காஸா அணுகுமுறையால் நெருக்கடியை சந்திக்கும் இஸ்ரேல்
காஸா விவகாரத்தில் தனது அணுகுமுறை காரணமாக நெருக்கடியான சூழலை தற்போது இஸ்ரேல் எதிர்கொண்டுள்ளது.
ஒருபக்கம் பிரிட்டன், கனடா , பிரான்ஸ் போன்ற நாடுகள் 'காஸாவில் ராணுவ நடவடிக்கை தொடர்வதை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என இஸ்ரேலை எச்சரிக்க தொடங்கியுள்ளன.
மறுபுறம், இஸ்ரேலுக்குள்ளே இருந்தே நெதன்யாகு அரசுக்கு எதிராக வலுவான கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் முன்னாள் துணைத் தளபதியும் இடதுசாரி அரசியல்தலைவருமான யெயர் கோலன் (Yair Golan) இஸ்ரேலின் போர் அணுகுமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை அரசுக்கு எதிராக வைத்தார்.
"நாம் நியாயமான, பொறுப்பான நாடாக மீண்டும் செயல்படத் தொடங்காவிட்டால், தென்னாப்பிரிக்கா ஒருகாலத்தில் இருந்தது போல, புறக்கணிக்கப்படும் ஒரு நாடாக மாறக்கூடிய பாதையில் இஸ்ரேல் உள்ளது," என அவர் தெரிவித்தார்.
ஒரு நியாயமான அரசு பொழுதுப்போக்கு போல் குழந்தைகளை கொல்லாது என்றும் விமர்சித்தார்.
கிட்டத்தட்ட 19 மாதங்களுக்கு முன்பு, ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமார் 1,200 பேரை கொன்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் . அதனோடு 251 பேரை பணயக்கைதிகளாக காஸாவிற்கு கொண்டு சென்றனர் அந்த சமயத்தில் அரசுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகள் யாரும் எதிர்பார்க்க முடியாதவையாக இருந்தன.
ஆனால் தற்போது காஸா அழிந்துபோகும் நிலையில் உள்ளது. இஸ்ரேல் புதிய ராணுவத் தாக்குதலை தொடங்கியுள்ளது. 11 வாரங்களாக தொடர்ந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகக் ஒப்புக் கொண்டாலும், இதுவரை சிறிய அளவிலான உதவி மட்டுமே காஸாவை அடைந்துள்ளது.
இஸ்ரேலின் சேனல் 12 நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில் 61% இஸ்ரேலியர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பணயக்கைதிகளைத் திரும்பப் பெற விரும்புவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 25% பேர் மட்டுமே மோதலை விரிவுபடுத்துவதற்கும் காஸாவை ஆக்கிரமிப்பதற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸை அழித்து மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கவேண்டும் என கூறுகிறது. இதில் முழு வெற்றியை பெற முடியும் என நெதன்யாகு கூறுகிறார்.
ஆனால் இஸ்ரேலிய சமூகத்தில் மற்றவர்களிடையே "விரக்தி, அதிர்ச்சி மற்றும் எதையும் மாற்ற முடியாததைப் போன்ற உணர்வு" உள்ளது என இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்பு ஈடுபட்டவரான கெர்ஷொன் பாஸ்கின் (Gershon Baskin) கூறுகிறார்.
"பணயக்கைதிகளின் குடும்பங்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் போரை முடிக்க வேண்டும் என்றும், ஒரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
"ஒரு சிறு குழுவினர் மட்டுமே, ஹமாஸை அழிப்பதே முதன்மையான குறிக்கோள் என்றும், பின்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள்" எனவும் பாஸ்கின் தெரிவித்தார்.
கடந்த ஞாயின்று, சுமார் 500 பேர் காஸாவில் நடத்தும் கொடுமைகளை நிறுத்த வேண்டும் என வாசகம் அடங்கிய ஆடையை அணிந்தபடியும் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடியும் ஸ்டெரோட் (Sderot) நகரில் இருந்து காஸா எல்லை வர பேரணி செல்ல முயன்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான நடவடிக்கையாக, பிரிட்டன் இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தது .
காஸாவில் நடைபெறும் ராணுவ தாக்குதல்களை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி (David Lammy) "தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாதது" எனக் கூறினார்.
இஸ்ரேலுடன் அதன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை ஒழுங்குபடுத்தும் ஒப்பந்தத்தைத் தாம் மறுபரிசீலனை செய்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகளாக இருந்து வரும் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்க, "வலுவான பெரும்பான்மை" உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) தெரிவித்தார்.
திங்கட்கிழமை இரவு, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையைக் கண்டித்தும், காஸாவில் மனிதாபிமான சூழல் மேம்படவில்லை என்றால் "இன்னும் உறுதியான நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்று எச்சரித்தும், கடுமையான மொழியில் எழுதப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் பிரிட்டன் கையெழுத்திட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



