You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுக்கோட்டை: ஆஸ்திரேலிய மனைவியால் பறிபோன மன்னர் பதவி, மன்னரான சிறுவர்கள் - தொண்டைமான்களின் வரலாறு
- எழுதியவர், ஆ.நந்தகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஒரு மன்னர் வாழ்ந்த அரண்மனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுவது புதுக்கோட்டையில் மட்டும்தான்.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவுவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப் பேரவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக மாறும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது.
அப்போது 99.99 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரு அரண்மனை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாறியது எப்படி? புதுக்கோட்டையின் அடையாளமாக இருக்கும் தொண்டைமான்கள் யார்? கட்டபொம்மனுக்கும், முத்துலட்சுமி ரெட்டிக்கும் அவர்கள் செய்தது என்ன?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொண்டைமான்களின் வருகை
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 17ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்கள் ஆட்சிக்கு வந்தனர்.
கடந்த 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டை மண்டலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தற்போது வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவில் உள்ள பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில் இருந்து தொண்டைமான்களின் முன்னோர்கள் விஜயநகர ராணுவத்துடன் இடம்பெயர்ந்து புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து வந்தவர்களில் ஒரு குழுவினர் தங்குவதற்கு கறம்பக்குடி மற்றும் அம்புக் கோவில் பகுதியில் உள்ளூர் பல்லவராய குறுநில மன்னர் நிலம் ஒதுக்கியதாகவும், பின்னாளில் புதுக்கோட்டையை ஆட்சிபுரிந்த தொண்டைமான்களின் முன்னோர்களாக அவர்கள் திகழ்ந்தனர் என்றும் தமிழக அரசு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.
சுமார் 300 ஆண்டுகள் புதுக்கோட்டையில் நிலவிய தொண்டைமான் மன்னர்களின் ஆட்சி நிறைவு பெற்று மக்களாட்சி ஏற்பட்டது.
’’புதுக்கோட்டையின் பெயர், இங்கு புதிய கோட்டை கட்டப்பட்ட பின் ஏற்பட்டதாக இருக்கலாம். இங்கிலாந்தில் நியூகேசல்(New castle) என்ற ஊர் இருப்பது போல, புதுக்கோட்டைக்கு இதுபோன்ற ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு புத்தகத்தை எழுதியவரும், புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியருமான ராஜா முகமது.
ஆங்கிலேயருக்கு நெருக்கம் - மன்னரான சிறுவர்கள்
கடந்த 1807ஆம் ஆண்டு முதல் 1825ஆம் ஆண்டு வரை மன்னராக இருந்த ராஜா விஜய ரெகுநாத ராய தொண்டைமான், ஒரு மைனராக இருக்கும்போதே பிரிட்டிஷ் அரசால் முடிசூட்டப்பட்டார். மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் தனது 11வது வயதில் புதுக்கோட்டையின் மன்னரானார்.
புதுக்கோட்டையின் கடைசி மன்னரான ராஜராஜகோபால தொண்டைமான் பிரிட்டிஷ் அரசால் 6 வயதில் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த மூவரின் ஆட்சிக் காலத்திலும் நிர்வாகத்தை ஆங்கிலேய நிர்வாகிகளே கவனித்து வந்தனர்.
’’தொண்டைமான்கள் எப்போதும் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிற்றரசாகவே தொண்டைமான்கள் ஆட்சி இருந்தது'’ என்கிறார் ராஜா முகமது.
கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தார்களா?
ஆங்கிலேயர்களின் கோல்வார்பட்டி தாக்குதலுக்குப் பிறகு "கட்டபொம்மன் உட்பட சிலர் மட்டும் தப்பித்து புதுக்கோட்டைத் தொண்டைமான் ராஜாவிடம் உதவி கேட்டுச் சென்றனர். அப்போது ராஜாவின் எல்லைக்கு உட்பட்ட திருக்களம்பூர் குமரப்பட்டி காட்டில் அவர்கள் பதுங்கி இருந்தபோது, கட்டபொம்மன் உட்படச் சிலர் தொண்டைமான் ராஜாவால் சிறைப்படுத்தப்பட்டு மேஜர் பானர்மேனிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று 1917இல் வெளியிடப்பட்ட மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெசட்டில் (திருநெல்வேலி) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்த புதுக்கோட்டை தொண்டைமான் ராஜாவைப் பாராட்டி கவர்னர் கிளைவ் லண்டனிலுள்ள இயக்குநர்களுக்குக் கடிதம் எழுதியதாகவும், இயக்குநர்கள் அரசரைப் பாராட்டி சால்வை, ஒரு குதிரை, இரண்டாயிரம் பொற்காசுகள் வழங்கியதாகவும் ’புதுக்கோட்டையின் பொது வரலாறு’ நூலில் ராதாகிருஷ்ண அய்யர் எழுதியுள்ளார்.
ஆஸ்திரேலிய மனைவியால் பதவியை இழந்த அரசர்
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் தனது 11வது வயதில் புதுக்கோட்டையின் மன்னரானார். ஆங்கிலேய அரசின் ஒப்புதலுடன் ஒரு கவுன்சில் மூலம் நிர்வாகம் கவனிக்கப்பட்டது. இவர் ஆஸ்திரேலிய பெண்ணை மணந்தார்.
அவருக்கு சிட்னி மார்த்தாண்டா என்ற மகன் பிறந்தார். அந்நிய நாட்டின் பெண் மூலம் மன்னருக்குப் பிறந்த குழந்தை, எதிர்காலத்தில் மன்னராவதைச் சிலர் விரும்பவில்லை. மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆங்கில அரசும் தனக்குச் சாதகமாக இல்லை என்பதை அறிந்துகொண்ட மன்னர், தனது அரியணையைத் துறந்து பாரிஸில் குடியேறினார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
புதுக்கோட்டையில் 1886-ம் ஆண்டு பிறந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மன்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம்கொண்டு 1904-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
"அன்று சமஸ்தான ஆட்சியிலிருந்த சில பழமைவாத அதிகாரிகள், அவரை கல்லூரியில் சேர்த்துக்கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்''.
''ஆனால் பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான், அதிகாரிகளிளின் மறுப்புகளைத் தூக்கி எரிந்துவிட்டு முத்துலட்சுமி அவர்களுக்குக் கல்லூரியில் சேர அனுமதி வழங்கினார். இது தர்பார் பதிவுகளில் இடம்பெற்றுள்ளது,’’ என்கிறார் ராஜா முகமது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படிப்பை முடித்துவிவிட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை முத்துலட்சுமி தொடர்ந்தார். இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
கடந்த 1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்த முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதாவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிக்காக, 1956ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
கட்டடங்களின் வரலாறு
தற்போது புதுக்கோட்டை நகரின் அடையாளமாகத் திகழும் பல கட்டடங்கள் 1850களுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளன. சேஷையா சாஸ்திரி, 1878இல் திவானாக நிர்வாகத்திற்கு வந்த பிறகு, சிவப்பு நிறத்தில் உயர்ந்த நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவான் அலுவலகமாகச் செயல்பட்ட இந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் தற்போது மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ராஜகோபால தொண்டைமான், 1928 முதல் 1948 வரை மன்னராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில், 1930ஆம் ஆண்டு 'புதிய அரண்மனை’ எனும் பெயர் கொண்ட அரண்மனை கட்டப்பட்டது. இந்தோ- செராசெனிக் திராவிட கட்டடக்கலையில் கட்டப்பட்ட இந்த அரண்மனை தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இயங்கி வருகிறது.
இந்தியாவுடன் இணைப்பு
"கடந்த 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்புக்கு இணங்க, சமஸ்தானத்தின் எதிர்காலம் குறித்துப் பேச, ராஜகோபால தொண்டைமான் டெல்லி சென்றார்''
''இந்திய அரசு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தது. சமஸ்தான மக்களும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என விரும்பிய நிலையில், மன்னர் சமஸ்தான உயரதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்காமலேயே சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்பிக்கொண்டார்’’ என்கிறார் ராஜா முகமது.
அரசுக் கருவூலத்தில் அன்று தேங்கியிருந்த 83 லட்ச ரூபாய் நிதியுடன் இந்தியாவுடன் இணைந்தது. சுமார் 300 ஆண்டுகள் புதுக்கோட்டையில் நிலவிய தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி நிறைவு பெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகமான அரண்மனை
இந்தியாவுடன் இணைந்த பிறகு, திருச்சி அரண்மனைக்கு ராஜகோபால தொண்டைமான் இடம்பெயர்ந்தார்.
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஜனவரி 14 1974இல் உருவாக்கப்பட்டது.
"இந்த நிலையில் இதே காலத்தில் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது. இதனால் முன்னாள் மன்னர்களின் சொத்துகளுக்குப் பல வரிகள் விதிக்கப்பட்டன. 99.99 ஏக்கர் நிலத்தைப் பராமரித்து, வரி கட்டுவது மன்னர் குடும்பத்திற்குச் சுமையாக இருந்தது.''
''மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேடி வந்த அரசு, 32 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்து அந்த அரண்மனையை வாங்கியது. பின்னர் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலாம் செயல்படத் துவங்கியது,’’ என்கிறார் ராஜா முகமது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)