You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காஸா விஷயத்தில் டிரம்ப் எடுத்த புதிய முடிவு சர்ச்சையை கிளப்புவது ஏன்?
காஸா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக டிரம்பின் Board of Peace, அதாவது புதிய 'அமைதி வாரியம்' என்ற முயற்சி குறித்து வெளிவரும் தகவல்களை கவலைகளை அதிகரித்து வருகின்றன.
இந்த வாரியம் உண்மையில் அமைதியை கொண்டு வருமா? அல்லது உலக அரசியலில் புதிய சர்ச்சைக்கான தொடக்கமா? இந்த அமைதி வாரியம் எப்படி செயல்படும்? இதில் யாரெல்லாம் உள்ளனர்? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
யார் யாருக்கு அழைப்பு?
ஆஸ்திரேலியா, பிரேசில், சைப்ரஸ், எகிப்து, கிரீஸ், ஜார்டன், பாகிஸ்தான், போலாந்து, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன், நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்/ அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்டார்.
அதில், "அதிபர் டிரம்ப் சார்பில், பிரதமர் மோதியை காஸா அமைதி வாரியத்தில் பங்கேற்க அழைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த வாரியம் காஸாவில் நிலையான அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கான ஒரு பயனுள்ள நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரதமர்களும் இந்த அமைப்பில் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த உயர்மட்டக் குழுவில் இதுவரை லத்தீனரின் பெயரும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், வரும் வாரங்களில் மேலும் பல உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காஸா அமைதி வாரியம்
அமெரிக்கா தனது 'அமைதி வாரியம்' ஒரு புதிய சர்வதேச அமைதி அமைப்பாக செயல்படும் எனக் கூறி வருகிறது. அமெரிக்க அதிபர் இதன் தலைவராக இருப்பார். இதில் உறுப்பினராக சேர்வது கட்டாயமில்லை.
ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் உறுப்பினர் பதவிக்கு பதிலாக, நிரந்தர உறுப்பினராக விரும்புபவர்கள் சுமார் 1 பில்லியன் டாலர் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த தொகை காஸாவின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
டிரம்பு எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும், இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பார். பின்னர், இந்த அமைப்பு காஸாவைத் தாண்டி பிற மோதல்களை கையாளும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் இதன் வரைவு சட்டப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டுகிறது.
ஐ.நா-வை பலவீனப்படுத்துமா?
அமைதி பேச்சுவார்த்தைகள், அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச தண்டனைகள் ஆகியவற்றுக்கு பொறுப்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரத்தை, இந்த அமைதி வாரியம் பாதிக்கக்கூடும் என பலரும் கருதுகின்றனர்.
இஸ்ரேலின் ஹாரெட்ஸ் (Haaretz) நாளிதழ், இந்த அமைப்புக்கான வரைவு சட்டப்பிரகடனம், " மேலும் சுறுசுறுப்பான மற்றும் செயல்திறன் கொண்ட சர்வதேச அமைதியை கட்டியெழுப்பும் அமைப்பு தேவை" என்பதை வலியுறுத்தி தொடங்குவதாக குறிப்பிடுகிறது.
மேலும், "நீடித்த அமைதியை உருவாக்க, அடிக்கடி தோல்வியடைந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து விலகும் துணிச்சல் அவசியம்" என்றும் அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே ஐ.நா சபைக்கு வழங்கப்பட்ட அமெரிக்க நிதியை குறைத்து வருகிறது. மேலும், 2026 ஜனவரி 7ஆம் தேதியன்று, அமெரிக்க தேசிய நலன்களுக்கு முரணாக செயல்படுவதாகக் கூறி, 31 ஐ.நா. அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கான குறிப்பில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த புதிய வாரியம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2803-க்கு முழுமையாக ஒத்துப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வரைவு விதி காஸா தொடர்பான வரம்பைத் தாண்டிச் செல்வதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோங்-க்கு நெருக்கமான ஒரு வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. மேலும் "ஐ.நா சபையின் கொள்கைகள் மற்றும் அமைப்பு குறித்து இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது. அவை எந்த சூழ்நிலையிலும் கேள்விக்கு உள்ளாக்கப்படக் கூடாது," என்றும் அந்த வட்டாரம் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல், பாலத்தீனம்
அமைதி வாரியம் மட்டுமின்றி, நிறுவனர் நிர்வாக வாரியம், காஸா நிர்வாக வாரியம் என இரண்டு துணை வாரியங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 2 வாரியங்களிலும் எந்த பாலத்தீனரும் இடம்பெறவில்லை. காஸா நிர்வாக வாரியத்தில் ஒரே ஒரு இஸ்ரேலியர் உள்ளார்.
அதே நேரத்தில், இந்த வாரியத்தில் காஸா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த கத்தார், துருக்கி போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாலத்தீனர்களுக்கு இதை விட அதிக பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கப்பட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர் முஸ்தஃபா பர்கௌடி (Mustafa Barghouti) பிபிசி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதற்கிடையில், நிர்வாக வாரியங்களின் அமைப்பு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தங்களை சேர்த்துக் கொள்ளவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 'இது இஸ்ரேலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை, மேலும் அதன் கொள்கைக்கு முரணானது' என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யெர் லேபிட் (Yair Lapid) இந்த அறிவிப்பை "இஸ்ரேலுக்கான ஒரு தூதரக தோல்வி" என விமர்சித்துள்ளார்.
அமைதி வாரியம்' காஸா பிரச்னையை தீர்க்குமா?
காஸாவில் உள்ள கட்டடங்களில் சுமார் 80% முழுமையாக அழிந்தோ அல்லது கடுமையாக சேதமடைந்தோ உள்ளதாக ஐ.நா மதிப்பீடு தெரிவிக்கிறது.
தற்போது சிதைந்து வரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது.
டிரம்பின் இந்த புதிய அமைதி வாரியம் எவ்வளவு விரைவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதும், நீடித்த அமைதிக்கான தெளிவான நடைமுறை நடவடிக்கைகளை எந்தளவுக்கு முன்னெடுக்க முடியும் என்பதும் இன்னும் தெரிய வேண்டிய ஒன்றாகவே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு