சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

சிறுவாணி திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணிர் குடிநீர் தேவைக்காக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பில்லூர் திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கேரளாவில் முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து அத்திக்கடவு மற்றும் பவானி சாகர் அணை வரை இந்த நீர் தான் செல்கிறது.

இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிற இந்த தடுப்பணையால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிறுவாணி தொடர்பாக புத்தகம் எழுதியுள்ள கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கோவையில் முதல் குடிநீர் திட்டமான சிறுவாணி முதன் முதலில் 1899 ஆம் மொழியப்பட்டு 40 ஆண்டுகள் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 1929-ம் ஆண்டு செயல்பாடிற்கு வந்தது. இந்தியாவிலேயே ஒரு நகராட்சியால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முதல் குடிநீர் திட்டம் சிறுவாணி தான். அப்போது மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்படவில்லை. ஒன்றுபட்ட கோவையில் தான் சிறுவாணி இருந்தது," என்கிறார்.

"1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சிறுவாணி அணை கேரளா வசம் சென்றது. ஆனால் அதன் பயன்பாடு தமிழ்நாட்டில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சிறுவாணி அணை பராமரிப்புக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது. 1973-ம் ஆண்டு தமிழ்நாடு - கேரளா இடையே சிறுவாணி குடிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தற்போது வரை தமிழ்நாடு, சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் எடுத்து வருகிறது. ஆனால் மக்கள்தொகை பெருக்கம் மற்றும் அதிகரித்த நீர் தேவை காரணமாக சிறுவாணியை மட்டும் நம்பாமல் பில்லூர் திட்டங்களிலிருந்தும் கோவைக்கு தண்ணீர் பெறப்படுகிறது.

முல்லைப் பெரியாறு போல சிறுவாணியும் அணை கேரளாவிலும் அதன் பயன்பாடு தமிழ்நாட்டிலும் உள்ளது. இது பிரச்னைகள் அவ்வப்போது எழுவது வழக்கம். இரு மாநில அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்,” என்கிறார் இளங்கோவன்.

கோடை காலங்களில் சிறுவாணி அணையில் நீர் இருப்பு குறைகின்றபோது கேரளாவிடமிருந்து நீர் பெறுவது பெரும் விவாதப் பொருளாவது வழக்கமாக உள்ளது.

சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் கோவையில் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்படுகிறது.

ஒப்பந்தம் சொல்வது என்ன?

கேரள அரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிறுவாணியிலிருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 304 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

ஆண்டு ஒன்றுக்கு (1 ஜூலை முதல் 30 ஜூன் வரையிலான காலகட்டத்தில்) 1.30 டி.எம்.சி குடிநீர் வழங்கப்பட வேண்டும். சிறுவாணி அணையின் கொள்ளளவு 50 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடிக்கும் குறைவாக மட்டுமே அதில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

தடுப்பணை எங்கே கட்டப்படுகிறது?

கேரள மாநிலம் பாலக்காட்டில், அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 90% பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே இந்த தடுப்பணை கட்டப்படுவதால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து தடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கோவைக்கு என்ன பாதிப்பு?

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “சிறுவாணி ஆறு, பவானி ஆறு உட்பட அனைத்து நதிகளும் காவிரியின் கிளை நதிகளாக உள்ளன.

காவிரி கிளை நதிகளில் தடுப்பணை உட்பட எந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் கேரள அரசு இந்த தடுப்பணை கட்ட எந்த முன் அனுமதியும் பெறவில்லை. தமிழக அரசிடம் தெரிவிக்காமலே இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

இது போக, மேலும் இரண்டு இடங்களில் தடுப்பணை கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ளது. இதனால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும். சிறுவாணி அணையில் கோடை காலங்களில் தண்ணீர் வந்த சுரங்கப்பாதையை கேரள அரசு மூடி விட்டது. இதனால், கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையும். கேரள அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசும் இதில் தலையிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறும் கேரள அரசின் தொடர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்,” என்கிறார்.

சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தடுப்பணை விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்டு சட்ட நடவடிக்கை உட்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.

சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்திலே பேசப்பட்டது. நீர்வளத் துறை அமைச்சரும் பதில் அளித்துள்ளார். அது தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டு வருகிற நிலையில் தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,” என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத பொதுப் பணித்துறை உயரதிகாரி, "இந்த விவகாரத்தில் துறை ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அரசு மட்டத்தில் தான் அது நடத்தப்படும். அவ்வாறு எந்த கூட்டமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. பவானி ஆற்றில் எப்போதும் தண்ணீர் வரத்து இருந்து கொண்டே தான் இருக்கும். தண்ணீரை திருப்பி விடாமல் தேக்கி வைப்பதற்காக தடுப்பணை கட்டப்பட்டால் அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது,” என்றார்.

பாலக்காடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரி தமது பெயரை வெளியிடக் பெயர் குறிப்பிடாமல் நம்மிடம் பேசுகையில், "இதில் எந்த விதிமீறலும் இல்லை. அரசாங்க அளவில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அதிகாரபூர்வமாக இதுவும் தெரிவிக்கப்படவில்லை," என்றார்.

கேரள அரசின் பதில் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக கேரளா அரசு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இது தொடர்பாக கருத்து பெற கேரளா நீர்ப்பாசன துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி ஆகியோரை தொடர்பு கொண்டோம்.

ஆனால் இந்த கட்டுரை பிரசுரமாகும் வரை அமைச்சர் தரப்பிடம் இருந்து அதிகாரபூர்வ கருத்தைப் பெற முடியவில்லை. அவர்களின் கருத்து கிடைக்கப்பெற்றவுடன் கட்டுரையில் இணைக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: