ஐக்கிய அரபு அமீரகம், சௌதியின் இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா?

அமெரிக்கா - இரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் சமீபத்தில் தங்கள் வான்வெளியை இரான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தன.
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை.

இருப்பினும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இந்த ஆபத்தைத் தவிர்க்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வற்புறுத்தல்களுக்கு இரான் அடிபணியும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளின் முயற்சிகள் தற்போது தெளிவாகத் தெரிகின்றன. பதற்றத்தைத் தணிக்க இந்நாடுகள் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் உள்ளன.

கடந்த புதன்கிழமை, அமெரிக்க அதிபர் இரானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். கால அவகாசம் முடிந்து கொண்டிருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்போது துருக்கியில் உள்ளார். அங்கு அவர் துருக்கி அதிபர் எர்துவானைச் சந்தித்துப் பேசினார்.

ஏவுகணைத் திட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இரான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று அராக்சி தெரிவித்தார்.

"இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவை இஸ்ரேல் தூண்டி வருகிறது. இஸ்ரேலின் இந்த முயற்சிகள் பிராந்தியத்தில் ஏற்கனவே பலவீனமாக உள்ள அமைதியை கடுமையாக பாதிக்கக்கூடும்," என்று சனிக்கிழமை இரான் வெளியுறவு அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான் கூறினார்.

"இரான் மீதான எந்தவொரு ராணுவத் தலையீட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை அனைத்து தரப்பினரிடமும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இரானின் உள்நாட்டுப் பிரச்னைகள் எந்தவொரு வெளிநாட்டுக் குறுக்கீடும் இன்றி தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் பெரிய அளவில் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம்

அமெரிக்கா - இரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இரானுடன் ஒப்பந்தம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் ஒப்பந்தங்களைச் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மிரட்டல்கள் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டதற்கு இரான் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. தாங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுப்போம் என்றும் இரான் அறிவித்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டலை இரான் நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்றும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு சில வரம்புகளை ஏற்குமாறும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

லெபனானின் ஹெஸ்பொலா மற்றும் யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை இரான் நிறுத்த வேண்டும் என்பதும் அமெரிக்காவின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்சேத் கூறுகையில், "ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரானிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அணு ஆயுதத் திறனைப் பெறும் முயற்சியில் இரான் ஈடுபடக்கூடாது," என்றார்.

"அதிபர் எதை எதிர்பார்க்கிறாரோ, அதைச் செய்து முடிக்க பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்கும்," என்றும் ஹெக்சேத் குறிப்பிட்டுள்ளார்.

இரான் மீது தாக்குதல் நடத்தினால், அது மத்திய கிழக்கில் ஒரு பெரிய போராக வெடிக்கும் என்றும், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை இரான் இலக்காகக் கொள்ளக்கூடும் என்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்காவின் நிபந்தனைகள் சரணடைவதற்குச் சமம் என்று இரான் கருதுகிறது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இந்த நிபந்தனைகளைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுடனான 12 நாள் போரினாலும், அமெரிக்கா இரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலாலும், இரானின் பாதுகாப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, 1979 புரட்சிக்குப் பிறகு நடந்த கொடிய வன்முறை நிறைந்த போராட்டங்களால், இரான் முன்னெப்போதும் இல்லாத சமூக ரீதியான அழுத்தங்களையும் தற்போது சந்தித்து வருகிறது.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த வாரம் சௌதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடன் இந்த நெருக்கடி குறித்துப் பேசியுள்ளார்.

இந்த உரையாடலுக்குப் பிறகு, இரான் மீது தாக்குதல் நடத்த சௌதியின் வான்பரப்பையோ அல்லது நிலப்பகுதியையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று பெசெஷ்கியானிடம் சௌதி இளவரசர் உறுதியளித்துள்ளார்.

சௌதி அரேபியாவிற்கு முன்னர், இரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அசர்பைஜானும் இதே முடிவை அறிவித்தது.

சௌதி இளவரசர் முகமது பின் சல்மானின் சகோதரரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான இளவரசர் காலித் பின் சல்மான், டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த வியாழக்கிழமை வாஷிங்டன் சென்றடைந்தார்.

பிராந்திய ஒற்றுமையில் துருக்கியின் முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது?

அமெரிக்கா - இரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, துருக்கிய அதிபர் எர்துவான் (நடுவில்), இரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி (இடது) மற்றும் துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் (வலது)

துருக்கி இப்போது மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறது.

ஐரோப்பியர்களால் 'ஐரோப்பிய ஒன்றியம்' போன்ற ஒரு அமைப்பை உருவாக்க முடியும் என்றால், மத்திய கிழக்கில் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் கேள்வி கூறியுள்ளார்.

ஹக்கான் ஃபிடானின் இந்த கருத்துக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் சல்மே கலீல்சாத் தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார்.

"ஐரோப்பாவை உதாரணமாகக் காட்டி அமைச்சர் ஃபிடான் பேசுகையில், இங்கு துருக்கியின் ஆதிக்கமோ, அரபு நாடுகளின் ஆதிக்கமோ அல்லது பாரசீக ஆதிக்கமோ இருக்காது... என்று குறிப்பிட்டுள்ளார்," எனகலில்சாத் பதிவிட்டுள்ளார்.

"ஐரோப்பா ஒன்றுமில்லாத நிலையில் இருந்து இன்று இருக்கும் நிலைக்கு எப்படி உயர்ந்தது என்பதைப் பாருங்கள். நம்மால் ஏன் முடியாது? இது ஒரு நல்ல கேள்வி. அமைச்சர் ஃபிடானின் இந்தக் கேள்வியையும் சிந்தனையையும் மத்திய கிழக்கின் சிந்தனையாளர்களும் தலைவர்களும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்".

கலீல்சாத்தின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும் விதமாக, மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிடியூட்டின் துருக்கிய திட்டத்தின் நிறுவன இயக்குநரான கோனுல் டோல், "மத்திய கிழக்கு உலகின் மிகக் குறைந்த நிறுவனமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், இது தற்செயல் நிகழ்வு அல்ல. பல ஆட்சிகள் வலுவான பிராந்திய நிறுவனங்களை அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. உண்மையான அமைப்புகள் உருவானால், அதிகாரம் பகிரப்பட வேண்டும், விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு சில வரம்புகள் விதிக்கப்பட வேண்டும். இதனால் தான் 'அரபு லீக்' போன்ற அமைப்புகள் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறியுள்ளார்.

"இப்பகுதிகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, பொதுவான விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்ற அழுத்தம் அங்கு இல்லை. கோட்பாட்டளவில் இது ஒரு சிறந்த யோசனை என்றாலும், தற்போதைய சூழலில் இதற்கான அரசியல் விருப்பமும் சூழலும் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று கோனுல் டோல் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு பின்னடைவா?

அமெரிக்காவின் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' , ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

அதில், இரான் மீதான தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அறிவித்திருப்பது, டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

"இரானுடன் போர் ஏற்பட்டால் அதில் சௌதி அரேபியா இழுக்கப்படலாம் என்பதால் அந்த நாடு கவலைப்படுகின்றது. ஏனென்றால், 2019ஆம் ஆண்டு, அதிபர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் சௌதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்களை இரான் தாக்கியது"என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

"இரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் தாக்குதல்களுக்கு சௌதியும் அமீரகமும் ஏற்கனவே இலக்காகி உள்ளன. இரானின் பலம் குறைவது அவர்களின் நலனுக்கு நல்லதுதான். ஆனால், பிராந்திய அமைதியின்மை மற்றும் இரானின் பதிலடிக்கு அஞ்சி, அவர்கள் அமெரிக்காவின் கேடயமாக மாற விரும்பவில்லை," என்று சர்வதேச அமைதிக்கான கார்னெகி அமைப்பைச் சேர்ந்த கரிம் சஜாத்பூர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை, மத்திய கிழக்கில் ஏராளமான போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப் , ஒரு ஒப்பந்தத்தை எட்டுமாறு இரானுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

"இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து நியாயமான ஒப்பந்தத்தைச் செய்யும் என்று நம்புகிறேன். அணு ஆயுதங்கள் இல்லாத நிலை அனைவருக்கும் நல்லது. காலம் கடந்து கொண்டிருக்கிறது, இது மிகவும் முக்கியமான தருணம்," என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

"சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நடவடிக்கைகள் டிரம்ப் நிர்வாகத்தின் ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களை சிக்கலாக்கும், ஆனால் அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், இந்தத் தடைகள் அவர்களைத் தடுத்து நிறுத்திவிடாது" என்று முன்னாள் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தனர்.

அமெரிக்கா இரானை தாக்காமல் தடுக்க முடியுமா?

அமெரிக்கா - இரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், Mike Blake/Reuters

படக்குறிப்பு, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வு பெற்ற விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் டெப்டுலா இது குறித்து கூறுகையில், "ராணுவ ரீதியாகப் பார்க்கும் போது, சௌதி மற்றும் அமீரகத்தின் இந்த முடிவு அமெரிக்காவின் திட்டங்களைச் சற்றே சிக்கலாக்கும் மற்றும் செலவுகளை அதிகரிக்கும். ஆனால், இது இரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை முழுமையாகத் தடுத்துவிடாது," என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்துள்ளார்.

1991-ல் சௌதி அரேபியாவில் இருந்த ஒரு கட்டளை மையத்திலிருந்து அமெரிக்கா வழிநடத்திய 'டெசர்ட் ஸ்டார்ம்' போர் நடவடிக்கையில் டெப்டுலா முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டிரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கில் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கி போர்க்கப்பலையும், க்ரூயிஸ் ஏவுகணைகள் ஏந்திய பிற போர்க்கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.

ஜோர்டான் நாட்டில் 'எப்ஃ -15ஈ' ரக போர் விமானங்களின் பல படைப்பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.

"இந்த நடவடிக்கை, அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று யோசிக்கும் மற்ற பிராந்திய நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறது"என்று 2016 முதல் 2019 வரை அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு தளத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் ஜோசப் வோட்டல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறினார்.

"இதன் இறுதி விளைவு என்னவென்றால், இரான் மீது நடக்கும் எந்தப் போரும் பிராந்திய கூட்டணியை விட அமெரிக்க சார்புடையதாக இருக்கும்"என்றும் அவர் கூறினார்.

"சௌதி அரேபியாவின் வான்பரப்பையோ அல்லது தளங்களையோ பயன்படுத்த முடியாவிட்டாலும், அமெரிக்காவால் இரானின் இலக்குகளைத் தாக்க முடியும். ஜோர்டான், சிரியா மற்றும் இராக் வான்பரப்பு வழியாக போர் விமானங்களை அனுப்பலாம். நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் மற்றும் அரபிக் கடலில் உள்ள போர்க்கப்பல்களைப் பயன்படுத்த முடியும்" என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எழுதியது.

அமெரிக்கா - இரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வான்பரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அமெரிக்கா அபுதாபியில் ஒரு ராணுவத் தளத்தையும் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியின் தெற்கே அமைந்துள்ள அல் தஃப்ரா அமெரிக்க விமானத் தளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையுடன் இணைந்து செயல்படுகிறது.

இது ஐ.எஸ்.சுக்கு எதிரான பெரியளவிலான நடவடிக்கைகளையும், பிராந்தியம் முழுவதுமான உளவுப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படைத் தளம் என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

அதேபோல், துபாயில் உள்ள 'ஜெபல் அலி' துறைமுகம் அதிகாரப்பூர்வ ராணுவத் தளம் கிடையாது. ஆனால், இது மத்திய கிழக்கிலேயே அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் வந்து செல்லும் மிகப்பெரிய துறைமுகமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் பிற போர்க்கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு