வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என போலி வீடியோ: பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் போலி வீடியோ வெளியிட்ட உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான பிரசாந்த் உம்ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவதற்கான கோவா மாநிலத்தின் அரசாங்க வழக்குரைஞராகவும் (ஸ்டேண்டிங் கவுன்சல்) உள்ளார் பிரசாந்த் உம்ராவ்

டிவீட்களை பகிரும்போது அவர் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம். உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாற்றியமைத்து அவர் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ்நாடு போலீஸ் முன்பு ஆஜராகவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் கடுமையை தளர்த்தி இந்த உத்தரவை வழங்கியுள்ளது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்.

பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 15 நாள்களுக்கு தினமும் காலை 10.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் தமிழ்நாட்டு காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்திய உச்ச நீதிமன்றம், திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு ஆஜராகவேண்டும். பிறகு விசாரணை அதிகாரி கேட்கும்போது கேட்கும் நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் தம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கவேண்டும் என்றும் பிரசாந்த் உம்ராவ் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற முதல் தகவல் அறிக்கைகளில் பிரசாந்த் உம்ராவ் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை என்று தமிழ்நாட்டுக்காக ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவரது ட்வீட்டில் துல்லியமற்ற தன்மை இருந்ததாகவும் அதை உணர்ந்து அவர் அதை அழித்துவிட்டார் என்றும் இந்நிலையில் இந்த இளைஞரை துன்புறுத்தும் வகையில் பல் வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்படுவதாகவும் கூறினார் பிரசாந்த் உம்ராவுக்காக ஆஜரான வழக்குரைஞர் சித்தார்த் லுத்ரா.

தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலியாக ட்வீட் வெளியிட்டது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக்கவேண்டும் என்று கேட்டும், தனக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தவேண்டும் என்று கோரியும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் பிரசாந்த் உம்ராவ்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆத்திரமூட்டுதல்), பிரிவு 153 ஏ (வெறுப்பை வளர்க்கும் பேச்சு), பிரிவு 504 (அமைதியைக் கெடுப்பதற்குத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது), பிரிவு 505 (பொதுவெளியில் சில்மிஷம் செய்யும் சாத்தியமுள்ள அறிக்கை) ஆகியவற்றின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: