காணொளி: அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு வழங்கிய மரியா சொன்னது என்ன?
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது, தான் பெற்ற நோபல் அமைதிப் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கியதாக தெரிவித்தார்.
மச்சாடோவின் இந்த செயலை அதிபர் டிரம்ப் பாராட்டினார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், “மரியா ஒரு சிறந்த பெண். அவர் பல துன்பங்களைத் தாங்கியுள்ளார். நான் செய்த பணிக்காக அவர் தனது நோபல் அமைதி பரிசை எனக்கு வழங்கினார்” என்று பதிவிட்டார். மேலும், “இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு அழகான செயல். நன்றி, மரியா!” என்றும் கூறினார்.
இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை. சமீபத்தில், வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுவேலாவை ஆட்சி செய்து வருகிறார். மதுரோ ஆட்சிக்காலத்தில் டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுவேலாவின் துணை அதிபராக இருந்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



