'பிராமணர்களை' சாடிய பீட்டர் நவரோ இப்போது ஈலோன் மஸ்கை விமர்சிப்பது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் செய்திகளில் தென்பட்டுள்ளார்.

நவரோ தனது X சமூகவலைதள பக்கத்தில், "இந்திய அரசின் பிரசாரக் குழு முழு பலத்துடன் செயல்படுகிறது" என மஸ்க்கை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த விவகாரம் அவரின் முந்தைய பதிவுடன் தொடர்புடையது. இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட பதிவின் கீழ் உண்மையை சரிபார்க்கும் (Fact Check) வகையில் X தளத்தின் விளக்கக் குறிப்பு (community note) இடம்பெற்றிருந்தது.

இதனால் நவரோ கடும் கோபடைந்துள்ளார். ஈலோன் மஸ்கின் இந்த செயல் குறித்து குற்றம்சாட்டியுள்ளார். எனினும் ஈலோன் மஸ்க் இதுவரை இதற்கு பதில் அளிக்கவில்லை.

மஸ்க் பெயரில் இந்தியாவை குறிவைத்ததன் பின்னணி:

வெள்ளிக்கிழமை அன்று இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவில், "இந்தியாவின் அதிக வரி அமெரிக்கா வேலைகளை பாதிக்கிறது. லாபம் ஈட்டுவதற்காகவே இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. இந்த பணம் ரஷ்ய போர் இயந்திரங்களுக்கு செல்கிறது. இதனால் யுக்ரேன் மற்றும் ரஷ்ய மக்கள் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவில் வரி செலுத்துபவர்கள் அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியா இந்த உண்மையை ஏற்க மறுத்து கதையை வேறுபக்கம் திருப்புகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு X விளக்கக் குறிப்பு (community note) ஒன்றை பதிவிட்டது. இந்த விளக்கக் குறிப்பு X தள பயனர்களால் பகிரப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தனது தேவைகளுக்காகவே இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. லாபத்திற்காக மட்டுமல்ல. இது எந்த சர்வதேச தடைக்கும் எதிரானது அல்ல. இந்தியா சில பொருட்களுக்கு வரி விதித்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தகத்தால் நிறைய லாபம் ஈட்டுகிறது. மேலும் அமெரிக்காவும் ரஷ்யாவிடம் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுகள் காட்டுகிறது" என அந்த விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த விளக்கக் குறிப்புக்கு நவரோ பதில் அளித்துள்ளார்.

இதை மேற்கோள் காட்டி, "அற்புதம். ஈலோன் மஸ்க் மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை அனுமதிக்கிறார். கீழே உள்ள குறிப்பு அர்த்தமற்றது. லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. யுக்ரேனின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் இந்தியா இந்தளவு எண்ணெய் வாங்கவில்லை. இந்திய அரசின் பிரசாரக் குழு முழு பலத்துடன் செயல்படுகிறது. யுக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்கர்களின் வேலையைப் பறிப்பதை நிறுத்துங்கள்" என நவரோ பதிவிட்டுள்ளார்.

இதற்கும் X தளம் விளக்கக் குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளத். அதில், "நவரோவின் குற்றச்சாட்டுகள் இரட்டை நிலைப்பாடுகளுடன் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது சட்டப்பூர்வமானது. மேலும் இது தனது ஆற்றல் பாதுகாப்புக்கனது. அதில் எந்த சர்வதேச சட்டமும் மீறப்படவில்லை. இந்தியா மீது அமெரிக்கா பல அழுத்தங்களை சுமத்திவிட்டு, ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் உட்பட பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதுவே அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக காட்டுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராமணர்கள் குறித்த கருத்து:

சமீபத்தில் இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக கருத்து ஒன்றை தெரிவித்து இந்தியா ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் தோன்றினார் பீட்டர் நவரோ.

டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த வர்த்தக ஆலோசகரான நவரோ ஞாயிறு அன்று Fox செய்தி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், "பிரதமர் மோதி சிறந்த தலைவர். இந்திய தலைவர்கள் எப்படி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஒன்றிணைகிறார்கள் என்பது புரியவில்லை. அதிலும் குறிப்பாக இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ளது" எனக் கூறியிருந்தார்.

"இந்திய மக்களே. இங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். நாம் இதை நிறுத்த வேண்டும்" எனவும் நவரோ பேசியிருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்' என்ற இந்த கூற்று, ஆங்கிலேயர்களின் 'பிரித்தாளும் கொள்கையை ஏற்றுக்கொண்டது போன்றது' எனக் கூறினார்.

நவரோவின் கூற்று குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அவர் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். இதை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்றார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக டிரம்ப் இந்தியா மீது 50% வரியை விதித்துள்ளார். இந்தியா இதை நியாயமற்றது மற்றும் யதார்த்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் எங்கிருந்து மலிவான எண்ணெய் கிடைத்தாலும் தொடர்ந்து வாங்குவோம் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

மஸ்க், நவரோ இடையிலான பழைய பகை:

கடந்த ஏப்ரல் மாதத்தில், டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோவை ஈலோன் மஸ்ட் முட்டாள் எனக் கூறியிருந்தார். அவர் தனது X வலைதள பக்கத்தில், நவரோவை மிகவும் முட்டாளான நபர் எனக் குறிப்பிட்டார்.

நவரோ ஒரு நேர்காணலில் டெஸ்லாவை விமர்சித்ததை தொடர்ந்து ஈலோன் மஸ்க் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

"மஸ்க் கார்களை வடிவமைக்கப்போவதில்லை. ஆனால் நிறைய சமயங்களில் அவர் கார்களை ஒன்று சேர்க்கிறார்" என நவரோ கூறியிருந்தார்.

டிரம்பின் புதிய வரிக்கொள்கை பற்றி பேசிய நவரோ, எதிர்காலத்தில் அமெரிக்காவில் காரின் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.

நவரோவின் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என மஸ்க் கூறினார். இந்த மோதல் டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்க் ஓர் அங்கமாக இருந்தபோது நடந்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் மீது பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே விமரசனங்களை முன்வைத்தார்.

யார் இந்த பீட்டர் நவரோ? டிரம்ப் உடன் எப்படி நெருக்கமானார்?

அமெரிக்க அரசியல் பற்றி பேசும்போது அதிலும் குறிப்பாக வர்த்தக கொள்கை பற்றி பேசும்போது நிச்சயம் பீட்டர் நவாரோவின் பெயர் இடம்பெறும். நவாரோ டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் மட்டுமல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் பொருளாதார திசையை தீர்மானிப்பதில் இவரின் கொள்கைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

பீட்டர் நவாரோ மாசசூசெட்ஸில் 1949ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்தார். டவ்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பயின்றார்.

பல ஆண்டுகளாக இவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார மற்றும் பொதுக்கொள்கை பிரிவின் பேராசிரியராக இருந்தார். இந்த காலகட்டத்தில் இவர் உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி, சீன பொருளாதார கொள்கைகள் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதுதான் நவரோ டிரம்பின் அணியில் சேர்க்கப்படுகிறார். ஜரேட் குஷ்னேரின் பரிந்துரையின்படி இவர் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப் இவரை வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கையின் இயக்குநராக நியமித்தார். அப்போது இருந்து இவர் 'அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்' (Buy American, Hire American) என்ற கொள்கையை முன்னிறுத்தினார்.

அமெரிக்க உற்பத்தியை பலப்படுத்தும் நோக்கில் புதிய உத்தியை கையாண்டார். மேலும் சீனா மீது கடுமையாக நடந்துகொண்டார். வரியை உயர்த்தியதிலும், வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையிலும் முக்கிய பங்கு வகித்தார்.

கேபிடல் ஹில்ஸில் நடந்த வன்முறையை விசாரிக்கும் காங்கிரஸ் குழுவின் முன் நவரோ ஆஜராகவில்லை. இந்த வழக்கில், அவர் காங்கிரஸை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல, 2025-ல் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய பிறகு அவர் மீண்டும் வர்த்தக ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் தொழில்துறையை மீட்டெடுக்கவும் உலகளவில் கடுமையான வர்த்தக கொள்கைகளை அமல்படுத்துவதிலும் டிரம்ப் மற்றும் நவரோ ஆதரவளித்து வருகின்றனர். இந்த நோக்கம் தான் நவாரோ, டிரம்பின் நம்பிக்கைக்குரிய பொருளாதார ஆலோசகராக இருக்கக் காரணம்.

சீனா மற்றும் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளில் அவரது கடுமையான நிலைப்பாடு டிரம்பின் 'America First' என்ற கொள்கையுடன் ஒத்துப்போகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு