You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?
- எழுதியவர், மெடலின் ஹால்பெர்ட்
- பதவி, நியூயார்க் நீதிமன்றத்தில் இருந்து
அமெரிக்காவில் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ முதன்முறையாக நியூயார்க் நகர நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, அவரது கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குகள் உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.
பின்னர் அவர், நிரம்பி வழிந்த செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் தான் இப்போதுதான் "கடத்தப்பட்டதாக" கூறினார்.
அவர் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக மதுரோவிடம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டார்.
"நான் நிக்கோலஸ் மதுரோ. நான் வெனிசுவேலா குடியரசின் அதிபர், நான் ஜனவரி 3ஆம் தேதி முதல் இங்கு கடத்தப்பட்டு இருக்கிறேன்," என்று அவர் நீதிமன்றத்தில் ஸ்பானிய மொழியில் அமைதியாக கூறினார்.
பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நீதிமன்றத்திற்காக அதை மொழிபெயர்த்தார். "நான் வெனிசுவேலாவின் கராகஸில் உள்ள எனது வீட்டில் வைத்து சிறைபிடிக்கப்பட்டேன்." என்றார் மதுரோ.
மதுரோ பேசுகையில் விரைந்து குறுக்கிட்ட 92 வயதான நீதிபதி, "இவை அனைத்தையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் வரும்" என்று கூறினார்.
திங்கட்கிழமை பிற்பகல் நடந்த அந்த பரபரப்பான 40 நிமிட குற்றவியல் விசாரணையின் போது, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர்.
"நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன்," என்று மதுரோ கூறினார். ஃபுளோரஸ் தானும் "முற்றிலும் நிரபராதி" என்று கூறினார்.
63 வயதான மதுரோவும் அவரது மனைவியும் சனிக்கிழமை வெனிசுவேலாவில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர், நியூயார்க் கொண்டு செல்லப்பட்டனர். இது ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களையும் கொண்ட ஒரு திடீர் இரவு நேர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சட்டைகள் மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்திருந்த அவர்கள், விசாரணை நேரத்தில் ஸ்பானிய மொழிபெயர்ப்பைக் கேட்பதற்காக ஹெட்ஃபோன் அணிந்திருந்தனர்; அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கறிஞர் அமர்ந்திருந்தார். மதுரோ ஒரு மஞ்சள் நிற சட்டப் புத்தகத்தில் நுணுக்கமாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு அதைத் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமா என்று நீதிபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
மதுரோ அறைக்குள் நுழைந்த போது, பார்வையாளர்களில் இருந்த பலரை நோக்கித் தலையசைத்து அவர்களை வாழ்த்தினார்.
விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் அவர் இந்த அமைதியான மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை தொடர்ந்தார். பொதுமக்கள் பகுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மதுரோ தனது குற்றங்களுக்காக "விலை கொடுக்க நேரிடும்" என்று கத்திய போதும் அவர் அதே அமைதியைக் கடைப்பிடித்தார்.
"நான் அதிபர் மற்றும் போர்க்கைதி," என்று அவர் பார்வையாளர்களில் இருந்த அந்த நபரை நோக்கி ஸ்பானிய மொழியில் உரக்க கூறினார். பின்னர் அந்த நபர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் உணர்ச்சிப்பூர்வமானவையாக இருந்தன. வெனிசுவேலாவைச் சேர்ந்த செய்தியாளர் மைபோர்ட் பெட்டிட், மதுரோ கைது செய்யப்பட்டபோது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் கராகஸில் உள்ள ஃபியூர்டே டியுனாவுக்கு அருகிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை சேதப்படுத்தியதாகக் கூறினார்.
தனது முன்னாள் தலைவர் அமெரிக்க மார்ஷல்களால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்று அவர் கூறினார்.
மதுரோவின் மனைவி ஃபுளோரஸ், வார இறுதியில் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட காயங்களுக்காக கண்கள் மற்றும் நெற்றியில் கட்டுகளுடன் மிகவும் அமைதியாக இருந்தார்.
அவர் மெதுவாகப் பேசினார், அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர்கள் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
வழக்கு விசாரணையின் போது மதுரோவும் அவரது மனைவியும் பிணை கோரவில்லை. ஆனால் பின்னர் அவ்வாறு செய்யலாம்.
போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்ததாக மதுரோ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மதுரோவின் மனைவி, மகன் மற்றும் பலருடன் சேர்த்து அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 17ஆம் தேதி நடக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு