You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குறைந்த கொழுப்புள்ள பாலை கூடுதல் விலைக்கு விற்கிறதா ஆவின்? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் - காணொளி
ஆவின் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. கொழுப்பு குறைந்த பால் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசினார் தமிழக பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
கடந்த சில மாதங்களாக ஆவின் பால் கொள்முதல் குறித்தும் விற்பனை குறித்தும் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆவினில் உண்மையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? என்ற கேள்வியை மனோ தங்கராஜிடம் பிபிசி தமிழ் கேட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “நான் இதை வரவேற்கிறேன். கடந்த சில நாட்களில் ஆவின் மிகப் பெரிய பேசு பொருளாகியிருக்கிறது. இது எங்களுக்கு லாபம்தான். பல கோடி செலவு செய்தாலும் இந்த அளவு விளம்பரம் கிடைக்காது.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ஆவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு பல ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால், ஆவின் மக்களுக்கு மிகப் பெரிய உதவியை இந்த நிறுவனம் செய்துவருகிறது.” எனத் தெரிவித்தார்.
ஆவினின் சராசரி பால் கொள்முதல் குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “இப்போது சராசரியாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். இது ஒரு நல்ல அளவு. ஏனென்றால் பால் உற்பத்தி என்பது எப்போதுமே ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும்.” எனத் தெரிவித்தார்.
மேலும், “மழை பெய்வது, தீவனம் கிடைப்பது, மாடு சினையாக இருப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதனைப் பாதிக்கும். ஆகவே, சராசரியாக தினசரி 30 லட்சம் லிட்டர் பால் என்பது ஒரு நல்ல அளவுதான். ஒரு கட்டத்தில் தினசரி 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்தி அதிகரிப்பு அல்ல. கோவிட் பரவல் இருந்தபோது, வாங்குவதற்கு தனியார் இல்லாததால், இங்கே கொள்முதல் அதிகரித்தது. இதை வைத்துக்கொண்டு, தவறான பிரச்சாரத்தை இப்போது செய்கிறார்கள்.” என அமைச்சர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)