பாலத்தீனம்: ஐ.நா. தீர்மானத்தில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த இந்தியா
ஐ.நாவில் பாலத்தீனத்திற்கு கூடுதல் உரிமைகளை பொதுச் சபை வழங்கியிருப்பதுடன், முழு உறுப்பினர் அந்தஸ்து கொடுப்பதற்கான சாதகமான பரிசீலனைகளை செய்யுமாறு பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஐ.நாவில் பாலத்தீனத்தை முழு உறுப்பு நாடாக அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது.
ஐநா அவையில் பாலத்தீனம் 2012ஆம் ஆண்டு முதல் பார்வையாளர் அந்தஸ்து பெற்றுள்ளது. ஐ.நாவில் ஒரு நாட்டிற்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
பொதுச்சபையில் நிறைவேறியுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஐநாவில் முழு உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியைத் தொடர்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், பயங்கரவாத நாட்டை தனது அமைப்புக்கு ஐநா வரவேற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.
சபையில் உரையாற்றும் போது ஐநா சாசனத்தின் நகலை துண்டுதுண்டாக்கிய அவர், தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் உறுப்பினர்களும் இதையே செய்ததாக சாடினார்.
பல ஐரோப்பிய நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிறைவேறிய ஐநா தீர்மானம் பாலத்தீனத்திற்கு அவையில் கூடுதல் உரிமைகளை வழங்குகிறது. இதன் மூலம் விவாதங்களில் முழுமையாக பங்கேற்கவும், நிகழ்ச்சி நிரல்களை முன்மொழியவும் மற்றும் அதன் பிரதிநிதிகளை குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கிறது.
இந்தத் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
எனினும், அதற்கு வாக்களிக்க உரிமை இல்லை. இந்த அதிகாரத்தை பாதுகாப்பு கவுன்சில் வழங்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது தொடர்பான விவகாரம் பல தசாப்தங்களாக சர்வதேச சமூகத்தின் முன் உள்ளது.
1988 ஆம் ஆண்டில், பாலத்தீனர்களின் முக்கிய பிரதிநிதியான பாலத்தீன விடுதலை அமைப்பு முதலில் பாலத்தீன அரசை நிறுவுவதாக அறிவித்தது.
193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 139 நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது. ஆனால், பெரும்பாலும் இது அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், பாலத்தீனர்கள் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளில் வரையறுக்கப்பட்ட சுய-அரசாங்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த அரசு காசா பகுதியில் ஹமாஸிடம் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால், ஐநா இரண்டு பகுதிகளையும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவும், ஒரே அரசியல் அமைப்பு கொண்ட பகுதியாகவும் கருதுகிறது.
இஸ்ரேல் பாலத்தீன அரசை அங்கீகரிக்கவில்லை. மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலத்தீன அரசு உருவாவது தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இஸ்ரேல் வாதிடுகிறது.
இஸ்ரேலுடன் இணைந்து ஒரு சுதந்திர பாலத்தீன அரசை உருவாக்க அமெரிக்கா ஒப்புதல் அளிக்கிறது. இது இரு நாடுகள் தீர்வு என அழைக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய அரசு இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே வர வேண்டும் என்று கூறுகிறது.
கடந்த மாதம் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க கோரி பாதுகாப்பு சபையில் அல்ஜீரியா கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தோற்கடித்தது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



