தமிழ்நாடு அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் முன்னுள்ள 4 வாய்ப்புகள்

அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்

பட மூலாதாரம், Facebook/Officeofops

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"ஒன்று சேர்வதற்கு நான் ரெடி... எடப்பாடி பழனிசாமி தயாரா?" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார்.

பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டாலும் தேர்தலில் அவருக்கு நான்கு வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 'இரண்டாம் தர்மயுத்தம் நடத்தக் காரணமே மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் தான்' என பன்னீர்செல்வம் கூறியதற்கு அவர்கள் கூறும் பதில் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணிக் கணக்குகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்து வந்த டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்துவிட்டார்.

ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.

இந்தநிலையில், ஜனவரி 29-ஆம் தேதியன்று பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் நினைத்தால் நாங்கள் இணையலாம்" எனக் கூறினார்.

"எனது கோரிக்கையில் இருந்து தினகரன் மாறுபட மாட்டார்" எனக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், "அந்த வேலையைச் செய்தால் அ.தி.மு.க மாபெரும் வெற்றியடையும்" என்றார்.

"சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உரிமை மீட்புக் கழகத்தைத் தொடங்கவில்லை. அதற்கான சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது," எனவும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

பன்னீர்செல்வத்தின் கோரிக்கை தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி "அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை" என உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக கட்சியில் சேரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்" எனக் கூறினார்.

"பன்னீர்செல்வத்துக்கு எதிராக இப்படியொரு கசப்புணர்வை எடப்பாடி பழனிசாமி காட்டிய பிறகு இருவரும் ஒரே மேடையில் இருவரும் ஏற முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் பன்னீர்செல்வமோ அவரது மகனோ போட்டியிட்டால் அங்குள்ள அ.தி.மு.கவினர் எவ்வாறு தேர்தல் வேலை பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது." என்கிறார் அவர்.

'ஓ.பி.எஸ் முன்பாக 4 வாய்ப்புகள்' - எஸ்.பி.லட்சுமணன்

அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்

பட மூலாதாரம், SP lakshmanan

பன்னீர்செல்வத்துக்கு முதல் தேர்வாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளதாகக் கூறும் எஸ்.பி.லட்சுமணன், "தினகரன் விஷயத்தில் மனம் மாறியதைப் போல பன்னீர்செல்வம் விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி மனம் மாறுவாரா.. அதற்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்குமா என்பது முக்கியமானது." என்கிறார்.

"இரண்டாவதாக, தி.மு.க பக்கம் கூட்டணியாக செல்லலாம் என முடிவு செய்தால் இதுநாள் வரை அ.தி.மு.கவை மையப்படுத்திய அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்," எனக் கூறுகிறார் எஸ்.பி.லட்சுமணன்.

அவரது கூற்றுப்படி, "மூன்று முறை முதலமைச்சராக இருந்த அந்தஸ்தைப் பற்றி அவர் பேசுகிறார். அதற்காகவே தி.மு.க பக்கம் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அவ்வாறு செல்வதற்கு முடிவெடுத்தால் ஜெயலலிதா படத்தை தனது வீட்டில் வைக்க முடியாத சூழல் ஏற்படும்." என்கிறார்.

"சொந்த சமூகத்தினர் மத்தியிலும் கேள்விகள் எழும். அந்தவகையில், தி.மு.க பக்கம் அவர் சென்றால் சங்கடங்களே அதிகம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"மூன்றாவதாக, த.வெ.கவில் இணையும் முயற்சியை பன்னீர்செல்வம் எடுக்க விரும்பினால் அதுவும் அவருக்கு சங்கடத்தையே கொண்டு வந்து சேர்க்கும். அங்கு அரசியல்ரீதியாக செங்கோட்டையன் படும் அவஸ்தையை அவர் கவனித்து வருகிறார்." என்கிறார்.

அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்

பட மூலாதாரம், Facebook/Officeofops

வேறு கட்சிகளுக்கு பன்னீர்செல்வம் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தான் கருதுவதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன். "தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் த.வெ.க பக்கம் அவர் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை" எனக் கூறுகிறார்.

தி.மு.க, த.வெ.க ஆகிய கட்சிகளில் இணைவது தொடர்பான கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். அவர் பேசும்போது, "இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்வதே பன்னீர்செல்வத்துக்கான நான்காவது வாய்ப்பாக இருக்கும்" என்கிறார், எஸ்.பி.லட்சுமணன்.

"தேர்தலில், 'அ.தி.மு.க ஆட்சிக்கு வரட்டும். கட்சி ஒன்றாக இருக்கட்டும். களப்பணி செய்வதற்கான சூழல் இல்லாததால் ஒதுங்கிக் கொள்கிறேன்' என அவர் கூறுவது தான் அவருக்கு நல்லது"

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் அவர் ஈடுபடலாம். இது அவரை நம்பி வந்தவர்களுக்கு செய்யும் நல்ல காரியமாக இருக்கும்," எனவும் அவர் தெரிவித்தார்.

பழனிசாமி தயங்குவதற்கு என்ன காரணம்?

"தன்னை சேர்க்குமாறு இதைவிட வெளிப்படையாக பன்னீர்செல்வத்தால் கூற முடியாது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

"அவரைச் சேர்க்க மறுப்பதற்கு பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி காரணம் காட்டுகிறார். ஆனால், மீண்டும் பன்னீர்செல்வத்தைக் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படுத்துவார் எனக் கருதியிருக்கலாம்" என்கிறார் அவர்.

தேர்தலில் தான் ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருதுவதாகக் கூறும் மாலன், "இந்த நேரத்தில் பதவிக்காகவே மீண்டும் பன்னீர்செல்வம் கட்சிக்குள் வரவிரும்புவதாக அ.தி.மு.க தலைமைக்கு தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன." என்கிறார்.

ஆனால், இதனை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், " ஓபிஎஸ் இறங்கி வருவதைப் பார்த்த பிறகும் அவரைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை." என்கிறார்.

அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்

பட மூலாதாரம், Facebook/EPSTamilnadu

"இதன் பின்னணியில் வேறு ஏதோ காரணங்கள் உள்ளதாகவே பார்க்கிறேன். அது நல்லதா.. என அ.தி.மு.க தொண்டர்கள் யோசிக்கவே செய்வார்கள். பன்னீர்செல்வம் மீது அவரது சொந்த சமூகத்தினர் மதிப்பு வைத்துள்ளனர். அதனைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-வில் சேர்த்துக் கொள்வார்களா எனப் பார்க்கலாம்," என்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.

"பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதற்கு அவர் கடந்த காலங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி எடுத்த முடிவுகளே காரணம்," எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

"அரசியலில் எதிர் முனையில் உள்ளவர்களின் பலம், பலவீனங்களை ஆலோசித்து பன்னீர்செல்வம் முடிவெடுக்கவில்லை" எனக் கூறும் மாலன், "கட்சியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியிலும் சொந்த சமூகம் மத்தியிலும் பன்னீர்செல்வத்துக்கு கணிசமான ஆதரவு இருந்தது," என்கிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "பா.ஜ.கவில் பன்னீர்செல்வம் சேருவதற்கு தயாராக இருந்திருந்தால் அவரைப் பயன்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருந்தனர். ஆனால், அவர் ஆர்வம் காட்டவில்லை." எனத் தெரிவித்தார்.

அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்

பட மூலாதாரம், Maalan

'எதையாவது சொல்லட்டும்' - வைத்திலிங்கம் பதில்

ஜனவரி 29-ஆம் தேதியன்று பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில், இரண்டாவது தர்மயுத்தம் நடத்தியது குறித்து பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், "அவ்வாறு தர்மயுத்தம் தொடங்குவதற்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தான் காரணம்." எனக் குறிப்பிட்டார்.

அ.தி.மு.கவில் நீக்கப்பட்ட பிறகு கட்சியின் சட்டவிதிகளைக் காப்பாற்றுவதற்காக இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார். "அ.தி.மு.கவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்" என, எடப்பாடி பழனிசாமியை சாடினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் அவர் நீண்ட நேரம் தியானம் இருந்தார். அப்போது தான் தர்ம யுத்தம் தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.

அண்மைக்காலமாக அரசியலில் பன்னீர்செல்வத்துக்கான வாய்ப்புகள் குறைந்துவரும் நிலையில், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பழனி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் ஆகியோர் தி.மு.கவில் இணைந்துவிட்டனர்.

இரண்டாவது தர்மயுத்தம் தொடர்பான, பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

"அவர் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். நாங்கள் ஒன்றாக இருந்தோம். அவரது கருத்தைப் பற்றி எதுவும் கூறுவதற்கு விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

ஆலங்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இதுபற்றி தற்போது எதுவும் பேச விரும்பவில்லை" எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு