ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - என்ன பேசப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் சட்டமன்றமாக கேரள சட்டப்பேரவை உருவெடுத்துள்ளது.
ஞானேஷ் குமார் கேரள மாநில கேடரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரான முதலமைச்சர் வி.டி. சதீசன் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (LDF) இதற்கு ஆதரவளித்தது.
சட்டப்பேரவையில் இருந்த மூன்று பாஜக உறுப்பினர்களில் இருவர் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தனர். 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவையில், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 102 எம்.எல்.ஏ.க்களும், இடது ஜனநாயக முன்னணிக்கு 35 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இந்தத் தீர்மானத்தில், "தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து தற்போதைய சூழலில் தீவிரமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க, தலைமைத் தேர்தல் ஆணையரை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவைக் கேரள பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
அக்கட்சி தனது எக்ஸ் தளப் பதிவில், "நாம் அனைவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தைக் (எஸ்ஐஆர்) கடந்து வந்துள்ளோம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) எங்கள் வீடுகளுக்கு வந்தனர். தற்போது நடைபெறுவது, நேர்மையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான பிஎல்ஓ-களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும்" என்று தெரிவித்துள்ளது.
வரலாற்று முன்மொழிவு
தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சருக்குப் பதிலாக இந்தியத் தலைமை நீதிபதியை அந்தக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. பிரதமரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
"தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை, தனக்குப் பெரும்பான்மை இருக்கும் குழுவாக மாற்றியதன் மூலம் மத்திய அரசு தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் நம்பகத்தன்மையையும் சிதைத்துவிட்டதாக" இந்தத் தீர்மானம் குற்றம்சாட்டியது.
"நமது தேர்தல் நடைமுறையின் நேர்மை என்பது சமரசம் செய்துகொள்ள முடியாத ஒன்று. வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், தகுதியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவது, தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை ஆகியவை குறித்து எழுப்பப்படும் தீவிரமான கவலைகளைப் புறக்கணிக்க முடியாது" என்று சதீசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் மூலம் கேரளம் மூன்று தெளிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது" என்று சதீசன் தனது பதிவில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வாக்குரிமையை மீட்டெடுப்பது, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்குவது, தேர்வு நடைமுறையை மேம்படுத்துவது ஆகிய மூன்று கோரிக்கைகளை சதீசன் முன்வைத்தார்.
"சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் உள்ள முறைகேடுகள் சரிசெய்யப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும். நடுநிலைமை குறித்து தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடைமுறையைத் தொடங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
"வாக்களிக்கும் உரிமை தான் நமது ஜனநாயகத்தின் அடித்தளம். நமது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை எந்தவொரு அமைப்பும் பலவீனப்படுத்த அனுமதிக்க முடியாது. எங்களது நிலைப்பாடு தெளிவானது. வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும். ஜனநாயகம் மேலோங்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு ஆதரவாக கேரளம் உறுதியாக நிற்கிறது" என்று சதீசன் கூறினார்.
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் வாக்காளர் பதிவு அலுவலர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள், படிவம் 6 திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்தது ஆகியவை நிலைமையின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
"வாக்காளர் பட்டியலில் இத்தகைய முறைகேடுகளை செய்வது மக்களின் தீர்ப்பைச் சீர்குலைப்பதற்குச் சமம்" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கேரள வாக்காளர் பட்டியலில் இருந்து 24 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்களான சாஜி செரியன் மற்றும் எம். விபின் ஆகியோர் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரும் முன்மொழிவை முன்வைத்தனர்.
அவர்கள் முன்மொழிந்த திருத்தங்களை முதலமைச்சர் சதீசன் நிராகரித்தார். அப்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த டாக்டர் ரத்தன் யு. கெல்கர், தற்போது முதலமைச்சரின் செயலாளராக உள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் முன்வைத்த பரிந்துரையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
நாடு முழுவதையும் கருத்தில் கொண்டு, தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த "லட்சக்கணக்கான தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்" என்ற சொற்றொடரை "கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்" என்று மாற்ற வேண்டும் என விஜயன் கூறியிருந்தார்.
"கேரளம் வரலாறு படைத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை முதன்முறையாக நிறைவேற்றியுள்ளது" என்று முதலமைச்சர் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
அவரது கூற்று முற்றிலும் தவறானது அல்ல. தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி இதுவரை நாட்டின் எந்தவொரு சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியதில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
பாஜக கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
வி.டி. சதீசனின் பதிவுக்குப் பாரதிய ஜனதா கட்சி பதிலளித்துள்ளது.
இது "முன்னெப்போதும் இல்லாத பாசாங்கு மற்றும் மோசடியின் வெட்கக்கேடான வரலாறு" என்று பாஜகவின் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் கேரளத்தில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கேட்கப்படுகிறது. ஆனால், கேரளத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளைக் கண்காணித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, வி.டி. சதீசனின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று அவர் கூறினார்.
"வரலாறு படைப்பதாகக் கூறி முதலமைச்சர் செய்துள்ள மிகப்பெரிய காரியம் என்னவென்றால், ஐந்து உத்தரவாதங்களில் நான்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். 'புதுயுக கேரளம்' என்ற கனவு, மின்வெட்டு, மருந்துத் தட்டுப்பாடு, அதிகரிக்கும் கடன், இதுவரை இல்லாத அளவிலான வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலை ஆகியவற்றையே தந்துள்ளது. நிச்சயமாக, இது வரலாறு தான். ஆனால், பெருமைப்படவோ விளம்பரப்படுத்தவோ தேவையில்லாத வரலாறு இது" என்று ராஜீவ் சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஞானேஷ்குமார் தொடர்பான பழைய வழக்கு

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பொதுப்பணித் துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது அவர் மீது பதிவு செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை மாநில அரசு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கடந்த வாரம் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், இந்த விவகாரம் குறித்து சட்ட ஆலோசனை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஞானேஷ் குமார் பொதுப்பணித் துறைச் செயலாளராக இருந்த காலத்தில், ரூ.215 கோடி மதிப்பிலான சாலைத் திட்டத்தில் தண்டனைக்குரிய குற்றம் நடைபெற்றுள்ளதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"அதனால் தான், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
2006-ஆம் ஆண்டில் மலேசியா திரும்பிய பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. லீ சீ பீன், உலக வங்கி நிதியுதவி பெற்ற சாலைத் திட்டத்தில் பணியாற்றி வந்த இந்தியா-மலேசியா கூட்டு நிறுவனத்தின் தலைமைத் திட்ட மேலாளராக இருந்தார்.
தனது தற்கொலைக் குறிப்பில், அந்தக் கூட்டு நிறுவனத் திட்டத்தில் ஊழல் சுழற்சியைத் தொடர்ந்து பராமரிக்கத் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































