காணொளி: ஐஸ் ஹாக்கியில் அசத்தும் இந்திய மகளிர் அணி
இந்தியாவில், இந்த பெண்கள் ஐஸ் ஹாக்கியில் தங்களுக்கான இடத்தை பிடித்து வருகிறார்கள். ஆனால் வெப்பமண்டல நாடான இந்தியாவில், ஒரு குளிர்கால விளையாட்டு எப்படி வேரூன்றியது?
"பலருக்கு ஐஸ் ஹாக்கி என்றால் என்ன என்று கூட தெரியாது. ஆனால் இமயமலை பகுதியில் பிறந்ததால் எங்களுக்கு இது குறித்து தெரியும்," என்கிறார் இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கி அணியின் டிஸ்கிட் ஆங்மோ
"நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் கிராமத்தில் இந்திய ராணுவத்தினரும், உள்ளூர் மக்களுக்கும் இந்த விளையாட்டை விளையாடுவார்கள்," என்கிறார் அணியின் கேப்டனான செவாங் சுஸ்கிட்.
"ஐஸ் ஹாக்கியை முதலில் பொழுதுபோக்கு விளையாட்டாக விளையாட தொடங்கினோம். இந்த விளையாட்டு குளிர்கால ஒலிம்பிக்கில் இருப்பது குறித்தோ, இந்த அளவுக்கு கொண்டாடப்படுவது குறித்தோ எங்களுக்கு தெரியாது," என்றார் டிஸ்கிட் ஆங்மோ.
இதில் மிகப்பெரிய சவால் வானிலை அல்ல. அவர்கள் பனியில் இருப்பதற்கு தகுதியானவர்கள் என்பதை சமூகத்திடம் நம்ப வைப்பதுதான்.
முன்னதாக, எங்களிடம் இந்த விளையாட்டுக்கான உபகரணங்கள் கூட இல்லை. ஆண்களிடம் கடன் வாங்கி விளையாடினோம் எனக் குறிப்பிடுகிறார் செவாங் சுஸ்கிட்.
"ஐஸ் ஹாக்கி என்பது அதிக உடல் மோதல்களுக்கு வாய்ப்புள்ள விளையாட்டு. இதில் காயம் அடையும் அபாயம் உள்ளது. இது மிகவும் வேகமான விளையாட்டும் கூட. பெண்களாகிய எங்களுக்கு இப்படிப்பட்ட விளையாட்டுகளை விளையாட கூடாது என சொல்லப்படுவதுண்டு. அந்த தடைகளை உடைத்து இத்தகைய முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறோம்," என்கிறார் டிஸ்கிட் ஆங்மோ.
செயற்கை பனி அரங்கத்துக்கு செல்ல முடியாததால், தங்களுக்கென ஒன்றை இவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது.
"அனைத்து வீராங்கனைகளும் கைகளில் வாளிகளை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று, தண்ணீரை ஊற்றி பனி தளத்தை உருவாக்கினார்கள்," என்கிறார் வீராங்கனையான டோர்ஜே டோல்மா.
அணியின் முதல் கேப்டனும் , இந்த குழுவில் உள்ள ஒரே தாயுமான ரிஞ்சென் டோல்மாவை அரங்கிற்கு வெளியே சந்தித்தோம். அவருக்கு பெண் குழுந்தை பிறந்த ஐந்து மாதத்தில் மீண்டும் விளையாட திரும்பினார்.
"பல பெண்கள் திருமணத்திற்குப் பிறகோ, குழந்தை பெற்ற பிறகோ விளையாட்டை விட்டுவிடுகிறார்கள். ஆனால், எனக்கு என் மகள் தான் அதிர்ஷ்டம்," என்கிறார் ரிஞ்சென் டோல்மா.
2016 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கி அணி உருவாக்கப்பட்டது. ஒரு தசாப்தத்துக்கும் குறைவான காலத்திலேயே இந்திய அணி நீண்ட தூரம் வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உத்தராகண்டின் டேராடூனில் நாட்டின் முதலாவது செயற்கை பனி அரங்கு அமைக்கப்பட்டது மிகப்பெரிய உத்துவேகத்தை அளிக்கக்கூடியதாக அமைந்தது.
"இது வரையில் , மூன்று மாதங்கள் உறைந்த நிலையில் உள்ள குளங்களில் பயிற்சி மேற்கொண்டு , ஆண்டு முழுவதும் பயிற்சி மேற்கொள்ளும் அணியை எதிர்கொண்டோம். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதும், மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதும் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என நினைக்கிறேன்." என்று தெரிவிக்கிறார் டிஸ்கிட் ஆங்மோ.
எல்லா வித சவால்களுக்கு மத்தியிலும் , இந்த விளையாட்டை உறுதியுடன் தொடர்கின்றனர். கடுமையான உழைப்புக்கு பலனாக கடந்த 2025 ஜூன் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.
கடுமையான பயிற்சிகளும், பல தடைகளும் இருந்தபோதும், இந்த அணியினர் விளையாட்டு வீரர்களாக மட்டும் வலுப்பெறாமல் , ஒரு குடும்பமாகவும் நெருக்கமாக வளர்ந்தனர். பனியில் விளையாடும்போதும், அதற்கு வெளியேயும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வெற்றியையும், ஒவ்வொரு பின்னடைவையும் ஒன்றாக பகிர்ந்து கொள்கிறார்கள்.
"ஒன்று குடும்பத்துடன் இருப்போம் அல்லது ஹாக்கி அணியுடன் இருப்போம். நாங்கள் ஒன்றாக இருக்கும்போது சவால்கள் கடினமாக தெரிவதில்லை. எனவே இது அந்த சவால்களை கடந்து வரவும் உதவியாக உள்ளது," என்கிறார் டிஸ்கிட் ஆங்மோ.
ஐஸ் ஹாக்கி இவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளது. இவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு மேடையையும், இன்னும் பெரிய கனவுகளை காணும் தைரியத்தையும் இந்த விளையாட்டு கொடுத்துள்ளது.
ஒரு நாள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நாங்கள் ஐஸ் ஹாக்கியில் எட்டுவோம். அதுதான் என் கனவு என்கிறார் செவாங் சுஸ்கிட்.
நாங்கள் ஐஸ் ஹாக்கி வீரர்களாக இருக்கும் காலத்திலேயே அது நடப்பதை பார்ப்போமா என்பது தெரியவில்லை என்று கூறுகிறார் டோர்ஜே டோல்மா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



