You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற 7 வங்கதேச வீரர்கள் யார்?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பதற்றமான நிலை நிலவிவருவதால், 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
அதனால், சுமார் 9.2 கோடி ரூபாய் கொடுத்து தாங்கள் வாங்கிய அந்த வீரரை, கொல்கத்தா விடுவித்தது. இது கிரிக்கெட் உலகில் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியது.
இந்த முடிவுக்கு எதிர்வினையாற்றும் விதமாக, ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்புவதில்லை என்று முடிவை வங்கதேசம் எடுத்தது.
மேலும், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணிக்க முடியாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் சொல்லியிருக்கிறது.
ஒரு வங்கதேச வீரரை ஐபிஎல் அணியிலிருந்து விலக்கியது இப்போது சங்கிலித் தொடராக பல விஷயங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் இதுவரை வேறு எந்த வங்கதேச வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்? அவர்கள் எப்போது எந்த அணிக்கு ஆடியிருக்கிறார்கள்?
அப்துர் ரஸாக்
ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் இவர்தான். 2008 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை அடிப்படை விலையான 50,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. இடது கை ஸ்பின்னரான இவர், அந்த சீசனில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில் 2 ஓவர்கள் மட்டுமே வீசி அவர் 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த சீசனுக்கு முன்பாக அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மஷ்ரஃபி மொர்டாசா
2009 ஐபிஎல் ஏலத்தில் மொர்டாசாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. 50,000 அமெரிக்க டாலராக அவரது அடிப்பை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை 6 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு கேகேஆர் வாங்கியது. ஆனால், அவரும் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தார் அவர். கடைசி ஓவரில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரில் மொர்டாசா 26 ரன்கள் கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடித்து டெக்கான் சார்ஜர்ஸை வெற்றி பெற வைத்திருந்தார் இளம் ரோஹித் ஷர்மா. அதன் பிறகு மொர்டாசாவும் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
மொஹம்மது அஷ்ரஃபுல்
2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், வங்கதேசத்தின் முன்னணி பேட்டர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட அஷ்ரஃபுல்லை வாங்கியது மும்பை இந்தியன்ஸ். அவர் அடிப்படை விலையான 75,000 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டார்.
டுமினி, ஜெயசூர்யா, பிராவோ, ஃபெர்னாண்டோ என நிறைய முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இருந்ததால் இவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. டெல்லி அணிக்கெதிரான அந்தப் போட்டியில் 10 பந்துகளைச் சந்தித்து இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார் அஷ்ரஃபுல். அடுத்த ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக அவர் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஷகிப் அல் ஹசன்
ஐபிஎல் அரங்கில் அதிக போட்டிகளில் ஆடிய வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் தான். 71 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஷகிப், 793 ரன்கள் எடுத்திருக்கிறார். 63 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் 2012, 2014 ஆகிய சீசன்களில் அவர் சாம்பியன் பட்டமும் வென்றிருக்கிறார்.
2011 முதல் 2017 சீசன் வரை அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அடுத்த 2 சீசன்கள் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். 2021 மற்றும் 2023 சீசன்களுக்கு அவரை கேகேஆர் மீண்டும் வாங்கியது.
2013 சீசனின்போது அவர் காயமடைந்திருந்ததாலும், பின்னர் வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடியதாலும், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. 2020-இல் அவர் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஷகிப் அந்த ஐபிஎல் சீசனில் ஆடவில்லை. 2022 ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.
தமிம் இக்பால்
அதிரடி ஓப்பனராகக் கருதப்பட்டாலும், ஐபிஎல் தொடரில் தமிம் இக்பாலுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெரும்பாலான ஏலங்களில் அவர் 'unsold' ஆகவே இருந்திருக்கிறார். 2012 இபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜேம்ஸ் ஹோப்ஸ் காயம் காரணமாக விலகவிட, அவருக்குப் பதிலாக மாற்று வீரராக தமீம் இக்பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், உத்தப்பா, கங்குலி, ஜெஸ்ஸி ரைடர் போன்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் அந்த அணியில் நிறையப் பேர் இருந்ததால், தமீமுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
லிட்டன் தாஸ்
நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட இன்னொரு வங்கதேச வீரர் லிட்டன் தாஸ். 2023 ஏலத்தில் அவரை அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு அந்த அணி வாங்கியது. ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய அவர், அதில் சரியாக சோபிக்காததால் அதன்பின் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். ஒருகட்டத்தில் சொந்த காரணம் காரணமாக அவர் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றது அந்த ஒரு சீசன் மட்டுமே.
இரு வெற்றிகரமான வீரர்கள் ஒருவர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான்
ஐபிஎல் தொடரில் இதுவரை 7 வங்கதேச வீரர்கள் மட்டுமே விளையாடியிருக்கிறார்கள். அவர்களுள் ஷகிப் அல் ஹசன் தவிர்த்து வெற்றிகரமாக செயல்பட்டிருக்கும் இன்னொரு வீரர் முஸ்தாஃபிசுர் மட்டுமே.
அவர் இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
2016 ஐபிஎல் தொடரை சன்ரைசர்ஸ் வெல்ல மிகமுக்கியக் காரணமாக விளங்கிய அவர், அந்த சீசனுக்கான 'எமர்ஜிங் பிளேயர்' விருதை வென்றார். 18 வருட ஐபிஎல் வரலாற்றில் அந்த விருதை வென்றிருக்கும் ஒரே வெளிநாட்டு வீரர் அவர்தான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு