காணொளி: சாலையில் வீசப்பட்டிருக்கும் கடவுள் படங்களை இவர்கள் என்ன செய்கின்றனர்?

காணொளி: சாலையில் வீசப்பட்டிருக்கும் கடவுள் படங்களை இவர்கள் என்ன செய்கின்றனர்?

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள HSR லேஅவுட்டில் 19வது குறுக்கு சாலையின் பூங்கா அருகில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.

பெங்களூருவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து கடவுள்களின் போட்டோ பிரேம்களை இந்தக் கோயிலில் கொண்டு வந்து வைத்தனர். இதில் சிலவற்றை, சாலைகளின் ஓரங்களிலிருந்தும் பிற பொது இடங்களிலிருந்தும் பெங்களூருவில் செயல்படும் HSR Citizen Forum தன்னார்வ அமைப்பினர் சேகரித்தனர்.

இவர்கள் இந்த போட்டோ பிரேம்களை மறுசுழற்சி செய்ய திட்டமிட்டனர்.

இந்த நிகழ்ச்சியை அவர்கள் இந்த ஆண்டில் மூன்று முறை நடத்தியுள்ளனர். அமைப்பின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தேதியில் கோவிலில் கூடுகிறார்கள். சேகரிக்கப்பட்ட போட்டோ பிரேம்களை காட்சிப்படுத்தி, பார்வையாளர்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுமாறு சொல்கிறார்கள்.

இந்தப் பொருட்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், உலோகம், கல், லேமினேட் பிரேம்கள், கண்ணாடி மற்றும் மரத்தாலான பிரேம்கள், இரும்பு பிரேம்கள், பிளாஸ்டிக் பிரேம்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

அதன் பிறகு, போட்டோ பிரேம்கள் பிரிக்கப்படுகின்றன. லேமினேட் செய்யப்பட்ட பிரேம்களிலிருந்து பிளாஸ்டிக்கும் காகிதமும்; இரும்பு பிரேம்களிலிருந்து கண்ணாடி, ஆணிகள் மற்றும் மரம் அகற்றப்படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டோ பிரேம்கள் சேகரிக்கப்பட்டாலும், அவற்றை பிரிக்கும் பணிகள் செய்து முடிக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது.

பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகிதம், கண்ணாடி, ஆணிகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் அதே வேளையில், மரங்களும் ஒட்டு பலகையும் பொடி செய்யப்பட்டு தாவரங்களின் மீது தெளிக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்த சிலர், தங்கள் ஊர்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு தங்களை அணுகி கேட்டுக்கொள்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு