You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஊருக்குள் வர மறுத்து அடர்ந்த காட்டுக்குள் தனியே வசிக்கும் குடும்பம்
இது தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் அஸ்வராப்பேட்ட மண்டலத்திலுள்ள கண்டலம் வனப்பகுதி. இங்கு உள்ள மலைப்பகுதியில் ஒரேயொரு குடும்பம் மட்டும் தனியாக வசித்துவருகிறது. இந்த மலைப்பகுதியில் குறைந்தது 3 கிலோமீட்டருக்கு வேறு யாரையும் பார்க்க முடியாது. ஆனால், குருகுண்ட்ல ரெட்டையா தன் குடும்பத்துடன் கடந்த 25 ஆண்டுகளாக தனியே வசித்துவருகிறார்.
இவர்களின் வீட்டுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு கோவில் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்து சென்றுதான் அவர்களின் வீட்டை அடைய முடியும். பிபிசி குழு மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று அக்குடும்பத்தை சந்தித்தது.
இங்குள்ள சிறு ஓடையிலிருந்து இக்குடும்பத்தினர் நீரை சேமித்துக்கொள்கின்றனர். எப்போதாவது தனக்கு உடல்நிலை நன்றாக இருக்கும்போது இங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோகுலபுடி எனும் குக்கிராமத்திற்கு நடந்து சென்று அங்குள்ள நியாயவிலைக் கடையில் அரிசி, மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்வதாக லஷ்மி கூறுகிறார்.
இங்கு மின்சார வசதி இல்லை. மொபைல் போன் வசதியும் இல்லை. தாங்கள் காட்டுக்குள் வாழ்ந்தாலும் காட்டு விலங்குகளிடமுருந்து எந்த ஆபத்தையும் எதிர்கொண்டதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
முன்பு கோகுலபுடி என்ற குக்கிராமத்தில் இந்த மலையின் மீது சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்துவந்தனர்.
ரெட்டையாவிடம் பேசுவதற்கு பிபிசி முயற்சித்தது. ஆனால், பிபிசி குழுவை பார்த்ததுமே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ரெட்டையாவின் மகன் கங்கி ரெட்டிக்கு 40 வயது, அவருக்குத் திருமணமாகவில்லை.
காட்டில் தாங்கள் தனியே வாழ்வதற்கு பழகிக்கொண்டதாக கூறுகின்றனர் இக்குடும்பத்தினர். வேறு யாரிடமாவது அவர்கள் பேச வேண்டுமென்றால், அவர்கள் 3 கிலோமீட்டர் நடந்து இந்த கோவிலுக்கு வரவேண்டும். ஆனால், இந்த கோவிலிலும் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வரமாட்டார்கள். இந்த குடும்பத்தினரை மலைக்குக் கீழே குடியமர்த்த அதிகாரிகள் முயற்சித்துவருகின்றனர்.
அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை மலைக்குக் கீழே குடியமர்த்த தங்களால் முடியவில்லை என உள்ளூர் மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். பலமுறை தாங்கள் அதற்கு முயற்சித்தும் அவ்வாறு செய்ய முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு