You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எண்ணூரில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பில் என்ன நடந்தது? பிபிசி களஆய்வு
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"சுமார் 130 அடி உயரத்தில் வேலை என்பதால் பத்து பேரும் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தனர். இரும்புக் குழாய்களைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து கிளம்ப தயாராக இருந்தோம். திடீரென மேற்கூரை சரிந்தது" எனக் கூறி அழுகிறார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹித்தீஷ்.
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இறந்த ஒன்பது பேரில் ஒருவரான திமராஜ் துசன் என்பவரின் சகோதரர் இவர்.
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. ஒன்பது பேர் இறக்கும் அளவுக்கு கட்டுமானப் பணியில் என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டத்தில், எண்ணூர் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள நான்காவது அலகின் கொதிகலன் பிரிவில் நிலக்கரியை சேமிக்கும் வகையில் வளைவு போன்ற கூடாரத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளை முடித்துக் கொடுக்க பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்துக்கு (BHEL) தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இரும்புக் குழாய்களால் ஆன கூரையை அமைக்கும் பணிகள் நடந்து வந்துள்ளன. செவ்வாய்க் கிழமையன்று (செப்டெம்பர் 30) இரும்பு மேற்கூரை அமைக்கும் பணியில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாலை சுமார் 5.45 மணியளவில் சுமார் 130 அடி உயரத்தில் பத்து தொழிலாளர்கள் வேலை பார்த்துள்ளனர். எதிர்பாராதவிதமாக மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்துவிழுந்துள்ளது.
"சாரம் சரிந்து விழுந்ததால் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'200 கிலோ எடை கொண்ட குழாய்கள்'
"சுமார் 130 அடி உயரத்தில் (42 மீட்டர்) தொழிலாளர்கள் பணியாற்றும்போது கீழே வலைகள் மற்றும் சாரம் அமைக்காமல் பணி செய்ய வைத்துள்ளனர். குழாய்கள் அடங்கிய வளைவுகள் அப்படியே பெயர்த்து விழும்போது தொழிலாளர்களும் குழாய்களுடன் விழுந்தனர்" எனக் கூறுகிறார், சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.விஜயன்.
"ஒவ்வொரு குழாயும் சுமார் 200 கிலோ எடை கொண்டவை" என பிபிசி தமிழிடம் கூறிய கே.விஜயன், " அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பத்து பேர் வேலை செய்த இடத்தில் ஒரே ஒரு தொழிலாளி மட்டும் உயிர் தப்பியுள்ளார்" எனக் கூறுகிறார்.
விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் கரிகாப், பப்பன் சொராங்க், பிரயண்டோ, முன்னா கெம்பிராய், சோர்புஜிட் துசன், தீபக் ராஜுங், திமராஜ் துசன், பிரயாங்டோ சரங், பாபிஜித் பங்க்ளு என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்ச ரூபாயை நிவாரணமாக வழங்கவும் அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று காலை (அக்டோபர் 1) சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தொழிலாளர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடந்தன.
பிபிசி தமிழ் அங்கு சென்றபோது, உயிரிழந்த நபர்களின் உடல்களை விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கிருந்த அசாம் மாநில தொழிலாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
'என்ன நடந்தது எனத் தெரியவில்லை'
" கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. அசாம் மாநிலத்தில் இருந்து வேலை பார்ப்பதற்காக முப்பது பேர் வந்தனர். அவர்களில் ஒன்பது பேர் இறந்துவிட்டனர். இவர்களில் இரண்டு பேர் திருமணம் ஆகாதவர்கள்" எனக் கூறுகிறார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனூப்.
இவர் விபத்து நடைபெற்ற கட்டுமான இடத்தின் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
" சுமார் 5.45 மணியளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கட்டுமானம் சரிந்துவிட்டது. பாதுகாப்பு உபகரணங்கள், இரண்டு பாதுகாப்பு இயந்திரங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் இருந்தனர். என்ன நடந்தது எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார் அனூப்.
வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட சுமார் மூன்றாயிரம் பேர் வரையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக, செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அதே பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். "சம்பவத்தை நேரில் பார்த்ததில் இருந்து கடுமையான மனஉளைச்சலில் தவிப்பதாகக் கூறுகிறார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹித்தீஷ்.
'இரண்டே நிமிடம் தான்... முடிந்துவிட்டது'
கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஹித்தீஷின் சகோதரர் திமராஜ் துசன் உயிரிழந்துவிட்டார்.
" எனக்கும் என் சகோதரருக்கும் தலா 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் தந்தனர். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஊரில் பெற்றோர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் வேலைக்கு சேர்ந்தேன்" எனக் கூறுகிறார்.
" எல்லோரும் பாதுகாப்பு பெல்ட் போட்டு மேற்கூரை அமைக்கும் பணியின்போது ஏறினார்கள். இரும்புக் குழாய்களுக்கான இணைப்பில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு அப்படியே சரிந்துவிட்டது" எனக் கூறும் ஹித்தீஷ், "கீழே விழுந்ததில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர்" என்கிறார்.
"அப்போது மாலை 5.45 மணி என்பதால் வேலை முடியும் தருவாயில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் கீழே இறங்க வேண்டும். திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்தது. இரண்டே நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த துயரத்தில் இருந்து எப்படி மீண்டு வரப் போகிறேன் எனத் தெரியவில்லை." எனக் கூறி அழுதார், ஹித்தீஷ்.
அங்கு குழுமியிருந்த அசாம் மாநில தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மூ.வீரபாண்டியன், பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார்.
"புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மனிதர்களாக மதிக்கும் போக்கு அரிதாகவே உள்ளது. கட்டுமானப் பணிகளில் அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஒப்பந்த முறையில் அழைத்து வரப்படும் தொழிலாளர்களின் நலனில் போதிய அக்கறை செலுத்தப்பட வேண்டும்" என்கிறார்.
"மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை வரவேற்கிறோம். அதேநேரம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவது அவசியம். மத்திய, மாநில அரசுகள் இதனை உறுதி செய்ய வேண்டும்" எனவும் மூ.வீரபாண்டியன் தெரிவித்தார்.
எண்ணூரில் என்ன நிலவரம்?
அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற எண்ணூர், வாயலூரில் உள்ள அனல்மின் நிலையத்துக்கு பிபிசி தமிழ் சென்றது.
விபத்து நடைபெற்ற இடத்துக்கு இரண்டு கி.மீ தொலைவுக்கு முன்பு உள்ள சோதனைச் சாவடியில் பல்வேறு கேள்விகளுக்குப் பிறகு அங்கிருந்த பாதுகாவலர்களும் போலீஸாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி அளித்தனர்.
இரண்டு பகுதிகளாக இரும்புக் குழாய்களால் ஆன மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததைப் பார்க்க முடிந்தது. விபத்து நடந்த இடத்தில் அதிக எடையுள்ள இரும்புக் குழாய்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
அங்கிருந்த ஊழியர் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பாமல்) பிபிசி தமிழிடம் பேசும்போது, " இரும்புக் குழாய்களை கூரையாக அமைத்து அதன் மீது தகடுகள் பொருத்துவது தான் தனியார் நிறுவனத்தின் பணியாக இருந்தது. குழாய்களுக்கான இணைப்புகளை (bolt) பொருத்துவதில் ஏதோ தவறு நேர்ந்துள்ளது. இதனால் அப்படியே பெயர்த்து விழுந்துவிட்டது" எனக் கூறுகிறார்.
"பாதுகாப்பு பெல்ட்டை மட்டும் நம்பி அவர்கள் மேலே ஏறிவிட்டனர். இதனை கட்டுமான நிறுவனமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கூரையின் ஒரு பகுதி சரிவதை உணர்ந்து அவர்கள் சுதாரிப்பதற்குள் குழாய்களுடன் கீழே விழுந்தனர். இரும்புக் குழாய்களில் அடிபட்டதால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன" எனவும் அவர் தெரிவித்தார்.
"கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலியை கொடுப்பதில்லை. தங்கும் இடங்களில் முறையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை. இந்த விபத்துக்கு பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தின் அலட்சியப்போக்கு முழு காரணம்" என சி.ஐ.டி.யு சங்கத்தின் தமிழ்நாடு துணைத் தலைவர் கே.விஜயன் குற்றம் சுமத்தினார்.
'எந்தக் குறைபாடும் இல்லை' - பி.ஹெச்.இ.எல் நிறுவனம்
இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தின் (BHEL) மனிதவளத்துறையின் மூத்த மேலாளர் கார்த்திகேயன், "பாதுகாப்பு விஷயங்களில் எந்தவித குறைபாடும் இல்லை. அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "திட்டத்தின் வடிவமைப்புக் குழுவினரும் உயர் அதிகாரிகளும் டெல்லியில் இருந்து வரவுள்ளனர். அவர்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும்" எனக் கூறுகிறார்.
"ஓராண்டுகளாக இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணியை பி.எச்.இ.எல் நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ளது. மேற்கூரை அமைக்கும் வேலையை மட்டும் துணை ஒப்பந்தம் மூலம் வேறொரு நிறுவனம் செய்கிறது" என்கிறார், கார்த்திகேயன்.
"உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அவர்களின் உடல்கள் விமானம் மூலம் அசாம் கொண்டு செல்லப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.
'நான்கு பேர் மீது வழக்கு' - பொன்னேரி உதவி ஆணையர்
ஸ்டான்லி மருத்துவமனையில் அசாம் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், "பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முழு விசாரணை முடிந்த பிறகு முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
பொன்னேரி காவல் உதவி ஆணையரிடம் சங்கரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஒப்பந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்பட நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியின்போது கவனக் குறைவாக செயல்பட்டது உள்பட சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டதாக அரசு நிறுவனங்கள் தெரிவித்தாலும், அப்படி எந்த வசதிகளும் செய்து தரப்படுவதில்லை என தொழிற் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு