அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தம் விவசாயிகளை பாதிக்குமா? எதிர்க்கட்சிகள் விமர்சனமும் அமைச்சர் பதிலும்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். பின்னர் இது தொடர்பாக நரேந்திர மோதியும் தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
ஆனால், ரஷ்ய எண்ணெய் தொடர்பாக டிரம்ப் குறிப்பிட்டது உட்பட சில விஷயங்கள் நரேந்திர மோதியின் பதிவில் இல்லை. இருவரது பதிவிலும் சில முரண்பாடுகள் இருந்தால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக குழப்பம் நிலவியது.
இந்த நிலையில், இரு நாடுகளும் தற்போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, அனைத்து அமெரிக்க தொழில்துறை தயாரிப்புகள் மற்றும் எத்தனால் தயாரிப்பின் போது கிடைக்கும் உலர் தானியங்கள், கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் இதர விவசாய தயாரிப்புகள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
இந்தியாவிலிருந்து வரும் ஜவுளி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் உள்ளிட்டவற்றின் மீது 18 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா விதிக்கும்.
இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக அமைந்தால், ஜெனரிக் மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொருட்களின் மீதான பரஸ்பர வரி நீக்கப்படும்.
அமெரிக்காவும் இந்தியாவும் தங்களுக்கு பரஸ்பர நலன் உள்ள துறைகளில், ஒருவருக்கொருவர் முன்னுரிமை சந்தை அணுகலை வழங்க ஒப்புக்கொள்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் பலன்கள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அமெரிக்காவும் இந்தியாவும் மூல விதிகளை நிறுவும்.
இந்திய சந்தையில் அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தில் உள்ள வரிகள் அல்லாத தடைகளை சரிசெய்ய இந்தியா ஒப்புக்கொள்கிறது. அமெரிக்க மருத்துவ உபகரணங்களின் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்த தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான அமெரிக்க தயாரிப்புகளின் சந்தை நுழைவைத் தாமதப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் இறக்குமதி உரிம நடைமுறைகளை இந்தியா நீக்கும்.
ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் எழுந்தால், மற்றொரு நாடு தனது உறுதிமொழிகளை மாற்றிக்கொள்ளலாம்.
அமெரிக்காவும் இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் மூலம் சந்தை அணுகல் வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கிச் செயல்படும்.
அமெரிக்க எரிசக்திப் பொருட்கள், விமானங்கள், விமான பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் உட்பட அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா அமெரிக்காவிடம் வாங்க உத்தேசித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தம் தொடர்பாக மோதி அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தக் குற்றச்ச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய விவசாயப் பொருட்கள் பூஜ்ஜிய வரியில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். அதே நேரத்தில், இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு எந்த வரிச் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றார்.
இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், எத்தனால் தயாரிப்பின் போது கிடைக்கும் உலர் தானியங்கள், மது மற்றும் மதுபானங்கள் போன்ற சில அமெரிக்கப் பொருட்களுக்கு மட்டுமே இந்திய சந்தையைத் திறந்துள்ளோம். இவற்றிற்கும் குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இந்தியா மற்றும் அமெரிக்காவால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இது இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல. இது ஒரு 'இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு' மட்டுமே. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இது அமெரிக்காவிற்கு சாதகமாகவே பெரிதும் அமைந்துள்ளது.
உதாரணமாக, இந்தியா அமெரிக்காவின் அனைத்துத் தொழில்துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை நீக்கும் அல்லது குறைக்கும் அதே வேளையில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்கும். இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு என்பது எப்படி கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



