"இந்து என்பதால் கடுமையாக தாக்கினர்" - வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலை என்ன?

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
'தீபு சந்திர தாஸின் மறைவுக்கு மனம் வருந்துகிறோம்' என சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது.
பாலுகாவில் உள்ள தொழிற்சாலையில் பெரிய அளவில் அந்த பேனர் தொங்கவிடப்பட்டிருந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைமென்சிங்கில் உள்ள பாலுகாவில் உள்ள தொழிற்சாலையில் 28 வயதான தீபு சந்திர தாஸ் வேலை செய்து வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வன்முறை கும்பல் தீபுவை சுற்றிவளைத்த அதே இடமான பயனியர் பின்னலாடை தொழிற்சாலையில் தான் இந்த பேனர் வைக்கப்பட்டுளது. காவல்துறையின் கூற்றுப்படி , "மதத்தின் அடிப்படையில்" தீபு சுற்றிவளைக்கப்பட்டு சில நிமிடங்களில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தீபுவின் உடல் தொழிற்சாலையில் இருந்து சிறிது தூரம் எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், அந்த இடம் தொழிற்சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் காவல்துறை தரப்பு கூறுகிறது. இரண்டு இடங்களையும் இணைக்கும் சாலையில் வரிசையாக வீடுகள் மற்றும் சந்தைகள் அமைந்துள்ளன.
மைமென்சிங்கில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத மூத்த காவல் அதிகாரிகள் இது குறித்து பிபிசி-யிடம் பேசுகையில், "அன்றைய தினம் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சம்பவ இடத்தை அடையும் முன்பே தீபு இறந்துவிட்டார். அவரது உடலை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது." என்றனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் வங்கதேசத்தில் பதற்றம் அதிகரித்திருந்த நேரத்தில் நடந்தது. இளைஞர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாதி தலைநகர் டாக்காவில் சுடப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். இது தொடர்ச்சியான போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் வங்கதேசத் தேர்தலில் ஷெரீஃப் உஸ்மான் ஹாதி போட்டியிட திட்டமிட்டு இருந்தார்.
பல கேள்விகள், ஆனால் பதில் இல்லை

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
கும்பல் எப்படி தீபுவை நெருங்கியது? தீபு வேலை செய்த அந்த தொழிற்சாலையில் உள்ள பணியாளர்கள் என்ன செய்தார்கள் என பல கேள்விகள் உள்ளன.
காவல்துறைக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தாலும், தீபுவை பாதுகாக்க ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை?
இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகளாக இருக்கின்றன.
டிசம்பர் 26 சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை பணியாளர்கள் உட்பட 18 பேரை கைது செய்துள்ளதாகவும் மூத்த காவல் அதிகாரி கூறினார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பிபிசி குழுவினர் அந்த தொழிற்சாலையை அடைந்தபோது அங்கிருந்த பாதுகாவலர் உள்ளே பேசுவதற்கு யாரும் இல்லை எனக் கூறினார்.
' எங்களுக்கு நீதி வேண்டும்'

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
மைமென்சிங்கில் இருந்து ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு தீபுவின் குடும்பத்தைச் சந்தித்தோம். அது ஒரு சிறிய குடியிருப்புப் பகுதி.
இங்குள்ள அனைத்து தகர கூரை வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. ஆனாலும், தீபுவின் வீட்டை அடையாளம் காண்பது கடினமாக இல்லை. வீட்டின் அருகிலுள்ள சுவர்கள் தீபுவின் கொலை தொடர்பான சுவரொட்டிகளால் நிறைந்திருந்தன.
நாங்கள் உள்ளே நுழைந்ததும், சோகம் சூழ்ந்த பகுதிக்குள் நுழைந்ததை போல உணர்ந்தோம். அவரின் குடும்பத்தினரால் சரியாக பேசக்கூட முடியவில்லை.
தீபுவின் 21 வயது மனைவி மேக்னா ராணி அதிர்ச்சியில் இருந்தார். அவர் வெறுமையாக அந்த வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஒன்றரை வயதான தீபுவின் மகள், தன் தந்தையின் மரணத்தை அறியாமல், அவ்வப்போது சிரித்துக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களுடன் விளையாட முயற்சித்தார்.
தீபுவின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது , கேள்விகளுக்கான பதில்களோ அல்லது சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களோ அவர்களுக்குப் பெரிதாக முக்கியமில்லை என்பதை உணர முடிந்தது.
தீபுவின் தம்பி அப்பு தாஸ் என்னிடம், "எங்களுக்கு நீதி வேண்டும். நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
'என்னால் வீடியோவை பார்க்க முடியவில்லை'

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்தக் கொலையைக் கண்டித்து, குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது. அவர்கள் நிதியுதவி மற்றும் பிற ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
தீபுவின் இறுதி தருணங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
தீபுவின் தாயார் ஷெஃபாலி ராணி கூறுகையில், "நான் அவனது அம்மா, என்னால் அந்த வீடியோவைப் பார்க்க முடியவில்லை." என்றார்.
இதைக் கூறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, தீபுவின் தாயார் மயங்கி தரையில் சரிந்தார். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அவரே சுயநினைவுக்கு திரும்பினார்.
'அவன் எந்த மதத்தையும் அவமதித்தது கிடையாது'

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
தீபுவின் தந்தையான ரபி லால் சந்திர தாஸ் பிபிசியிடம் கூறுகையில் "மூன்று மகன்களில் தீபு மூத்த மகன். அவன் எந்த ஒரு மதத்தையும் அவமதித்தான் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அவர்கள் சதி செய்து எனது மகனை கொலை செய்தனர்." என்றார்.
"அவனை அறிந்திருந்தவர்கள் பலரும் அங்கு இருந்தனர், ஆனால் யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. அவன் இந்து என்பதால் கும்பல் அவனை கடுமையாக தாக்கியது."
ரபி லால் கூறுகையில் , "அவன் பள்ளி, கல்லூரிகளில் படித்தான், ஆனால் யாரும் அவனின் நடவடிக்கைள் குறித்து குற்றம்சாட்டியது இல்லை. தொழிலாளியாக நான் வேலை செய்கிறேன். தனியாக என்னால் மட்டும் குடும்பத்தை நடத்த முடியாது. தீபு குடும்பத்தை நடத்த உறுதுணையாக இருந்தான்." என்றார்.
தொடர்ச்சியாக பலரும் தீபுவின் குடும்பத்தை வந்து சந்திப்பதைப் பார்க்க முடிகிறது. பலரும் குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறார்கள்.
சிறுபான்மையின சமூகத்தின் மீதான தாக்கம்

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
குறிப்பாக சிறுபான்மை அமைப்புகளுடன் தொடர்ந்து பணியாற்றும் பலர், வங்கதேசத்தில் தீபுவின் கொலையை, தொடர்ந்து தங்கள் உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும், சகிப்பின்மை மேலும் அதிகரித்து வருவதாகவும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
அதே நேரத்தில், சிலர் இந்த கொலைக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
யார், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம், ஆனால் இத்தகைய சம்பவம் சிறுபான்மையின சமூகத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படும் என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்தோம்.
இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் பேச முயற்சித்தோம். கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்ட போது ஏற்பட்ட வன்முறையில் அவரின் கடைகள் குறிவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கு அரசு ஏதாவது இழப்பீடு தந்ததா என்பதை அறிய விரும்பினோம். தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்களா?
அவர் கூறும்போது "நீங்கள் என்னிடம் பேச முயற்சித்தீர்கள். அதற்கு நன்றி. ஆனால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இது குறித்து பேசுவது எனக்கு ஆபத்தாக முடியும்." என கூறினார்.
நாங்கள் அவரது அடையாளத்தை வெளியிட மாட்டோம் என்று அவருக்கு உறுதியளித்தோம், ஆனால் அவர் அவரது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினர் தோராயமாக ஒன்பது சதசிகிதம் உள்ளனர். நாட்டில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ள நிலையில், முஸ்லிம்கள் தோராயமாக 91 சதவிகிதம் பேர் உள்ளனர்.
வங்கதேசம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இருந்தே வகுப்புவாத பதற்றமும், வன்முறைகளும் இருந்துள்ளன. உண்மையில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே மிக மோசமான வன்முறை இருந்துள்ளது.
டாக்காவில் உள்ள பத்திரிகையாளர் மன்ற கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் உரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டம் நடந்தது. அங்கு ரஞ்சன் கர்மகாரைச் சந்தித்தோம்.
"நான் ஒரு மனித உரிமை ஆர்வலர், வங்கதேச இந்து பௌத்த கிறிஸ்தவ ஐக்கிய பரிஷத்துடன் பணியாற்றி வருகிறேன்," என அவர் பிபிசியிடம் கூறினார்.
"2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல், எங்கள் சமூகங்கள் மீது 3,000க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக நாங்கள் கணக்கிட்டுள்ளோம். முன்பு எல்லாம் நன்றாக இருந்தது என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் இப்போது அரசு பார்த்துக்கொண்டிருப்பதாக மட்டும் தெரிகிறது. அவர்களின் மௌனம் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மறைமுக ஆதரவாக மாறிவிட்டது," என்று அவர் கூறினார்.
'சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அல்ல'

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
கர்மகாரின் கூற்றுப்படி, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து நாம் கூறும் போது , இது வகுப்புவாத வன்முறை அல்ல, அரசியல் வன்முறை என அரசாங்கம் கூறுகிறது.
பிபிசியால் தனிப்பட்ட முறையில் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர், கவுன்சிலில் பதிவு செய்திருந்த 2,400 தாக்குதல் மீது வங்கதேச அரசு விசாரணை நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு தரப்பில் வெளியிடப்பட்டு இருந்த விரிவான அறிக்கையில், "வகுப்புவாத வன்முறை நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் "தனிநபர்களின் தனிப்பட்ட தாக்குதல்கள்" என அரசு குறிப்பிடுகிறது.
வங்கதேசத்தில் ஐன்-ஓ-ஷாலிஷ் மையத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான அபு அகமது ஃபயாசுல் கபீர் கூறும்போது, "சிறுபான்மை குழுக்களின் கூற்றுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு நுணுக்கமான கருத்து கவனிக்கப்பட வேண்டும்" எனக் கூறுகிறார்.
"ஷேக் ஹசினா ஆட்சியில் இருந்து வெளியேறியதற்குப் பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்கள், குறிப்பாக கீழ் மட்டத்தில் நடந்து வருகிறது. அதனை மறுக்க முடியாது. தற்போதைய ஆட்சியாளர்கள் இதனை தடுக்கவும் சரிசெய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதையும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது," என அபு அஹ்மத் கூறுகிறார்.
"ஆனால் நாங்கள் எதிர்பார்ப்பது விரைவான சோதனை, தொடக்க நிலையிலான தலையீடுகள் மற்றும் சமூக மட்டத்திலான நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவது போன்ற மிகவும் செயல்திறன் மிக்க, ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும்."
சிறுபான்மையினரின் நிலை குறித்து நாட்டுக்கு வெளியே உள்ள கவலை

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "புதிய வங்கதேசத்தில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
முகமது யூனுஸ் சில மாதங்களுக்கு முன்னர் மத சுதந்திரம் குறித்து பேசி இருந்தார்.
ஆனால் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்நாட்டிலும் , வங்கதேசத்தின் வெளியிலும் அதிகரித்து வருகிறது, அரசுக்கு இது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபுவின் மரணத்திற்கு பிறகும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்தில் மத சுதந்திரம் குறித்து கவலை தெரிவித்து போப் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதே போல, கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் கவலை அளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தியாவும் இந்தப் பிரச்னை குறித்து தங்களின் கருத்தை வெளிப்படுத்தி இருந்தது.
டிசம்பர் 26-ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'சுயாதீன ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,900க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டு இருந்தது.
இவற்றில் கொலை, தீ வைப்பு மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களும் அடங்கும்.மேலும் இந்த சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்றும் இது வெறும் அரசியல் வன்முறை என்று கூறி புறக்கணிக்க முடியாது" எனவும் கூறியுள்ளது.
வங்கதேச தரப்பிலிருந்து இந்தியாவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு வங்கதேச வெளியுறவு துறை அமைச்சகம் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Devashish Kumar/BBC
பெல்ஜியத்தை சேர்ந்த சர்வதேச நெருக்கடி குழு சமீபத்தில் இந்தியா-வங்கதேச உறவுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் தொடர்புடைய தாமஸ் கீன் பிபிசியிடம், "ஷேக் ஹசீனா வெளியேறியதிலிருந்து வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது என்ற கருத்து, இந்தியாவில் இருப்பதாக நான் நம்புகிறேன். ஆனால் 2024-ஆம் ஆண்டில் தாக்குதல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2021-ஆம் ஆண்டைப் போலவே இருந்ததாக தரவு காட்டுகிறது." என்று கூறினார்.
"ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் 2021 சமயத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலில் மிகவும் மோசமான ஆண்டாக இருந்ததாகவும், 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்வினையும் அணுகுமுறையும் மிகவும் வித்தியாசமாக இருந்தது."
தாமஸ் கீன் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இந்தியா குறைந்தபட்ச பொது அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். மறுபுறம், வங்கதேசம் சிறுபான்மையினருக்கு உண்மையிலேயே உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்." என்றார்.

அதே நேரத்தில் பிபிசி வங்கமொழி சேவையின் செய்திப்படி, வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆட்சியில் கும்பல் தாக்குதல் மற்றும் வன்முறை தொடர்பான தாக்குதல்கள் 'ஆபத்தான விகிதத்தில் ' அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
இதற்கிடையில், டாக்கா காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் , ஷெரீஃப் உஸ்மான் ஹாதி கொலையில் முக்கிய குற்றவாளி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறியது. ஆனால் மேகாலயா மற்றும் மேற்கு வங்க காவல்துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (BSF) வங்கதேசத்தின் கூற்றுக்களை நிராகரித்துள்ளனர்.
இப்போது அனைவரின் பார்வையும் பிப்ரவரி 2026-இல் நடக்க இருக்கும் வங்கதேச தேர்தலை நோக்கியே உள்ளது. இடைக்கால அரசு பாதுகாப்பை அதிகரிப்பதாகவும் அமைதியான தேர்தலை உறுதி செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












