You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர்கள் வீட்டில் சோதனை: பூடான் ஆடம்பர கார்கள் கோவை நெட்வொர்க் மூலம் கேரளா சென்றது எப்படி?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட உயர் ரக கார்களை மையமாக வைத்து கேரளாவில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (செப்டம்பர் 23) சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.
இதில், சில நடிகர்களின் வீடுகளில் இருந்து ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கொச்சி சுங்கத்துறை இயக்குநரக ஆணையர் திஜு தெரிவித்துள்ளார்.
சுங்கத்துறையின் விரிவான சோதனையில் 36 சொகுசு கார்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
'பூடான் கார், கோவை நெட்வொர்க்'
கேரளாவில் திரைப்பட நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாறன், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் உள்பட முப்பது இடங்களில் செப்டம்பர் 23-ஆம் தேதி கொச்சி சுங்கத்துறை அதிகாரிகள் (Customs (Preventive) Commissionerate) சோதனை மேற்கொண்டனர்.
இந்தோ-பூடான் எல்லை வழியாக விலை உயர்ந்த கார்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போக்குவரத்து ஆணையரகம், தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் காவல்துறை உதவியுடன் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் நடந்த சோதனையில், 36 உயர் ரக சொகுசு கார்களைப் பறிமுதல் செய்துள்ளதாக கொச்சி சுங்கத்துறை இயக்குநரக ஆணையர் திஜு, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறையின் தரவுகளில் முறைகேடானவை என்று கோடிட்டுக் காட்டப்பட்ட சுமார் 150 முதல் 200 வாகனங்கள், கோவையை மையமாகக் கொண்ட கடத்தல் நெட்வொர்க் மூலம் கேரளாவுக்குள் கொண்டு வரப்பட்டதாக திஜூ கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 முதல் 200 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கும் வகையில் அண்டை நாடுகளுக்கு இறக்குமதி செய்து, அவற்றை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் சிலர் கொண்டுவந்து விற்றிருப்பதாக சுங்கத்துறை கூறுகிறது.
கார்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன?
குறிப்பாக, பூடானில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய விலை உயர்ந்த சொகுசு கார்களை விலைக்கு வாங்கிய சிலர், அவற்றுக்கு இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி ஆகியவற்றைச் செலுத்தாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்துள்ளதாக சுங்கத்துறை கூறுகிறது.
"ஆடம்பர கார்கள் சுற்றுலா வாகனங்கள் என்ற பெயரிலும், கண்டெய்னர் மூலமாக பல்வேறு பகுதிகளாகவும் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வாறு உள்ளே நுழைந்த பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளன" என செய்தியாளர் சந்திப்பில் திஜு தெரிவித்தார்.
பரிவாஹன் தளத்தில் மோசடி
இந்த வாகனங்கள் இமாச்சல்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களின் தகவல்களை வழங்கும் இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பரிவாஹன் (parivahan) தளத்தில் உரிமையாளர் விவரங்கள் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளன என்று திஜு குறிப்பிட்டார்.
அதாவது, 2014 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை 2005 முதலே பயன்பாட்டில் இருப்பதாக பரிவாஹன் தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"இவற்றில் பல சொகுசு கார்கள் ஆவணமில்லாத பரிவர்த்தனைகள் மூலம் விற்கப்பட்டுள்ளன. பணம் பரிமாறியதற்கான எந்த தடயமும் இல்லை. போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களின் அசல் உரிமையாளர் யார் என்பதை மறைத்துள்ளனர்" என்கிறார், திஜு.
'ஆபரேஷன் நம்கோர்' ஏன்?
பூடானிய மொழியில் நம்கோர் (Numkhor) என்றால் வாகனம் என்று பொருள். அதையே 'ஆபரேஷன் நம்கோர்' என்ற பெயரில் கொச்சி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தியுள்ளனர்.
சொகுசு கார்களின் பின்னணியில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி ஏய்ப்பு, பணமோசடி உள்பட சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டதாக, சுங்கத்துறை ஆணையர் திஜு கூறினார்.
இதுபோன்ற செயல்கள் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறிய திஜு, இதன்மூலம் கிடைத்த நிதி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை நுண்ணறிவுப் பிரிவு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் சில நடிகர்களுக்குச் சொந்தமான வாகனங்களும் உள்ளன என்று அவர் கூறினார். "உரிமையாளர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு வாக்குமூலம் பெறப்படும். அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்வோம்" எனவும் திஜு கூறினார்.
நடிகர் அமித் சக்கலக்கல் விளக்கம்
சுங்கத்துறையின் சோதனை குறித்து நடிகர் அமித் சக்கலக்கல் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறும்போது, "என்னுடைய ஒரு வாகனம் மட்டுமே சுங்கத்துறையால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது 1999 ஆம் ஆண்டு லேண்ட் க்ரூஸர் வாகனம். அதனை ஐந்தாண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன்" எனக் கூறியுள்ளார்.
வாகனத்தின் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகக் கூறிய அமித் சக்கலக்கல், "இந்த வாகனத்தை நான் பூடானில் இருந்து வாங்கினேனா என்பதை ஆய்வு செய்கின்றனர். வாகனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் மட்டும் சுமார் 150 முதல் 200 வாகனங்கள் வரை சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறிய ஆணையர் திஜு, "இதில் 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கார்களை பறிமுதல் செய்யும் வரை சோதனை தொடர்ந்து நடைபெறும்" எனவும் தெரிவித்தார்.
அதேநேரம், இதுபோன்ற வாகனங்கள் பிற மாநிலங்களிலும் உள்ளதாகக் கூறிய திஜு, "கண்டறிய முடியாத பெயர்களில் வலம் வரும் இந்த வாகனங்களால் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது" எனவும் கூறினார்.
'வரிகள் காரணமாக மோசடி'
"இந்தியாவில் சொகுசு கார்களை இறக்குமதி செய்வதற்கு 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. குறிப்பாக, உயர் ரக கார்களுக்கு ஜி.எஸ்.டி மட்டும் 40 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் சட்டவிரோதமாக கார்களை கொண்டு வந்திருக்கலாம்" எனக் கூறுகிறார், சி.எஸ்.விக்னேஸ்வர்.
இவர் இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations (FADA)) தலைவராக இருக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசின் பரிவாஹன் தளத்தில் வாகனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், இன்ஜின் எண், சேஸ் எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இதை உற்பத்தியாளர்களே பதிவேற்றுவார்கள். அப்போதுதான் இந்தியாவில் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்" என்கிறார்.
"உதாரணமாக, போர்சே (Porsche) கார் உற்பத்தியாளராக இருந்தால் இங்குள்ள டீலர்களுக்கு அதனை அனுப்பி வைப்பார். இந்திய அரசின் சட்ட விதிகளை டீலர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா எனப் பார்த்துவிட்டுத் தான் வாகனங்களை கொடுப்பார்கள்" எனக் கூறுகிறார், சி.எஸ்.விக்னேஸ்வர்.
'50 சதவீதம் குறைவான விலையில் கார்'
உயர்ரக கார்களை இறக்குமதி செய்யும்போது அதன் விலையைவிட அதிகளவில் வரி கட்ட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறுகிறார், கோவையைச் சேர்ந்த கார் டீலர் கோபிநாத்.
"காரின் விலை ஒரு கோடி ரூபாய் வருகிறது என்றால் வரியாக மட்டும் ஒரு கோடி ரூபாயை செலுத்த வேண்டும். இதுதவிர, பதிவுக் கட்டணம், இதர செலவுகள் என வாகனத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டியது வரும்." எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து விவரித்த கோபிநாத், "கழிவு என சான்று வாங்கியும் சுற்றுலா என்ற பெயரிலும் கொண்டு வரப்படும் கார்களில் வரி ஏய்ப்பு மூலம் 50 சதவீதம் வரை குறைவான விலையில் விற்கப்படுகிறது. உதாரணமாக, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை 75 லட்சத்துக்கு விற்பார்கள்." என்கிறார்.
அரசின் நடைமுறைகள் என்ன?
இந்த விவகாரத்தில் அரசின் நடைமுறைகள் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார், தமிழ்நாடு அரசில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற கார்த்தலிங்கன்.
"வாகனங்களை வேறு மாநிலங்களுக்கு விற்பதற்கு அனுப்புவதாக இருந்தால் காவல்துறையில் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். அதாவது, 'எந்தவித குற்ற நடவடிக்கையிலும் இந்த வாகனத்திற்கு தொடர்பு இல்லை' என்ற சான்று அவசியம்" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பிட்ட வாகனத்தை பிற மாநிலத்துக்கு மாற்றிக் கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்" என்கிறார்.
"ராணுவ வாகனமாக இருந்தால் துறையின் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறும் கார்த்தலிங்கன், "ஒவ்வொரு மாநிலத்துக்கும் வரிகளைச் செலுத்துவதில் வித்தியாசம் இருக்கும். அதற்கான வரியை செலுத்திவிட்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பதிவெண்ணை மாற்றிக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
'கேரளாவில் அதிக வரவேற்பு'
உயர் ரக கார்களை வாடகைக்கு எடுப்பதில் கேரளாவில் அதிக வரவேற்பு உள்ளதாகக் கூறும் கோபிநாத், "வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வரும் கேரள மக்கள், மாதத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாடகைக் கார்களை எடுத்து ஓட்டுகின்றனர்" என்று கார் டீலர் கோபிநாத் கூறுகிறார்.
இது மிகப்பெரிய வர்த்தகமாக இருப்பதால் கேரளாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு