You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடலில் மக்னீசிய சத்து குறைவது எவ்வளவு ஆபத்தானது?
- எழுதியவர், ஹேசல் ஃப்ளைட்
- பதவி, பிபிசி
சமீபத்திய மாதங்களில் மக்னீசியம் சத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகம் எழுந்துள்ளது.
தூக்கப்பிரச்னை, தசை இறுக்கம், குறைவான ஆற்றல் ஆகியவை மக்னீசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறி உள்ளவர்கள் உணவைத் தாண்டி கூடுதல் மக்னீசியம் சேர்க்கை (magnesium supplement) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பரிந்துரைக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் உடல் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு மக்னீசியம் எடுத்துக் கொள்வதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
வளர்ந்த நாடுகளில் 10 முதல் 30 சதவிகிதம் வரையிலான மக்களுக்கு மிதமான மக்னீசிய குறைபாடு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பல நுண்சத்துகளில் மக்னீசியமும் ஒன்று.
நம் உடலில் 300க்கும் மேற்பட்ட நொதிகள் புரதம் உருவாக்குதல், எலும்புகளை வலுப்படுத்துதல், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட தங்கள் வேதியியல் பணிகளைச் செய்வதில் மக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய துடிப்பு மற்றும் தசைகள் சுருங்க உதவும் மின் கடத்தியாகவும் மக்னீசியம் செயல்படுகிறது.
நம் உடலில் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருப்பது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
அதற்காக மக்னீசியம் குறைபாடு உள்ள அனைவரும் கூடுதல் சேர்க்கையாக மக்னீசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
உணவு முறையில் சரியான திட்டமிடல் இருந்தால் நமக்குத் தேவையான மக்னீசிய அளவை நம்முடைய தினசரி உணவில் இருந்தே பூர்த்தி செய்யலாம்.
மக்னீசிய குறைபாட்டின் அறிகுறிகள்
நம்முடைய செல்களில் உள்ள மக்னீசிய அளவை ரத்த மாதிரிகள் துல்லியமாக பிரதிபலிக்காது என்பதால் மக்னீசிய குறைபாடு பலருக்கும் கண்டறியப்படுவதில்லை.
பலவீனம், பசியின்மை, சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை மக்னீசிய குறைபாட்டின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகளும் அதன் தீவிரமும் நம்முடைய உடலில் உள்ள மக்னீசியக் குறைபாட்டின் அளவைப் பொறுத்தது.
இந்தக் குறைபாடு கவனிக்கப்படாமல் இருந்தால் இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரண்டாம் வகை நீரிழிவு, ஒற்றைத் தலைவலி, அல்சைமர் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன.
யாருக்கும் மக்னீசிய பற்றாக்குறை ஏற்படலாம் என்றாலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
செலியாக் மற்றும் குடல் அழற்சி போன்ற நோய்கள் உடலின் நுண்ணூட்டச்சத்துகள் உறிஞ்சும் திறனை பாதிக்கும் என்பதால் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் உடலில் மக்னீசிய அளவு குறைவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
தினசரி உணவில் மக்னீசியம்
மக்னீசிய குறைபாடு பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் நம்முடைய தினசரி உணவில் போதுமான அளவு மக்னீசியம் இருப்பதை உறுதிசெய்து கொள்வது முக்கியம்.
ஒரு நபருக்கு தினசரி தேவைப்படும் மக்னீசியத்தின் அளவு என்பது அவரது வயது மற்றும் உடல்நலத்தைப் பொறுத்தது.
ஆனால், பொதுவாக 19 முதல் 51 வயதுள்ள ஆண்களுக்கு ஒரு நாளுக்கு 400 முதல் 420 மில்லிகிராம் மக்னீசியமும், பெண்களுக்கு 310-320 மில்லிகிராம் மக்னீசியமும் தேவைப்படும்.
இன்று கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட குறைந்த அளவிலான மக்னீசியமே கிடைக்கின்றன. எனினும், உணவுப்பழக்கத்தை சரியாக திட்டமிட்டால் நமக்குத் தேவையான அளவு மக்னீசியத்தை அதன் மூலமே பெற முடியும்.
பாதாம் போன்ற கொட்டைகள், விதைகள், தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், பால், தயிர் ஆகிய உணவுகளில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளன.
வெறும் 28 கிராம் பாதாமில் வயது வந்தோருக்கான ஒரு நாள் மக்னீசிய தேவையின் 20 சதவிகிதம் உள்ளது.
சில நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கூடுதலான மக்னீசிய சேர்க்கை தேவைப்படும். மற்றவர்கள் தங்கள் உணவு மூலமாகவே மக்னீசிய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
எனவே, கூடுதல் சேர்க்கையாக மக்னீசியம் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது முக்கியம்.
கூடுதல் சேர்க்கையாக மக்னீசியம் எடுத்துக்கொள்ளும் போது அதை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுப்பது பாதுகாப்பானது.
அதிக அளவு மக்னீசியம் எடுக்கும் போது வயிற்றுப்போக்கு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
மருத்துவர்கள் பரிந்துரைக்காத பட்சத்தில், சிறுநீரக செயலிழப்பு கொண்டவர்கள் கூடுதல் சேர்க்கையாக மக்னீசியம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மக்னீசிய கூடுதல் சேர்க்கை என்பது உடனடித் தீர்வல்ல. சில சந்தர்ப்பங்களில் அவசியம் தேவைப்பட்டாலும்கூட, அது பற்றாக்குறைக்கான மூலக்காரணத்தை சரி செய்யாது.
எனவே, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் சமநிலையான உணவுப்பழக்கத்துடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்