சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்

    • எழுதியவர், ஜெர்மி போவன்
    • பதவி, சர்வதேச ஆசிரியர்

ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி முடிவுக்கு வரும்?

எர்னஸ்ட் ஹெமிங்வே கூறிய பிரபல கருத்தைப் போல, படிப்படியாகச் சென்று பின்னர் திடீரென உடைந்து விழும்.

இரானில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் வெளிநாடுகளில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களும், டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி திடீரென வீழ்ச்சியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஆட்சி வீழ்ச்சியடைவதாக இருந்தாலும், அது இன்னும் மெதுவான, படிப்படியான நிலையிலேயே நடைபெறுகிறது என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

இரானில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவும் அமைதியற்ற சூழல், அந்நாட்டு ஆட்சிக்கு ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இரானியர்களின் கோபமும் விரக்தியும் இதற்கு முன்பும் வீதிகளில் போராட்டங்களாக வெடித்திருக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் இரான் மீது தொடுக்கப்பட்ட ராணுவத் தாக்குதல்களுக்கு பிறகு தற்போதைய இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கப் போராடும் இரானியர்களுக்கு, பொருளாதாரத் தடைகளின் தாக்கம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

இரானியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவாக, 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அனைத்து தடைகளையும் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதம் மீண்டும் விதித்தன.

2025-ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. அந்நாட்டு நாணயமான 'ரியால்' மதிப்பு கடந்த டிசம்பரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

இரானிய ஆட்சி பெரும் அழுத்தத்தில் இருந்தாலும், அது இப்போதைக்கு வீழ்ந்துவிடாது என்பதையே சான்றுகள் காட்டுகின்றன.

முக்கியமாக, பாதுகாப்புப் படைகள் இன்னும் அரசுக்கு விசுவாசமாகவே உள்ளன. 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரானிய ஆட்சியாளர்கள் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கான ஒரு விரிவான மற்றும் இரக்கமற்ற அமைப்பை உருவாக்குவதற்காகப் பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில், வீதிகளில் இறங்கிய சக குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி வந்த உத்தரவுகளை பாதுகாப்புப் படைகள் நிறைவேற்றின. இதன் விளைவாக, கடந்த சில வாரங்களாக நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. தகவல் தொடர்பு தடையை விதித்துள்ள ஒரு நாட்டில் நம்மால் இவ்வளவுதான் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் இருப்பது இரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆகும். இது நாட்டின் மிக முக்கியமான அமைப்பாகக் கருதப்படுகின்றது.

1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் சித்தாந்தம் மற்றும் ஆட்சி முறையைப் பாதுகாக்கும் குறிப்பிட்ட பணியைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, நேரடியாக உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது.

இரானிய புரட்சிகர காவல்படை அமைப்பில் சுமார் 1,50,000 ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரானின் வழக்கமான ராணுவத்திற்கு இணையாகச் செயல்படும் இந்தப் படை, இரானியப் பொருளாதாரத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.

அதிகாரம், பணம், ஊழல் மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையானது, அமைப்பைப் பாதுகாக்க அதற்கு எல்லா காரணங்களையும் கொண்டுள்ளது.

ஐஆர்ஜிசி அமைப்பிற்கு துணை படையாக பாசிஜ் மிலீஷியா எனப்படும் தன்னார்வ துணை ராணுவ அமைப்பு உள்ளது. இதில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.

மேற்கத்திய நாடுகளின் சில மதிப்பீடுகளின்படி, இதில் செயற்பாட்டுப் பணியில் இருக்கும் வீரர்கள் பல லட்சங்களாக உள்ளனர். அது மிகப் பெரிய எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் இந்த பசிஜ் படையினர் முன்னணியில் உள்ளனர்.

2009-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நடந்த பிரமாண்டமான போராட்டங்களை ஒடுக்க ஐஆர்ஜிசி மற்றும் பசிஜ் படையினர் நடவடிக்கை எடுத்ததை நான் நேரில் பார்த்தேன். பசிஜ் தன்னார்வலர்கள் ரப்பர் லத்திகள் மற்றும் மரத்தடிகளுடன் வீதிகளில் வரிசையாக நின்றிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால் தானியங்கி ஆயுதங்களை ஏந்திய சீருடை அணிந்த ஆண்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிள் குழுக்கள் டெஹ்ரானின் அகலமான சாலைகளில் சீறிப்பாய்ந்து, போராட்டம் நடத்த முயன்ற குழுக்கள் மீது பாய்ந்தன. இரண்டு வாரங்களுக்குள், வீதிகளை ஆக்கிரமித்திருந்த போராட்டங்கள், கோஷங்களை எழுப்பும் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைக்கும் சிறிய மாணவர் குழுக்களாகக் குறைக்கப்பட்டன.

மாலை வேளையில் மக்கள் தங்கள் பால்கனிகளுக்கும் மாடிகளுக்கும் சென்று, ஷாவுக்கு எதிராக அவர்களுடைய பெற்றோர் முழங்கியதுபோல 'கடவுள் மிகப் பெரியவர்' என முழக்கமிட்டனர். ஆனால் அந்த முழக்கங்களும் காலப்போக்கில் மெல்ல மங்கிப் போயின.

உள்நாட்டு பாதுகாப்புப் படைகளின் வெளிப்படையான உறுதித்தன்மை, உச்ச தலைவர் அல்லது அவருடைய நெருங்கிய கூட்டாளிகள் நிம்மதியாக இருக்க முடியும் அல்லது இருப்பார்கள் என்பதைக் குறிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வருகிறார். ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் லட்சக்கணக்கான இரானியர்கள் மிகுந்த ஆத்திரத்திலும் கோபத்திலும் இருக்கக்கூடும்.

டெஹ்ரானில், தாங்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களில் ஒரு பகுதியையாவது குறைக்கும் வழிகளை அரசு மற்றும் உச்ச தலைவர் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடுமையான, அதிகாரப்பூர்வ பேச்சுகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக முன்மொழிவும் முன்வைக்கப்படுகிறது.

இரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் எவ்வாறு ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், ஏனெனில் இவை முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தோல்வியடையச் செய்துள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைகள் இரானுக்கு நேரத்தை கொடுக்கக்கூடும், குறிப்பாக ஒரு ஒப்பந்தம் சாத்தியம் என்று டிரம்பை நம்ப வைக்க முடிந்தால் அது நடக்கலாம்.

அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டின் பொருட்கள் மீதும் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறுகிறார். இது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம். சீனா இரானின் பெரும்பாலான எண்ணெயை வாங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் டிரம்பும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தங்களது வர்த்தகப் போரில் ஒரு தற்காலிக உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கில் ஒரு உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

உலகின் இரண்டு வல்லரசுகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகள் குறித்து இந்த உச்சிமாநாடு விவாதிக்கும். இரான் மீதான அழுத்தத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும், டிரம்ப் இந்த உச்சிமாநாட்டை ஆபத்தில் தள்ளவோ அல்லது சீர்குலைக்கவோ விரும்புவாரா?

டெஹ்ரானில், உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயியின் மிகப்பெரிய முன்னுரிமை இஸ்லாமியக் குடியரசின் ஆட்சி முறையைப் பாதுகாப்பதாகும். மீண்டும் போராட்டங்கள் வெடித்தால், அவை கடுமையான பதிலடியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்சிக்கு இருக்கும் ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், போராட்டக்காரர்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த தலைமை இல்லாததுதான். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷா மன்னரின் மூத்த மகன், போராட்டக்காரர்களுக்குத் தேவையான தலைவராக மாற முயற்சித்து வருகிறார்.

ஆனால் அவரது குடும்ப வரலாறு மற்றும் இஸ்ரேலுடனான அவரது நெருங்கிய தொடர்புகள் காரணமாக, அவருக்குக் கிடைக்கும் ஆதரவு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்டதாகவே தெரிகிறது.

டெஹ்ரானில் உள்ள மதகுருமார்களையும் ராணுவ வீரர்களையும் கவலையடையச் செய்யக்கூடிய ஒரு பாடம், அவர்களின் முன்னாள் கூட்டாளியான சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்திடமிருந்து கிடைக்கிறது. அவர் தனது போரில் வெற்றி பெற்றது போலத் தோன்றியதுடன், சௌதி அரேபியா மற்றும் அரபு லீக் அமைப்புகளால் மெதுவாக மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந்தார்.

ஆனால் 2024-ஆம் ஆண்டின் இறுதியில், நன்கு திட்டமிடப்பட்ட கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அவரது மிக முக்கியமான இரண்டு கூட்டாளிகளான ரஷ்யாவும் இரானும் அவரைப் பாதுகாக்க விரும்பவில்லை அல்லது ஒருவேளை அவர்களால் முடியாமல் போயிருக்கலாம். சில நாட்களுக்குள்ளேயே, அசாத்தும் அவரது குடும்பத்தினரும் மாஸ்கோவிற்கு தப்பிச் சென்றனர்.

ஒரு சர்வாதிகார ஆட்சி படிப்படியாகச் சிதைந்து, திடீரென வீழும். அசாத்தின் ஆட்சி சிரியாவில் வீழ்ந்த போது, அந்த செயல்முறை மிக வேகமாக நடந்தது.

டெஹ்ரானில் ஆய்வு செய்யப்பட வேண்டிய மற்றொரு உதாரணம், 2011-இல் துனீசிய அதிபர் பென் அலியின் வீழ்ச்சியாகும்.

பென் அலியின் வீழ்ச்சி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது. அவர் மிகப்பெரிய போராட்டங்களைத் தாண்டி பதவியில் நீடித்திருக்கக் கூடும்.

ஆனால் தங்களது நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று ஆயுதப்படைகள் முடிவு செய்ததால், அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதே போல் இரானில் நடக்க வாய்ப்புள்ளதா? ஒருவேளை நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை.

இஸ்லாமிய ஆட்சி முறையை எதிர்ப்பவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதையும், ஒரு நம்பகமான தலைமை உருவாவதையும் எதிர்பார்ப்பார்கள். இதன் மூலம் அந்த ஆட்சி சிதைவுறும் செயல்முறை வேகமெடுத்து, 'படிப்படியானது' என்பதிலிருந்து 'திடீரென' நடப்பதாக மாறலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு