் விசாக்கள் இந்தியர்களுக்கு கிடைத்தன. (சீனா இரண்டாவது இடத்தில், சுமார் 12%)
தொழில்நுட்பத் துறையில், இந்தியர்களின் பங்கு இன்னும் பெரியது. 2015-ல் கிடைத்த தகவலின்படி, 80% க்கும் மேற்பட்ட "கணினி" வேலைகள் இந்தியர்களுக்கு சென்றன. அந்த நிலை இப்போதும் பெரிதாக மாறவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவத் துறையிலும் இது தெளிவாகிறது. 2023-ல், 8,200-க்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசா பெற்றவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா, சர்வதேச மருத்துவ பட்டதாரிகளின் மிகப்பெரிய மூலாதாரமாக உள்ளது. (பொதுவாக ஹெச் - 1பி விசாக்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்) அவர்களில் 22% இந்தியர்கள். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் கால் பங்கு வெளிநாட்டவர்கள் என்ற நிலையில், ஹெச் - 1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் மொத்தத்தில் 5-6% இருக்கலாம்.
டிரம்பின் சமீபத்திய அறிவிப்பு அமெரிக்காவை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பான முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



