You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமீர் கான் திரையுலகில் இருந்து ரகசியமாக விலக நினைத்தது ஏன்?
லகான், 3 இடியட்ஸ் போன்ற பிரபலமான பல படங்களில் நடித்தவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடித்திருந்தார்.
அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத ஒன்று என்னவென்றால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக அவர் சினிமாத்துறையில் இருந்து ரகசியமாக விலகியது.
"எனக்கு நடிப்பும் படமும் போதும் என்று நான் என் குடும்பத்தாரிடம் கூறினேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமீர் கான். அவருடன் பிபிசி நடத்திய நேர்காணலின் ஒரு பகுதி.
கேள்வி: ஆமிர் கான், இங்கு வந்ததற்கு நன்றி. லாபடா லேடிஸ் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளதற்கு வாழ்த்துகள்.. இந்த திரைப்படம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றியது. ஆனால் இதில் ஒரு வலுவான ஆண் கதாபாத்திரம் உள்ளது. அதை முக்கிய கதாபாத்திரம் என்றும் சொல்லலாம். ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை சொல்லும் படத்திற்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு ஆணாக ஏன் முக்கியம் என கருதுகிறீர்கள்?
பதில்: எனக்கு அந்த கதை மிகவும் பிடித்தது. நான் ஒரு போட்டியின் நடுவராக இருந்தபோது இந்த ஸ்க்ரிப்டை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆழமாக சொல்வதாக எனக்கு தோன்றியது. அதில் நகைச்சுவையும் இருந்தது. மிகவும் உருக்கமாகவும் என்னுடன் உரையாடுவதுபோலான ஒரு கதையாகவும் அது இருந்தது. எனவே அது ஒரு சிறந்த ஸ்க்ரிப்ட் மட்டுமல்ல அது ஒரு நல்ல செய்தியை சொல்வதாகவும் எனக்கு தோன்றியது. இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டிருப்பர். அது அவர்கள் விருப்பப்பட்டதாக இருக்காது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெறுகிறது. எனவே இந்த கதை அதை மிக அழகான வழியில் வெளி கொண்டு வருகிறது. அதனால் அதனை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுவும் கிரண் இதனை இயக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
கேள்வி: இந்தியாவில் பாலின பாகுபாடு மற்றும் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள உதவும் படங்களை எடுப்பதற்கான பொறுப்பு இந்திய திரைப்படங்களுக்கு உள்ளதான எண்ணுகிறீர்களா?
பதில்: என்னை பொருத்தவரை இயக்குநர்கள் என்ன விரும்புகிறார்களா அதை எடுக்க வேண்டும்.
இருப்பினும் திரைத்துறையில் இருப்பவர்கள் சில சமயங்களில் பலத்த வரவேற்பை பெறும் கதைகளை மட்டுமல்ல அனைவரையும் யோசிக்க தூண்டும் கதைகளையும் பார்த்திருக்கிறோம். ஒரு படைப்பாளியாக மக்களின் இதயங்களை நம்மால் தொட முடியும்.
எனவே, சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளைப் ஒரு படைப்பாளியாக மக்களுக்கு உணர்த்தும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கும்.
கேள்வி: ஆஸ்கர் விருதுகளில் சிறந்த சர்வதேச படங்கள் பிரிவில் இந்தியா இதுவரை வென்றது இல்லை. கடைசியாக உங்களின் லகான் திரைப்படத்திற்கு விருது கிடைத்தது. இந்திய திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் சர்வதேச விருதுகள் என்ற அங்கீகாரம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இது எதனால் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: அகாடமி விருதுகள் குறித்து சொல்கிறீர்களா?
கேள்வி: பிற சர்வதேச விருதுகள் குறித்தும் சொல்லலாம்.
பதில்: அகாடமி விருதுகளை பொறுத்தவரை நீங்கள் வெளிநாட்டு படங்களுக்கான பிரிவை எடுத்துக் கொண்டால் ஆஸ்கரில் இருப்பதிலேயே மிகவும் கடினமான பிரிவு அதுதான். அது சிறந்த படங்களுக்கான பிரிவை காட்டிலும் கடினமான ஒன்று. காரணம், ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் சிறந்த படங்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும். இந்த ஆண்டு மொத்தம் 80 படங்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாடும் தங்களின் சிறந்த படங்களை அனுப்பு கிறது/. எனவே நீங்கள் 80 சிறந்த படங்களுடன் போட்டியிடுகிறீர்கள். எனவே போட்டி கடுமையானதாக உள்ளது. இந்த பிரிவில் நாமினேட் செய்யப்படுவதும் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவதுமே பெரிய விஷயம். இந்தியா பல சிறந்த படங்களை தயாரித்துள்ளது.
கேள்வி:
லபடா லேடீஸ் படத்தை உங்கள் முன்னாள் மனைவி இயக்கி இருக்கிறார். பல ஆண்டுகளாக அவருடன் நீங்கள் பணிபுரிந்துள்ளீர்கள். அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். அப்படி இருக்கும்போது,கிரண் இந்த படத்தை இயக்குவது சரியாக இருக்கும் என்று ஏன் நினைத்தீர்கள்? உங்கள் இருவருக்குமான தொழில்ரீதியான உறவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இந்த படத்தில் கிரண் பணிபுரிந்ததை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நாங்கள் இணைந்து அழகான 16 ஆண்டுகளை கழித்துள்ளோம். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். அவர் ஒரு சிறந்த மனிதர். சிறந்த இயக்குநர்.அவர் இதில் மிகவும் நேர்மையாக இருப்பார் என்பதால்தான் அவரை தேர்வு செய்தேன். எனக்கு அதுதான் தேவை. படத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் அவரை முழுமையாக சார்ந்திருக்க முடியும் என்று எனக்கு தெரியும். அவர் ஒரு சிறந்த மனிதர். நானும் மோசமானவன் கிடையாது. எனவே இருவருக்கும் நன்றாக ஒத்துப் போகும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம். எங்களின் உறவு சற்று மாறியுள்ளது. ஆனால் அதற்காக ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் மரியாதை குறையாது. நான் அவரை பார்த்தாலே மகிழ்ச்சியடைவேன்.
கேள்வி
சித்தாரே சமீன் பர் போன்ற படங்களில் தற்போது நீங்கள் பிசியாக உள்ளீர்கள் ஆனால் சில ஆண்டுகளாக நீங்கள் திரைத்துறையை விட்டு விலகியதாக சொன்னீர்கள் – அது எதனால்?
பதில்
கடந்த 30 ஆண்டுகளில் எனது குடும்பத்திற்கான நேரத்தை நான் செலவிடவில்லை. எனது குழந்தைகளிடமும் நான் நினைத்ததை போல என்னால் நேரத்தை செலவிட முடியவில்லை. எனது அம்மா, எனது உடன் பிறந்தவர்கள், கிரண், எனது முதல் மனைவி ரீனா என யாருக்காகவும் நான் நேரத்தை செலவிடவில்லை என புரிந்தது. இது கோவிட் சமயத்தில் நடந்தது. எனக்கு நெருக்கமானவர்களுக்காக நான் போதிய நேரத்தை செலவிடவில்லை என்று நினைத்து மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் மிகுந்த குற்ற உணர்ச்சியடைந்தேன்.
அதன் பிறகு எனது குழந்தைகள் என் மனதை மாற்றினர். என் மகன் நான் மிகவும் அதீதமான ஒரு நபர் என்று சொன்னார். அவர் சொன்னது சரி. நான் எதையும் தீவிரமாக எடுத்து கொள்வேன். ஒரு பெண்டுலத்தை போல ஒரு சமயத்தில் படங்களை மட்டும் குறித்தே யோசித்தீர்கள் தற்போது மறுபக்கமான குடும்பத்தை மட்டுமே குறித்து யோசிக்கிறீர்கள். இது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று உள்ளது. நீங்கள் முயற்சி செய்து உங்கள் வாழ்க்கையில் சமநிலையை கொண்டு வரலாம் என்று அவர் சொன்னார். அது சரி என்று எனக்கு தோன்றியது. எனவே அப்போதிலிருந்து அதைதான் நான் முயற்சித்து வருகிறேன்.
கேள்வி
நீங்கள் மனநலம் குறித்து நிறைய பேசியுள்ளீர்கள் – உங்கள் மகளுடன் சேர்ந்து நேர்காணலில் பங்கேற்றுள்ளீர்கள். இந்தியாவில் மனநலம் குறித்து பேசுவதில் இன்னும் தயக்கம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்:
இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதுகுறித்து பேசுவதில் தயக்கம் உள்ளது. எனவேதான் இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதுகுறித்து வெளியில் பேச தயங்குகிறார்கள். எனது மகள் ஐரா இந்த துறையில் பணி செய்கிறார். ஒரு வகையில் என்னை பல வழியில் அவர் நெறிப்படுத்தியுள்ளார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் தெரப்பி பெற தொடங்கினேன். அது எனக்கு மிகவும் உதவியது. என்னை மேலும் புரிந்து கொள்ள உதவியது. என்னை வேறு கோணத்தில் நான் பார்த்தேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)